மணமக்களான ரவி என்கிற செல்வகணேஷ் – ராதிகா ஆகிய இருவரும் அனைத்து நலமும் வளமும் பெற்று குழந்தை செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்க, நீடூழி வாழ்க என்று மனமார வாழ்த்துகிறேன். அவர்களை போலவே இம்மேடையில் திருமணம் செய்துகொண்ட கிறிஸ்டோபர் – விஜி ஆகியோரும் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க என்று நெஞ்சார வாழ்த்துவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மணமக்கள் ரவி என்கிற செல்வகணேஷ் – ராதிகா ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்று இல்லற வாழ்வை தொடங்கி இருக்கிறார்கள். அத்துடன், மறுமணம் என்கிற இன்னொரு சிறப்பும் இத்திருமணத்திற்கு உண்டு. ராதிகா ஏற்கெனவே திருமணம் ஆனவர், ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகவும் இருப்பவர். என்றாலும், அவர் இந்த இளம் வயதில் மீண்டும் ஒரு இல்லற வாழ்வை பெறுவதற்கு முழுமையான தகுதி பெற்றவர் என்கிற நிலையில், இருவரும் மனம் ஒத்து, மிகுந்த மகிழ்ச்சியோடு, தோழர்களின் நல்வாழ்த்துகளோடு, தமது இல்லற வாழ்வை தொடங்க முடிவெடுத்து அதனடிப்படையில் இம்மணவிழா வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது.
சாதியை மறுப்பதும், மறுமணம் ஏற்பதும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எண்ணிக்கூட பார்க்க முடியாதது; ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழ் சமூகத்தில் கடினமான செயல்; 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டங்களை நடத்தித்தான் இதை சாதித்திருக்க முடியும். ஆனால், இன்றைக்கு பலரும் வாழ்த்தக்கூடிய வகையில் பொதுவெளியில் ஊரறிய ஒரு அரங்கில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து இந்த சமூக சூழல் ஒரு நெகிழ்வுத்தன்மையை பெற்றிருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனாலும் கூட சில இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்தது என்று தம்பி செல்வகணேஷ் என்னிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இந்த மறுதளிப்புகள், எதிர்ப்புகள், இடர்கள், நெருக்கடிகள் இத்தகைய செயல்களுக்கு இருக்கவே செய்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனாலும், இத்திருமணத்திற்கு திருமாவளவன் வரவேண்டும், முருகவேள் ராஜன் வர வேண்டும், இதர முற்போக்கு சக்திகள் எல்லாம் பங்கேற்க வேண்டும் என்று ஒரு வெளிப்படையான முடிவை எடுத்து அதற்கேற்ப நாள் குறித்து அதனடிப்படையில் இந்நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதுதான் நமக்கு கூடுதல் மகிழ்ச்சியை, பெருமையை தருகிறது.
முதலில் இத்திருமணத்தை உளவியலாக ஏற்றுக்கொண்டவர் ரவி என்கிற செல்வகணேஷ்தான். இத்திருமணம் சாதி மறுப்பு திருமணம்தான், நான் இதற்கு உடன்படுகிறேன், விரும்புகிறேன் என்று அவர் இத்திருமணத்திற்கு மனதளவில் உடன்பட்டார். இதற்கு அவரது அரசியல் ஈடுபாடும் அதில் ஏற்பட்ட புரிதலும் அதனால் அவருக்கு கிட்டியிருக்கின்ற முதிர்ச்சியும்தான் காரணம்.
