“ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றச் சட்டக் கட்டமைப்பு உடன்படிக்கை” (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) சார்பாக ஆண்டுதோறும் காப் (COP – Confrence of the Parties) மாநாடு நடத்தப்படுகிறது. இந்தாண்டு காப் 30 (COP 30) மாநாடு அமேசான் மழைக்காடுகள் இருக்கும் பிரேசிலில் உள்ள பெலம் (Belem) நகரில் நவம்பர் 10 முதல் நவம்பர் 21 வரை நடைபெற்றது.
பிரேசிலின் அமைச்சர் ஆண்ட்ரே கொர்ரியா டு லாகோ, காப் 30 மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இந்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், ஐரோப்பிய கமிஷன் தலைவர், சீனப் பிரதிநிதிகள், அமெரிக்கப் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மேலும், பிரேசிலின் பழங்குடி மக்கள் அமைச்சர் சோனியா குவாஜஜாரா, பிரேசில் பூர்வகுடி தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அதேசமயம், காப் 30 மாநாட்டை எதிர்த்து, “எங்கள் காடுகள் விற்பனைக்கு அல்ல” என்ற பதாகைகளை ஏந்தி, பெலமில் மாநாடு நடைபெறும் இடத்தின் நுழைவாயிலுக்கு அருகில், ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமான புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பதற்கான புதிய உரிமங்களை பிரேசில் அரசு கார்ப்பரேட்டுகளுக்கு தொடர்ந்து வழங்கி வருவதும் இப்போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும். ஒரு பக்கம் சொந்த நாட்டின் இயற்கை வளங்களையும் அமேசான் காடுகளையும் அழித்துக் கொண்டு, மறுபக்கம் காலநிலை மாற்றத்தை தடுப்பது என்ற பெயரில் காப் 30 மாநாட்டை பிரேசில் நடத்துவது எவ்வளவு வக்கிரமான, கேலிக்கூத்தான நிகழ்வு என்பதை மக்கள் போராட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டின.
குறிப்பாக, முண்டுருகு, குரானி, கயாபோ, பங்காராரு, துபினாம்பா, டக்ஸா உள்ளிட்ட பல்வேறு பூர்வகுடி சமூகத்தை சார்ந்த மக்களும் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பெரியளவில் பங்கேற்றனர். துபினாம்பா பூர்வகுடி சமூகத்தைச் சேர்ந்த தலைவர் கில்மர், “நாங்கள் பணத்தை சாப்பிட முடியாது” என்றும், மழைக்காடுகளின் அழிவு குறித்து தாங்கள் கவலைப்படுவதாகவும் கூறி பிரேசில் அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
“பூர்வீக மக்களின் காப்” என்று இம்மாநாட்டிற்கு ஏகாதிபத்தியங்களும், பிரேசில் அரசும் நயவஞ்சகமாக பெயர் சூட்டிக் கொண்டாலும், உண்மை அதற்கெதிரானதாக இருப்பதை பூர்வகுடி மக்களின் போராட்டங்கள் உணர்த்திவிட்டன.
காப் 30 மாநாடு, கேலிக்கூத்தான நிகழ்வாகவே முடிவடைந்துள்ளது என்பதற்கு காப் 30 மாநாட்டின் தலைவர் ஆண்ட்ரே கொர்ரியா டு லாகோவின் கீழ்க்கண்ட கூற்றே சிறந்த சான்றாகும். “மாநாட்டில் புதிய வாக்குறுதிகளை அறிவிப்பதை விட ஏற்கெனவே உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள தீர்வுகளையும், ஒப்பந்தங்களையும் அமல்படுத்துவதற்கு கவனம் கொடுக்க வேண்டும், ஒரு ஒப்பந்தத்தை எழுதுவது மிகவும் கடினம். ஆனால், அதே ஒப்பந்தத்தை பயன்படுத்திச் செயல்படுத்துவதுதான் முக்கியமானது. இந்த ஆண்டில் நாம் உருவாக்கும் உரையை வைத்துச் செயல்பட முயற்சி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.
அதாவது, காப் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் முன்மொழிவுகளையும் அதில் பங்கேற்கும் நாடுகள் துரும்பளவிற்கு கூட கடைப்பிடிப்பது கிடையாது என்பதையே காப் 30-இன் தலைவர் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார்.
சான்றாக, 2023-ஆம் ஆண்டில் நடந்த காப் 28 மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டிலிருந்து ‘படிப்படியாக’ மாறி செல்வதற்கான ஒப்பந்தம் முதன்முறையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், 2024-இல் அஜர்பைஜான் நாட்டில் நடந்த காப் 29 மாநாட்டில், வளர்ந்த நாடுகள் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போது, எண்ணெய் ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்டுள்ள அஜர்பைஜான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் எண்ணெய் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தன.
இந்தாண்டும் (காப் 30) சவுதி அரேபியா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகுவது பற்றிய குறிப்புகள் கூட ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. அதேபோல், காடழிப்பை தடுத்து நிறுத்துவதற்கான உறுதிமொழியும் இடம்பெறவில்லை.
