மகாராஷ்டிரா: கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்ற விவசாயி

ரோஷனிடம் தினமும் ₹10,000 வட்டி என்ற மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர் கந்துவட்டி கொள்ளையர்கள். வாங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கு அநியாய வட்டி போட்டு 74 லட்சம் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக் கும்பல் ரோஷனை மிரட்டி வந்துள்ளது.

0

பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கந்து வட்டிக் கொடுமையால் விவசாயி ரோஷன் சதாசிங் குடே தன்னுடைய கிட்னியை விற்றுள்ளார். இச்சம்பவம் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி ரோஷன் சதாசிங் குடே சந்திரபூர் மாவட்டம் நாக்பிட் வட்டத்திற்கு உட்பட்ட மின்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக பெய்த தொடர் மழையால் விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக 2021 ஆம் ஆண்டு பால் பண்ணை தொடங்கலாம் என்று திட்டமிட்டு கந்துவட்டிக் கொள்ளையர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி கறவை மாடுகளை வாங்கியுள்ளார். ஆனால் சிறிது காலத்தில் மாடுகள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டன. அதற்கும் கடன் வாங்கிதான் மருத்துவம் பார்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாடுகள் இறந்துவிட்டன.

அதன் பின்னர் தன்னுடைய குடும்பத்தை நடத்துவதற்கே பரிதவித்துக் கொண்டிருந்த ரோஷனிடம் தினமும் ₹10,000 வட்டி என்ற மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர் கந்துவட்டி கொள்ளையர்கள். வாங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கு அநியாய வட்டி போட்டு 74 லட்சம் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக் கும்பல் ரோஷனை மிரட்டி வந்துள்ளது.

வேறு வழியின்றி ரோஷன் தனது 2 ஏக்கர் நிலம், டிராக்டர், இரண்டு இருசக்கர வாகனங்கள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை விற்றுள்ளார். ஆனால் பணவெறி பிடித்த அக்கும்பல் வட்டிக்கு மட்டுமே அது சரியாகிப் போனதாகத் தெரிவித்துள்ளது. மேலும் கந்துவட்டி கொடுத்தவனே கிட்னியை விற்று கடனை அடைக்கும்படி கூறியிருக்கிறான். கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்த ரோஷனும் வேறு வழியின்றி 2024- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முகவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்குச் சென்றுள்ளார்.


படிக்க: மகாராஷ்டிரா: மூன்று மாதத்தில் 767 விவசாயிகள் ‘தற்’கொலை


அங்கு சட்டவிரோத மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு ரோஷன் கம்போடியா நாட்டிற்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை ரூ. 8 லட்சத்திற்கு விற்று கந்துவட்டிக் கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் முழுமையாகக் கடனை அடைக்க முடியாததால் கந்துவட்டிக்காரர்கள் கடனைக் கேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் ரோஷன் பிரம்மபுரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசு கிஷோர் பவன்குலே, பிரதீப் பவன்குலே, சஞ்சய் பல்லார்புரே, லட்சுமணன் ஊர்குடே, மணீஷ் கட்பந்தே மற்றும் சத்யவன் போர்கர் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிராவில் ஏற்படும் கடும் மழை, அதீத வெப்பத்தால் விவசாயிகள் ஒரு போக விவசாயத்தைக் கூட மேற்கொள்ள முடியாத அவல நிலையில் உள்ளனர். இதனால் விவசாயத்திற்கு வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் கந்துவட்டிக் கொள்ளையர்களிடம் வட்டிக்கு வாங்கித்தான் தங்களுடைய வாழ்கையை நகர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்கிற கொள்ளைக் கும்பலும் அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது.

கடந்த 9 மாதங்களில் மகாராஷ்டிரா முழுவதும் கந்துவட்டி கொடுமையால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிரோடு இருக்கும் விவசாயிகள் ரோஷன் போன்று சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை விற்று தங்களது கடன்களைக் கட்டி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

மாநிலத்திலும் ஒன்றியத்திலும் ஆட்சியில் உள்ள பாசிச கும்பல் கடன் நெருக்கடியால் பாதிக்கப்படும் அம்பானி, அதானிகளைக் காப்பாற்றுவதற்காக எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கும். ஆனால் கந்துவட்டிக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமலும், கடன் தொல்லையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான எந்தவித நிவாரணமும் வழங்காமலும் பாசிச மனநிலையுடன் விவசாயிகளும், மக்களும் செத்து மடிவதைக் குரூரத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பாசிச கும்பல் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தின் இரட்டை நீதி.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க