கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டச் சேர்ந்த 17 வயது சிறுமியை முன்னாள் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கார் என்கிற பாலியல் பொறுக்கி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு குல்தீப் சிங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த வழக்கிலிருந்து பின்வாங்குமாறு சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சிறுமியின் தந்தை பொய்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு போலீசு நிலையத்தில் கொட்டடி கொலை செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு காரில் சென்ற சிறுமியை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றது சிங்கார் கும்பல். இதில் சிறுமியின் உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இவ்வாறு, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே குல்தீப் சிங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால், தண்டனைக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கடந்த நவம்பர் 23 ஆம் தேதி ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு மட்டுமல்லாமல் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் டெல்லி இந்தியா கேட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோர், சி.பி.ஐ தரப்பில் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று டிசம்பர் 29 ஆம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மற்றொரு செய்தி, உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று ஆரவல்லி மலைத்தொடராகும். டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆரவல்லி மலைத்தொடர் பரவிக் கிடக்கிறது. ஆரவல்லி மலைத்தொடர் சூழ்ந்துள்ள பகுதிகள் பாலைவனமாக மாறுவதைத் தடுப்பதிலும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதிலும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. நான்கு புலிகள் காப்பகம், இருபத்திரண்டு வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்த மலைத்தொடரில் உள்ளன.
ஆரவல்லி மலைத்தொடரை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்கிற கெடு நோக்கத்தோடு ஒன்றிய மோடி அரசு, ஆரவல்லி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் எவை என்று வரையறை செய்வதற்குக் குழு ஒன்றை அமைத்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகளை மட்டுமே ஆரவல்லி மலை என அங்கீகரிக்க முடியும் எனவும் 500 மீட்டருக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகள் அமைந்திருந்தால் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடர் என அழைக்க முடியும் எனவும் விளக்கமளித்தது. இதனை அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த வரையறையின் படி பெரும்பாலான மலைகள் மலைகளாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. தொண்ணூறு சதவிகித ஆரவல்லி மலைகள் அழியும் நிலையில் உள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இந்த வரையறை சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் வெடித்தது. குருகிராம், உதய்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளூர் மக்கள், விவசாயிகள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும் பங்கெடுத்துக் கொண்டனர். குறிப்பாக, இதில் இன்றைய இளம் தலைமுறையினர் முன்னணியிலிருந்தனர். “சேவ் ஆரவல்லி” என்கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியது.
இந்த போராட்ட நெருக்கடி காரணமாக கடந்த 29 ஆம் தேதி மீண்டும் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது. மேலும், ஒன்றிய அரசின் பரிந்துரைகள், சுரங்கப் பணிகளுக்குத் தடை விதித்தும் ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை குறித்தும் ஆராய புதிய குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த இரண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உணர்த்தும் உண்மை என்ன?
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் பரவி வியாபித்து உள்ளது. இதில் அவர்கள் எழுதுவதே தீர்ப்பாகும். அதில், குல்தீப் சிங்கார் போன்ற பாலியல் பொறுக்கிகளை விடுவிக்கவும் முடியும், உமர் காலித் போன்ற சமூக செயற்பாட்டாளர்களை விசாரிக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கவும் முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் தனது அம்பானி, அதானிகளுக்கு தாரைவார்க்கச் சட்டங்களைத் திருத்துவது, மாவோயிஸ்ட் என பொய் குற்றம் சாட்டி திட்டங்களுக்கு எதிரானவர்களை வேட்டையாடுவது, காஷ்மீரில் புதிய புதிய இராணுவ முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது என மோடி கும்பல் செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற பாசிச நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டங்களே தீர்வாகும் என்பதையே மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன.
![]()
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











