
21.12.2025
தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குளறுபடியை
உடனடியாக சரி செய்!
பத்திரிகைச் செய்தி
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் செயல்படுகின்றன. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இதுவும் ஒன்று. மேலும், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு!
இத்தகைய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடு விழா காணும் நிலையை நோக்கி ஆலை நிர்வாகம் நகர்த்திக் கொண்டிருப்பது தற்போதைய அவல நிலையாக உள்ளது.
2025 – 2026 ஆம் ஆண்டின் கரும்பு அரவைப் பருவத்தில் 2,200 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள 52 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யத் திட்டமிடப்பட்டு அரவைப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆலையின் சாகுபடி பரப்பில் வெறும் முப்பதாயிரம் டன் கரும்பு மட்டுமே உள்ளது. நாளொன்றுக்கு ஆலையில் 1,800 டன் கரும்பு அரவை செய்யப்படும் என்பதால் இந்த அளவைக் கொண்டு ஓரிரு வாரங்கள்தான் ஆலை இயங்க முடியும்.
போதிய அளவில் கரும்பு இல்லாமல் ஆரவையைத் தொடங்கினால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி வரை நஷ்டம் ஏற்படும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாலையில் இயங்கி வரும் 12 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் இதுவரை மூன்று கோடியே 84 லட்சத்து 23 ஆயிரத்து 13 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ஆலை பயன்பாட்டுக்கு ஒரு கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 990 யூனிட் எடுக்கப்பட்டுள்ளது.
மீதும் ஒரு கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 200 யூனிட் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாலையின் செயல் திறன் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பை அரவை செய்ய முடியும். ஆனால் வெறும் ஐம்பதாயிரம் டன்னுக்கு குறைவான அளவிலே தற்போது கரும்பு அரவை மேற்கொள்ளப்பட்டு இவ்வாலையை மூடு விழா காணும் நிலை நோக்கி நகர்த்தப்படுகிறது. இந்த அவல நிலையைத் தடுக்கக் கோரியும், அவ்வாறு ஆலையை மூடினால் தொடர்ந்து போராடப் போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆலையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் (தொழிலாளர்கள், விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள்) பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது வாழ்வாதாரமும் தற்போது பாதிப்படைந்துள்ளது.
டிசம்பர் 18 அன்று “ஆலையை மூடாதே, செயலற்ற நிர்வாகமே பதவி விலகு” என முழக்கமிட்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழ்நாடு அரசு நேரடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து ஆலை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
அதே சமயத்தில் தொழிலாளர்கள் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகர வேண்டும். மேலும் ஆலை நிர்வாகத்தின் குளறுபடியால் நஷ்டம் ஏற்பட்டு ஆலை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டால் தொழிலாளர்களின் தலைமைக் குழு ஆலை தொடர்ந்து செயல்பட நிர்வாகத்தை ஏற்று நடத்தும் வகையிலான அதிகாரம் தொழிலாளர்களுக்கு வேண்டும். “வேண்டும் ஜனநாயகம்” என முழங்குவோம்.
தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குளறுபடியை
உடனடியாக சரி செய்!
கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குத் தேவையான கரும்பை
விவசாயிகளை அணுகி பதிவு செய்ய நடவடிக்கை எடு!
கரும்பு விவசாயிகள் அதிக அளவு உற்பத்தி செய்யும் சாகுபடி பரப்பை
அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடு!
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயங்கும் இயந்திர கோளாறுகளை
உடனடியாக சரி செய்!
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விதிகளை மீறிச் செயல்படும்
நிர்வாக அதிகாரிகளின் பணியை ரத்து செய்!
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின்
பணியை உறுதி செய்!
![]()
இவண்
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
87546 74757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





