இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. சமீப ஆண்டுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டு வருகிறது. குளிர்காலத்தில் காற்று இடம்பெயர்வது மிக மிகக் குறைவு என்பதால் காற்று மாசுபாட்டின் தாக்கம் டெல்லியில் உச்சகட்டத்தில் உள்ளது.
காற்று மாசுபாடு அச்சுறுத்தலால், “அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவிகித பணியாளர்கள் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்” என அரசு உத்தரவிடும் அளவிற்கு, சூழல் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு டெல்லி அரசு தடை விதித்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இந்நிலையில், டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI – Air Quality Index) 400-ஐ கடந்துவிட்ட நிலையில், அங்கு கிராப் – 3 (GRAP – Graded Response Action Plan) கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது (காற்றுத் தரக் குறியீட்டின் அளவை பொறுத்து கிராப் கட்டுப்பாடுகளின் படிநிலைகள் மாறுபடும்).
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என கூறிக்கொண்டு, ஆளும் பா.ஜ.க. அரசு செயற்கை மழையை வரவழைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், நவம்பர் 26 அன்று, பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டெல்லியில் 37 சதவிகிதம் அளவிற்கு பி.எஸ்-3 (BS3 – Bharat Stage 3) வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதைக் குறைப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்துவது, மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது ஆகிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காற்று மாசுபாட்டுக்கான அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வு தேட முயற்சிக்காமல், அபாயகரமான இப்பிரச்சினையை தற்காலிக பிரச்சினை போல் அரசு கையாள்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேசமயம், பாசிச பா.ஜ.க. அரசோ, “பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசுபாடு ஏற்படுகிறது” என விவசாயிகள் மீது குற்றஞ்சுமத்தி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது.
ஆனால், இது காற்று மாசுபாட்டிற்கான முதன்மையான காரணமல்ல. மேலும், விவசாயிகள் பயிர் கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதற்கு அரசு எந்தவகையிலும் உதவிகரமாக இருப்பதில்லை என்பதே களநிலைமை.
டெல்லி காற்று மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், “அரசின் நடவடிக்கைகளில் பெரிய போதாமை இருக்கிறது. அதிகப்படியான வாகனப் பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், பெரும் குப்பை எரியூட்டுதல் போன்றவைதான் காற்று மாசுக்கான முதன்மையான காரணங்கள்” என்று கூறுகிறார்.
குறிப்பாக, வாகனப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் இருக்கும் அளவிற்கான வாகனங்கள் டெல்லியில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வெப்ப மின் நிலையங்கள், கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள், குப்பையை எரிக்கக்கூடிய உலைகள், சமீபத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை என காற்று மாசுபாட்டுக்கான காரணங்களை சுந்தர்ராஜன் வரிசைப்படுத்துகிறார்.
இதற்கான மாற்றாக, இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது, பொதுப் போக்குவரத்துக்கான சலுகைகளை வழங்குவது, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடுவது அல்லது ஊருக்கு வெளியில் அமைக்க உத்தரவிடுவது, நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பது, கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பது போன்றவற்றை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
ஆனால், டெல்லியில் இந்நிலைமை தலைகீழாக உள்ளது. டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றத்தின் மூலம் நீக்கியது. இதனால் டெல்லியில் தீபாவளி முடிந்த மறுநாள் காற்றின் தரக்குறியீடு 2,000-ஐ எட்டியது. அதாவது, 89 சிகரெட் புகைத்ததற்கு சமமான காற்று மாசுபாட்டின் அளவு இது. இந்தளவிற்கு மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நம்முடைய வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் குறையும். பாசிஸ்டுகளுக்கு மக்களின் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது என்பதற்கு மேற்கண்ட நிகழ்வே சிறந்த சான்று.
இந்நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிய பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து, கடந்த நவம்பர் 10 மற்றும் நவம்பர் 23 ஆகிய தேதிகளில், இதுவரை இல்லாத வகையிலான முன்னெடுப்பாக, டெல்லியின் இந்தியா கேட் பகுதியிலும், நகரின் மற்ற பகுதிகளிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் தாய்மார்களும் குழந்தைகளும் தங்களின் சுகாதாரமான சுவாச உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், காற்று மாசுபாட்டைத் தடுக்க வக்கற்ற பாசிச பா.ஜ.க. அரசு போராட்டக்காரர்கள் மீது போலீசின் மூலம் கொடூர அடக்குமுறையை ஏவியது.
இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் 15 இலட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று “இந்தியாவில் காலநிலை, சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாடு ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பு” (CHAIR-India – Consortium for Climate, Health and Air pollution Research in India) வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 82 சதவிகித மக்கள் (110 கோடி மக்கள்) உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் காற்று மாசுபாடானது, இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், நுரையீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மைக் கொண்டது. கர்ப்ப காலம் நிறைவடைவதற்கு முன்பே பிறக்கும் குழந்தைகளின் மரணத்திற்கு 60 சதவிகிதம் வரை காற்று மாசுபாடுதான் காரணம் என்று ஐ.சி.எம்.ஆர். (ICMR) ஆய்வு முடிவு கூறுகிறது. டெல்லியில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக 22 லட்சம் குழந்தைகள் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி மட்டுமல்ல, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான அளவு அதிகரித்து வருகிறது.
காற்று மாசுபாடு பிரச்சினை, இன்று, நேற்றைய பிரச்சினையல்ல. கடந்த பல பத்தாண்டுகளாக மக்களின் உயிரையும் இயற்கையையும் அச்சுறுத்திவரும் பிரச்சினையாகும். அதுமட்டுமல்ல, காற்று மாசுபாடானது புவி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, ஏற்படுகின்ற காலநிலை மாற்றப் பிரச்சினைகள் மக்களின் உயிரைத் தொடர்ச்சியாக காவு வாங்கி வருகின்றன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பெருவெள்ளப் பாதிப்புகள் இதற்கு துலக்கமான சான்றுகளாகும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில், கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தின் துணையோடு, இயற்கையும், சுற்றுச்சூழலும் கற்பனைக்கு எட்டாத வகையில் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாசிச பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதானி – அம்பானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் நலனுக்காகவும் சுற்றுச்சூழலை அழிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு எந்தவொரு கேள்வியுமின்றி அனுமதி அளித்து வருகிறது, அதற்கேற்ப சட்டங்களை திருத்தி வருகிறது.
புதைபடிவ எரிபொருளை வரைமுறையின்றி சுரண்டுவது, தொழிற்சாலைகள் மூலம் சுத்திகரிக்கப்படாத வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுவது, பெருமளவில் பெருகிவரும் தனியார் வாகனப் பயன்பாடு ஆகிய அம்சங்களில் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்கு எந்தவொரு பங்கமும் வராத வகையில்தான் அரசுகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் அபாயகரமான நிலையைத் தொடும்போது, மேம்போக்காக சில நடவடிக்கைகளை எடுப்பது போல் நடிக்கின்றன. ‘நீதி’மன்றங்களோ சில கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு தங்கள் ‘கடமையை’ முடித்துக் கொள்கின்றன.
தீர்வு என்ன ?
சுற்றுச்சூழலை நாசமாக்கும் தொழில்களை தடை செய்வது, தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது, இயற்கை வளக் கொள்ளையைத் தடை செய்வது, சுற்றுச்சூழலை அழிக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிப்பது என்ற கோரிக்கைகளை மையப்படுத்தி உழைக்கும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வையும், போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சிப் போக்கோடு, இயற்கைப் பேரழிவின் அடிப்படைக் காரணமாக உள்ள கார்ப்பரேட்மயமாக்கல் கொள்கைகளுக்கு மாற்றான, இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்களின் நல்வாழ்வை உத்தரவாதப்படுத்தும் மாற்று அரசியல் – பொருளாதாரக் கட்டமைப்பின் தேவைக்கான, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான விவாதங்களை பல்வேறு தளங்களில் தீவிரமாகத் தொடங்க வேண்டும். டெல்லி மாணவர்கள், உழைக்கும் மக்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் அதனை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
![]()
அய்யனார்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











