பீகார்: இஸ்லாமிய வெறுப்பால் நிகழ்த்தப்பட்ட கும்பல் படுகொலை!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மக்கள் மத்தியில் எவ்வளவு குரூரமான மனநிலையையும் இஸ்லாமிய வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஹூசைனின் படுகொலை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. கை, கால்கள் உடைக்கப்பட்டு, காது மற்றும் விரல் நுனிகள் வெட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி துணி வியாபாரி முகமது அதர் ஹூசைனை (Mohammad Athar Hussain) ஒரு கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கிய நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி இரவு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். தாக்கியது மட்டுமல்லாமல் அவரிடம் இருந்த ₹18,000 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நவாடா மாவட்டம் பாரூய் கிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு மிதிவண்டியில் இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்த மிதிவண்டியைக் கொண்டுதான் அவர் வியாபாரம் செய்துவந்துள்ளார். அன்றைய இரவு அவரது வீட்டிற்கு வரும் வழியில் பட்டாபர் கிராமம் அருகில் திரும்பும் போது அங்கிருந்த கும்பலிடம் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை குறித்து விசாரித்துள்ளார்.

அக்கும்பல் இவரிடம் பெயர் மற்றும் தொழிலை விசாரித்துக் கொண்டு இஸ்லாமியர் எனத் தெரிந்து கொண்டு தாக்கத் தொடங்கியுள்ளது. அவரது காதுகளையும் விரல் நுனிகளையும் வெட்டியுள்ளது. சூடான இரும்புக் கம்பியைக் கொண்டும் அடித்துள்ளது என ஹுசைனின் சகோதரர் சாகிப் அலாம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு, ஒரு காணொளியில் ஹூசைன் தன் மீதான தாக்குதலின் கொடூரமான விவரங்களை விவரித்திருக்கிறார். தன்னைத் தாக்கியவர்கள் முதலில் தன் பெயரைக் கேட்டதாகவும், பின்னர் தன்னை மிதிவண்டியிலிருந்து கீழே தள்ளி பணத்தைப் பறித்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த கும்பலில் பதினைந்து முதல் இருபது பேர் இருந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஹூசைனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு ஒரு அறையில் அடைத்து வைத்துத் தாக்கியுள்ளதாக அவர் கூறியதிலிருந்து அறிய முடிகிறது.

“அவர்கள் என்னை செங்கற்கள் மற்றும் இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கினர். எனது விரல்களையும் கையையும் உடைத்து காதுகளையும் விரல்நுனியையும் வெட்டினர். அந்தக் கும்பல் என்னை நிர்வாணமாக்கி எனது பிறப்புறுப்புகளைச் சோதித்தது. சூடேற்றப்பட்ட இரும்பு கம்பியால் உடலில் சூடு வைத்ததில் தோல் உரிந்து விட்டது. ஒருவன் எனது மார்பின் மீது ஏறி மிதித்தும் கழுத்தை நெறிக்கவும் செய்ததில் எனது வாயிலிருந்து இரத்தம் கொட்டியது” என ஹூசைன் கூறினார்.

மிகவும் படுகாயங்களுடன் ஹூசைன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் டிசம்பர் 13 அன்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.


படிக்க: கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?


டிசம்பர் 6 ஆம் தேதி ஹூசைனின் மனைவி சப்னம் பர்வீன் அளித்த புகாரில், பட்டாபர் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பட்டாபர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனது கணவரை பொய்யான திருட்டு வழக்கில் பிடித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். சூடு போட்டும், கை கால்களை உடைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்” என பர்வீன் தெரிவித்தார். மேலும், பட்டாபர் கிராமத்திற்கு பர்வீன் தனது உறவினர்களுடன் சென்றபோது தங்களையும் கிராமத்தினர் இழிவுபடுத்தி பயமுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

“குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவர். இந்த தொழிலை அவர் 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை. என்ன தவறு நடந்தது; அவர் ஏன் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டார் என்பதைப் போலீசு விசாரிக்கவுள்ளது” என்று பர்வீன் தெரிவித்தார். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மக்கள் மத்தியில் எவ்வளவு குரூரமான மனநிலையையும் இஸ்லாமிய வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஹூசைனின் படுகொலை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. கை, கால்கள் உடைக்கப்பட்டு, காது மற்றும் விரல் நுனிகள் வெட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அக்லக் தொடங்கி ஹூசைன் வரை கும்பல் படுகொலை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


சையத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க