சாதி, மதம் கடந்து திருமணம்: பெண் குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல்

15 பேருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

0

ர்நாடக மாநிலம் பெங்களூருவின் நாகவாடாப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டேனியல் – கலையரசி. இவர்களது மகன் ராகுலும் அதே பகுதியைச் சேர்ந்த ராகாராவ் என்பவரின் மகள் கீர்த்தனாவும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். ராகுல் கிறிஸ்தவராகவும், வேறு சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்ததால் கீர்த்தனாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் தங்களின் திருமண விருப்பம் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளனர். கீர்த்தனாவின் பெற்றோர் ராகுலை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுலின் பெற்றோர் மகனின் விருப்பத்திற்காக திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராகுல், ராகுலின் பெற்றோர், மாமா பிரகாஷ் மற்றும் கீர்த்தனா அனைவரும் வேளாங்கண்ணிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள தேவாலயத்தில் வைத்து டிசம்பர் 10-ஆம் தேதியன்று ராகுலின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த கீர்த்தனாவின் குடும்பத்தினர் ராகுலின் பெற்றோரை போனில் அழைத்து, “நாங்கள் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறோம். நீங்கள் தங்கியுள்ள இடத்தின் முகவரியைச் சொல்லுங்கள். நாங்கள் வந்து பார்த்து விட்டு வருகிறோம்” என்று வஞ்சகத்தோடு கேட்டுள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பி ராகுலின் பெற்றோர் தாங்கள் தங்கியுள்ள தனியார் விடுதியின் முகவரியை அளித்துள்ளனர். இதனையடுத்து டிசம்பர் 11-ஆம் தேதியன்று 15 பேருடன் வந்த கீர்த்தனாவின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, கீர்த்தனாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நான்கு பேரும் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து நாகை போலீசு பெங்களூருக்கு மணப்பெண்ணுடன் தப்ப முயன்ற பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட ஒன்பது பேரைக் கைது செய்துள்ளது.

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! | தோழர் அமிர்தா


இதேபோல், கடந்த நவம்பர் 27-ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் (Nanded) மாவட்டத்தில் தன்னுடைய தங்கை காதலித்த தனது நண்பன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சாதிவெறி தலைக்கேறி, தன் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைப் போன்று தமிழ்நாடு உள்ளிட்டு நாடு முழுவதும் சாதி, மதம், வர்க்கம் கடந்து காதலிப்பவர்கள் சாதி வெறியர்களால் ஆணவப் படுகொலை செய்யப்படுவதும், கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மக்களை சாதி, மத ரீதியாக முனைவாக்கம் செய்து மோதவிடும் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவல் உள்ள பகுதிகளில் இத்தகைய கொலை வெறியாட்டங்கள் அதிகளவில் நடக்கின்றன.

எனவே சாதி, மதம் கடந்து காதலிப்பதற்குத் தடையாக உள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; ஆதிக்க சாதிவெறி கும்பல்களுக்கு எதிரான மாற்று பண்பாடு – கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான போராட்டங்களை அரசியல் – பண்பாட்டுத் தளங்களிலும் முன்னெடுக்க வேண்டும். இதற்கு புரட்சிகர – ஜனநாயக சக்திகள் ஆதரவளிக்க வேண்டும்.

சாதி, மதம், வர்க்கம் கடந்து காதலிக்க, மனம் முடிக்க வேண்டும் ஜனநாயகம் என்று முழங்க வேண்டும்!


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க