இந்த இயக்கத்தில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். அவர் 7-8 ஆண்டுகளாக இருக்கிறேன், கல்லூரி மாணவனாக இருக்கும் போது இவ்வியக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது என்று சொன்னார். இந்த இயக்கம் அவருக்கு இந்த புரிதலை, துணிச்சலை தந்திருக்கிறது. ஆகவேதான், ஒரு சாதி மறுப்பு திருமணத்திற்கு, மறுமணத்திற்கு உடன்படக்கூடிய பக்குவம் அவரிடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
ஒருவேளை ரவி செல்வகணேஷ் ஒரு சாதி சங்கத்தில் ஈடுபாடு உள்ளவராகவோ அல்லது ஒரு மதவாத அமைப்பிலே தொடர்பு உள்ளவராகவோ அல்லது பா.ஜ.க. மாதிரியான ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்திருந்தாலோ இவர் இதற்கு உடன்பட்டிருப்பாரா என்றால், நூறு விழுக்காடு உடன்பட்டிருக்க மாட்டார். “அது எப்படி? நீ வேறு சாதி. ஏற்கெனவே உனக்கு கல்யாணம் வேறு ஆகிவிட்டது. ஏதோ பேசினோம் பழகினோம், அதோடு நாம் பிரிந்துவிடுவோம்” என்றுதான் அவர் சொல்லியிருக்க முடியும்.
ஆனால், அவ்வாறு இல்லாமல் இருவரும் இணைந்து வாழ்வோம், இல்லற வாழ்வை ஏற்போம் என்று முடிவெடுக்கும் அளவிற்கு செல்வகணேஷிற்கு ஒரு முதிர்ச்சி கிடைத்து இருக்கிறதென்றால், அதற்கு அவர் உள்வாங்கிய அரசியல்தான் காரணம். அந்த புரட்சிகர பண்பாட்டு கூறுகள் அவருக்குள்ளே உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் காரணம்.
ஆம், வலதுசாரி அரசியல் அவரை இதற்கு அனுமதித்திருக்காது, இடதுசாரி அரசியல் அவரை இதற்கு பக்குவப்படுத்தி இருக்கிறது. இதுதான் காரணம்.
மேலும், வெற்றிவேல்செழியன் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் அனைவரும் உற்ற துணையாக இருந்து, இதை நாம் ஒரு வெளிப்படையான நிகழ்வாக நடத்தி, ஒரு கொண்டாட்டமாக மேற்கொள்வோம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
அதற்கு காரணம், ஒரு ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பெண்ணை நாங்கள் திருமணம் செய்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளும் முயற்சியல்ல. இதுவெல்லாம் இங்கு நடைபெறாது என்கிற இறுக்கமானதொரு சமூக சூழல் இருக்கின்ற நிலையில், அதனை தகர்க்கிறோம், அதனை மீறுகிறோம் என்பதை காட்டிக்கொள்வதற்கான முயற்சி. அடங்க மறு என்பதற்கு இதுதான் பொருள். உன்னை அடக்கி வைக்கும் இந்த சமூக – சாதி – சனாதன மரபுகளை மீறுவது என்பது அடங்க மறுத்தலின் ஒரு பகுதி.
இந்த மரபு மீறல் என்பது புரட்சிக்கான கூறுகளின் ஒரு புள்ளி. இத்தகைய மரபுகளை உடைப்பதன் மூலம் பண்பாட்டு தளத்தில் நாம் ஏற்படுத்தும் தாக்கம், புரட்சிக்கு மிக முக்கியமான புள்ளியாக உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த மரபுகளைத்தான் மீற முடியாமல் இருக்கிறது. எத்தனை மன்னர்கள், மாமன்னர்கள் இம்மண்ணை ஆண்டாலும், ஆண்டிருந்தாலும், ஆண்டு கொண்டிருந்தாலும், அவர்காளாலும் மீற முடியாதது – இந்த சாதிய, சனாதன மரபுகள்தான். எத்தனையோ பேர் படையெடுத்து வந்தார்கள். ராஜாதி ராஜன்களாக இருந்தார்கள். மூவேந்தர் பரம்பரை என்றெல்லாம் நாம் பெருமையோடு சொல்கிறோமே, அந்த சேர, சோழ, பாண்டியர்களாலும் தொட முடியாத, சீண்ட முடியாத, மீற முடியாத புள்ளி இதுதான். அவர்கள் எந்த மாற்றத்தையும் செய்யத் தயார். ஆனால், திருமணம், காதல், சாதிய கட்டமைப்பு ஆகியவற்றுக்குள்ளே யாரும் தலையிட மாட்டார்கள. நீ நீயாகவே இரு, நான் நானாகவே இருக்கிறேன் என்கிற ஒப்பந்தம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இச்சமூகத்தில் நிலவி வருகிறது.
