மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தோழர்களின் நினைவைநெஞ்சில் ஏந்துவோம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள கிளை இணைப்பு சங்கங்களில் ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆலைவாயில் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் ம. சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், “தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையை படுதீவிரமாக இந்த அரசு அமல்படுத்தி வருகிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. தொழிலாளர் நலசட்டங்களை முதலாளிக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டு வருகிறது. இதை தோழர்கள் வழியில் எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட குழு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைச் செயலாளர் தோழர் து. லெட்சுமணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது 23 வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தை நடத்தி தூக்கிலிடப்பட்டார். ஆனால் இன்றோ பன்னாட்டு தரகு முதலாளிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது. அப்போதைவிட இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும் தேவையும் மிக அதிகமாக உள்ளது. ரஷ்யா உக்ரைன் ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய போர் உள்ளிட்ட எந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளையும், உழைப்புச் சுரண்டலையும் தோழர்கள் வழியில் முறியடிப்போம்! தொழிலாளர்கள் வர்க்கமாக அணிதிரள்வோம்! வாருங்கள் தோழர்களே! என்று தனது சிறப்பு உரையை நிறைவு செய்தார்.
கூட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் விண்ணெதிர தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ப.சக்திவேல் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
தகவல்:
டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
(இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி)
***
மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் 91- வது நினைவு நாளை ஒட்டி, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அம்பேத்கர் திடல் அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் இணைந்து 23.03.2022 அன்று நிகழ்ச்சிகள் நடத்தினர். பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஏன் இன்று பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு அவர்களை நினைவை நாம் போற்ற வேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் எந்த பாதையை நோக்கி வர வேண்டும் என்கிற வகையில் அந்த வீரன் இன்னும் சாகவில்லை என்ற பாடலை தோழர் காமராஜ் அவர்கள் பாடினார்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் துணைவேந்தன் தனது உரையில், “அன்று பகத்சிங் சுகதேவ் ராஜகுரு ஆகியோரும் அவர்களின் நண்பர்களும் பெருவாரியான மாணவர் இளைஞர்களை வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணி திரட்டினர். பெயரளவிலான சுதந்திரம் வேண்டாம் ! முழு சுதந்திரம் வேண்டும் ! இந்திய நாட்டை ஒரு சோசலிச நாடாக மாற்ற வேண்டும், அதற்கு முதல் எதிரிகளான வெள்ளை ஏகாதிபத்தியத்தையும், அவர்களது கைக்கூலிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தமது நோக்கத்திற்கு ஏற்ப மாணவர்கள் இளைஞர்களை அணி திரட்டினார். இன்று அத்தகைய மாணவர்கள் இளைஞர்கள் ஆபாசம் இணையதளம், கஞ்சா போன்ற போதை பொருட்களால் சீரழிவு கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு திசைமாறி செல்கின்றனர். ஆனால் மறுபுறம் இந்த நாடும் நாட்டு மக்களும் சொல்லொணா துயரத்தில் ஆட்பட்டு வருகிறார்கள். இதேபோல் கார்ப்பரேட் கொள்ளைக்கான வேட்டைக்காடாக இந்த நாட்டை மாற்றி வருகிறது காவி கும்பல். இதற்கு எதிராக மாணவர்கள் இளைஞர்களை மீண்டும் பகத்சிங் பாதையில் அணிதிரட்டி இந்திய நாட்டின் விடுதலைக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் போராட வைக்க வேண்டும்.” இந்த கடமையை பகத்சிங் நம்மீது ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார் என்பதை வலியுறுத்தி உணர்வு ஊட்டும் விதமாக பேசினார்.
தகவல்:
பு.மா.இ.மு,
தமிழ்நாடு.
***
மார்ச்- 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளை ஒட்டி பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேனர் வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார செயலாளர் தோழர் அருண் முழக்கங்களை எழுப்பினார். வட்டார துணை செயலாளர் தோழர் சிவா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம் – 6384569228.