பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0

பாசிச மோடி அரசு சமீபத்தில் மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதா 2025 (draft Electricity Amendment Bill, 2025) மற்றும் விதைகள் வரைவு மசோதா 2025 (draft Seeds Bill 2025) ஆகிய இரண்டு வரைவு மசோதாக்களை வெளியிட்டது. விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு அதனை கார்ப்பரேட்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இம்மசோதாக்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

குறிப்பாக, அக்டோபர் 9-ஆம் தேதியன்று ஒன்றிய மின்சார அமைச்சகம் வெளியிட்ட மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதா, நாட்டின் அடித்தட்டு உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இதுநாள்வரை வழங்கப்பட்டு வருகின்ற குறைந்தபட்ச இலவச மின்சாரத்தை இரத்து செய்து, மின்சாரத்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதாக உள்ளது.

நவம்பர் 12-ஆம் தேதியன்று ஒன்றிய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட விதைகள் வரைவு மசோதா 2025, விதைகள் மீதான விவசாயிகளின் உரிமைகளை பறித்து விவசாயத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதாக உள்ளது. இது, அறுவடை செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், கடன் தொல்லையாலும் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளின் தற்கொலைகளை தீவிரப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய விவசாயத்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்து விடுகின்ற கொடூர திட்டமாகும்.

எனவே, விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக பாசிச மோடி அரசால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு வரைவு மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 5- ஆம் தேதியன்று , கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM) தலைமையின் கீழ் விவசாயிகள் மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதா 2025-க்கு எதிராக இரண்டு மணி நேரம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


படிக்க: மகாராஷ்டிரா: மூன்று மாதத்தில் 767 விவசாயிகள் ‘தற்’கொலை


அதேபோல், டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL – Punjab State Power Corporation Limited) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கிர்தி கிசான் யூனியன், கிசான் கமிட்டி டோபா, ஜம்ஹூரி கிசான் சபா, குல் ஹிந்த் கிசான் சபா மற்றும் பாரதிய கிசான் யூனியன் (ராஜேவால்) உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைமையின் கீழ் பல இடங்களிலும் மாநில மின்சார வாரிய அலுவலகங்களுக்கு வெளியிலும் போராட்டங்கள் நடைபெற்றன, ஊர்வலங்களை நடத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பியும் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

போராட்டத்தில் பேசிய விவசாயத் தலைவர்கள் கூறுகையில், “மின்சார திருத்த மசோதா, விதைகள் மசோதா விவசாயிகள் மற்றும் மக்கள் விரோதமானது. இது மின்சாரத்துறையை தனியார்மயமாக்கி, நுகர்வோரின் சுமையை அதிகரிக்கும்” என்று எச்சரித்தனர். “இது விவசாயிகளின் நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைப் போன்ற விதிகளை மீண்டும் கொண்டுவர முயல்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தைப் போன்று தமிழ்நாடு உள்ளிட்டு பல மாநிலங்களில் இவ்விரண்டு வரைவு மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி, வரைவு மசோதாக்களின் நகல் எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை ஒருங்கிணைக்கப்படுவதுடன், “டெல்லி சலோ” போராட்டத்தைப் போன்று மிகப்பெரிய போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மேலும், விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர இயக்கங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க