ஆனால், அவ்வபோது இம்மரபு மீறப்படுகிறது. அது இயல்பாக நிகழ்கிறது. திட்டமிட்ட கொள்கை பரப்புதலின் அடிப்படையில், அரசியல் முடிவுகளின் அடிப்படையில் நிகழ்ந்ததாக நாம் சொல்ல முடியாது. இவ்வாறு அவ்வபோது மீறப்படுவதற்கு காரணம் இயற்கையாக மலர்கிற காதல்தான். காதல் என்பது இந்த செயற்கையான – திட்டமிட்டு வரையறுக்கப்பட்ட பண்பாட்டு மரபுகளை மீறுகிற வலிமை கொண்டது. காதலுக்கு அந்த வலிமை உண்டு. ஆனால், அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆனாலும், எத்தனை தண்டனைகளை கொடுத்தாலும், காதல் அவ்வபோது வரம்புகளை மீறியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உண்டு.
காத்தவராயன் – ஆரியமாலா காதலை தெருக்கூத்துகளாக, திரைப்படங்களாக நாம் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். காத்தவராயன் ஒரு தீண்டப்படாத சமூகத்தை சார்ந்தவர். ஆரியமாலா ஒரு பார்ப்பன சமூகத்தை சார்ந்த, அரச குல பெண். இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாமல், காத்தவராயன் கழுவேற்றி கொல்லப்படுகிறான். அதுதான் இன்று நாம் சொல்லக்கூடிய ஆணவப்படுகொலை.
காத்தவராயன் படுகொலை செய்யப்படுவதற்கு சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததுதான் – சனாதன மரபு மீறப்பட்டதுதான் காரணம். ஆனாலும், அவனை தெய்வமாக வணங்குகிற முறை இச்சமூகத்தில் இருக்கிறது. இது போல ஊர் தெய்வங்கள் பலவற்றை நீங்கள் தேடிப்போனால், அது அம்மன் வழிபாடாக இருந்தாலும் அல்லது ஆண் தெய்வ வழிபாடாக இருந்தாலும் இப்படி காதலர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களே தெய்வங்களாக ஏற்கப்பெற்று, அவர்களை வழிபாடு செய்கிற ஒரு கலாச்சார முறை நம்முடையை மரபிலே இருந்திருக்கிறது.
இதிலே தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் காதலிப்பது ஒரே சாதிக்குள்ளேயே இருக்க வேண்டும். அதாவது அகமணமுறைதான் இருக்க வேண்டும். புறமண முறை நிகழக் கூடாது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது என்ற கருத்து மாறி, சாதிக்குள்ளே திருமணம் என்கிற கருத்து நிலைபெற்றதால், சாதி குழுவை மீறி திருமணம் செய்கிற போது அது ஆணவக்கொலையில் சென்று முடிகிறது.
அதேபோல், நாயக்கர் குடும்பத்தை சார்ந்த பொம்மியையும் கள்ளர் குடும்பத்தை சார்ந்த வெள்ளையம்மாளையும் அருந்ததியர் குடியில் பிறந்த மதுரைவீரன் காதலித்ததால், மணம் முடித்துக்கொண்டதால் மதுரைவீரன் மாறு கை மாறு கால் வாங்கப்பட்டார். ஆனால், கொள்ளையர், வழிபறி கூட்டத்திலிருந்து மதுரை மக்களை காப்பாற்றினார் என்பதால் எல்லா சமூகத்தை சார்ந்த மக்களும் மதுரை வீரனை வழிபடும் மரபு இங்கு வளர்ந்ததாக நாம் அறிகிறோம். இவ்வாறு காதலித்து ஆணவப்படுகொலை செய்யப்பட்டவர்களில் தப்பித்த ஒரே ஆள் முருகன் மட்டும்தான்.
