உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் டிசம்பர் 23 அன்று நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் டிசம்பர் 24 அன்று தெரிவித்திருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 29 அன்று டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு வயது 17) முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். அத்துடன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உன்னாவ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் தந்தையை 2018 ஆம் ஆண்டு செங்கரின் ஆதரவாளர்கள் அடித்துக் கொன்றனர்.
இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துடன் தொடர்புள்ள பிற வழக்குகளை உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றி 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் செங்கருக்கு 2019 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் செங்கர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டெல்லி விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக டிசம்பர் 23 அன்று அறிவித்தது. அத்துடன் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
ஆனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழந்த வழக்கில் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
இது குறித்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் டிசம்பர் 24 அன்று கூறியதாவது, “எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் முடிவு எனது அச்சத்தினை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீர்ப்பு எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய தாயின் காணொளி ஒன்றை பெண்ணுரிமை ஆர்வலர் யோகிதா பயானா எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அந்த காணொளியில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது, “உன்னாவ் வழக்கு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து டெல்லியில் எனது வழக்குரைஞரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது மத்திய ரிசர்வ் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எஃப்) என்னைத் தடுத்து நிறுத்தி வீட்டுக்கு அனுப்ப முயன்றனர். அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்ட பின் வழக்குரைஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டேன். டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட எனது தாயை போலீசார் இழுத்துச் சென்று சாலைக்கு நடுவில் தள்ளினர்” என்று குற்றம் சாட்டினார்.
ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பா.ஜ.க-வை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், பிரமுகர்கள் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். பெண்களின் பாதுகாவலர், சௌகிதார் என்றெல்லாம் வெற்று வாய்ச்சவடால் அடித்துக்கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றனர்.
நீதித்துறையும் இந்த பாலியல் பொறுக்கிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, நீதிமன்றங்களில் ஆர்.எஸ்.எஸ் நீதிபதிகளை நியமித்து சில வழக்குகளில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பினை வழங்கிக் கொள்கின்றனர். நியாயம் வேண்டி போராடும் மக்களை அடாவடித்தனமாக ஒடுக்குகிறது போலீசு.
குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் நீதித்துறை மற்றும் போலீசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியதாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தும் பா.ஜ.க அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் நாடெங்கிலும் கட்டியமைக்க வேண்டும்.
![]()
அசுரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