இவையெல்லாம், கடந்த காலத்திய காப் மாநாடுகள் எந்தளவிற்கு கேலிக்கூத்தானவை என்பதையும், முந்தைய மாநாடுகளை போல காப் 30 மாநாடும் முதலாளித்துவவாதிகளின் அரட்டைமடமாகவே இருந்துள்ளது என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
ஏகாதிபத்திய நாடுகள் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் தங்களின் இலாபவெறிக்காக சூறையாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, உலகம் இன்று காலநிலை மாற்றம் என்ற சூழலியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, ஏகாதிபத்தியங்களின் இயற்கைவளச் சூறையாடல், சுற்றுச்சூழல் அபாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து உலகம் முழுக்க மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் தங்களின் இயற்கை, சுற்றுச்சூழல் அழிப்புக் குற்றச் செயலை மறைத்துக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் நடத்தும் நாடகமே காப் மாநாடுகள் ஆகும். இதற்கு முந்தைய மாநாடுகளில், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், முன்மொழிவுகள் எதையும் அவை நடைமுறைப்படுத்துவது கிடையாது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் ட்ரம்ப் ஒருபடி மேலே சென்று, காலநிலை மாற்றம் என்பதே அறிவியலுக்குப் புறம்பானது, மோசடி என்று கூறுகிறார். இக்கூற்று உலகை எத்தகைய அபாயத்துக்குள் தள்ளிவிடும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், 125-க்கும் மேற்பட்ட அமெரிக்க சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் கொள்கைகள் திரும்பப் பெறப்பட்டன. அமெரிக்காவின் முதன்மையான காலநிலை அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிறுவனம் (NOAA) நடத்தும் அனைத்து காலநிலை ஆராய்ச்சிகளையும் முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் நிர்வாகம் முயல்வதாக “சயின்ஸ்” (Science) இதழ் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது.
இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் தங்களது அரசியல், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க சுற்றுச்சூழல் பேரழிவை உருவாக்கும் திட்டங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. அதிலும், பாசிச கட்சிகள் அல்லது அதன் ஆதரவு பெற்ற ஆட்சி நடைபெறும் நாடுகளில் சுற்றுச்சூழல் பேரழிவுக்கான நடைமுறைகள் துரிதப்படுத்தப்படுகின்றன. உக்ரைன் – ரசியப் போரினால் ஜெர்மனியில் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ளது; இதனை ஈடுகட்ட, தற்போது ஆட்சியில் இருக்கும் வலதுசாரிகள் உள்ளடங்கிய “டிராஃபிக் லைட்” கூட்டணி அரசானது, மாற்றுத் திட்டம் என்ற பெயரில் சுற்றுச்சூழல் பேரழிவிற்கு பாதை வகுக்கும் வகையில், “புவிவெப்ப முடுக்கச் சட்டத்தை” கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் எளிமைப்படுத்தியிருப்பது இதற்கு சான்றாகும்.
இந்தியாவில் பாசிச மோடி தலைமையிலான அரசு, ஏகாதிபத்தியக் கும்பல்களின் நலனுக்காகவும், அதானி – அம்பானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காகவும் கனிமவளச் சூறையாடலை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மத்திய இந்தியாவின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்ப்பதற்காக, கனிமவளச் சூறையாடலுக்கு எதிராக போராடும் பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகளையும் “ஆபரேசன் ககர்” என்ற பெயரில் படுகொலை செய்து வருகிறது. அதானி, அம்பானி, அகர்வால் கும்பலின் நலனுக்காக நாடு முழுக்கவே பல்வேறு இயற்கைப் பேரழிவுத் திட்டங்களை பாசிச மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவுகள் நம் கண்முன்னே சான்றுகளாக விரிகின்றன.
மேலும், தற்போதைய உலக நிலைமையானது, வேறொரு அம்சத்தை முதன்மைப்படுத்திக் காட்டுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய பாசிச கும்பல்கள் பெயரளவிற்கான, போலித்தனமான இயற்கைப் பாதுகாப்பு என்ற முகமூடியைக் கூட அணிந்துகொள்ளத் தயாராக இல்லை. குறிப்பிட்ட நிதிமூலதன கும்பல்களின் இலாபவெறிக்காக, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளையை நியாயப்படுத்தும் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய கும்பல்களுக்கு மக்களின் உயிரைப் பற்றியோ, இப்புவிக்கோளம் அழிவதைப் பற்றியோ துளியும் கவலை கிடையாது. காப் 30 மாநாடு இத்துணை கேலிக்கூத்தாக முடிந்ததற்கு இந்த அம்சம் முக்கிய காரணமாகும்.
எனவே, இப்புவியைக் காப்பாற்ற வேண்டுமெனில், ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பல்களின் சூறையாடலுக்கு அரணாக நிற்கும், பாசிச சக்திகளை உடனடியாக வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது.
![]()
தமிழன்பன்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