ஆனால், அரசியல் ஆதாயம் தேடக்கூடிய கும்பல் இப்போது இதற்கெல்லாம் காரணம் திருமாவளவன்தான் என்று சொல்கிறது. காத்தவராயன் ஆரியமாலாவை காதலித்ததற்கும், முருகன் வள்ளியை காதலித்ததற்கும், மதுரைவீரன் பொம்மியையும் வெள்ளையம்மாளையும் காதலித்து திருமணம் செய்துகொண்டதற்கும் திருமாவளவன் பொறுப்பேற்க முடியுமா? இதெல்லாம் அவர்களுக்கு தெரியும். திருமாவளவனை சொல்லி அதன் மூலம் ஒரு வெறுப்பு அரசியலை விதைப்பதே அவர்களின் நோக்கம்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் பல உத்திகளை கையாளுகின்றனர். அதில் மிக முக்கியமானது லவ் ஜிகாத். அதாவது, இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை மயக்கி, திருமணம் செய்வதாக நாடகமாடி, அவர்களை பாழ்படுத்துகிறார்கள்; இந்துப் பெண்கள் வயிற்றில் இஸ்லாமிய கருவை வளர்க்கிறார்கள்; கடத்தி கொண்டுபோய் ஐ.எஸ். போன்ற தீவிரவாத இயக்கங்களிடம் பாலியல் இச்சைகளுக்காக ஒப்படைக்கிறார்கள் என்றெல்லாம் கதையை கட்டி வதந்திகளை பரப்பி இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக வெறுப்பை பரப்புகிறார்கள்.
இந்த வெறுப்பு அரசியலை பரப்புவதற்கு பயன்படக்கூடிய உத்தியான லவ் ஜிகாத்தை அப்படியே காப்பியடித்து, திருமாவளவன் போன்றவர்கள் இங்கு வளர்ந்த பிறகுதான், தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு, டி-ஷர்ட் அணிந்துகொண்டு, கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு உயர்சாதி பெண்களை, பணக்கார வீட்டு பெண்களை காதலிப்பததாக நடிக்கிறார்கள் என்ற கதை கட்டிவிடப்படுகிறது. திருமாவளவன் மீது வெறுப்பை விதைத்தால் ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிராகவும் இந்த வெறுப்பை வளர்க்க முடியுமென்பதுதான் அவர்களது நம்பிக்கை. அதன் மூலம் சாதி இந்து பெரும்பான்மை என்கிற அடிப்படையில் வாக்குகளை திரட்ட முடியும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
ஆக, இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தக்கூடிய மூன்று முக்கிய உத்திகளில் ஒன்றுதான் லவ் ஜிகாத். இன்னொன்று, மிக முக்கியமானது மதமாற்றம். அதற்கடுத்தது, பசு புனிதம். இவற்றின் மூலம் வெறுப்பை விதைத்து இந்து சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவை திரட்டுவது எல்லாம் ஏற்கெனவே திட்டமிட்ட செயல்முறைகள்.
திடீர் திடீரென்று திருப்பரங்குன்றத்தில் பிரச்சினை வந்ததாக நினைக்கக் கூடாது. திருப்பரங்குன்றத்தில் பிரச்சினை செய்ய வேண்டுமென்பது திட்டமிடப்பட்ட ஒன்று. தமிழ்நாட்டில் மட்டும் 175 மசூதிகளையும் தர்காகளையும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஒவ்வொன்றாக கையிலெடுப்பார்கள். தேர்தலுக்குள்ளாக ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி. தமிழ்நாட்டிலே சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தை தூண்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனை வைத்து இந்து உணர்வை வளர்ப்பது அவர்களின் திட்டம்.
நீண்ட நெடுங்காலமாக மத உணர்வை வளர்ப்பதற்கு இவர்களுக்கு இலகுவான உத்திகள் கிடைக்கவில்லை. இந்துக்கள் பெரும்பான்மை, இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் சிறுபான்மை; அவர்கள் இங்கே சுதந்திரமாக இயங்க முடிகிறது; நாம் இரண்டு பிள்ளைகளை பெற்றுகொள்கிறோம், அவர்கள் 8-10 பிள்ளைகளை பெற்றுக்கொள்கிறார்கள்; நாம் கல்வி நிலையங்களை தொடங்க சிரமப்படுகிறோம், இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் சிறுபான்மையினர் என்ற பெயரால் மிக எளிதில் அனுமதி வாங்கிவிட முடிகிறது என்று வெறுப்பை பரப்புகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களையும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் சிலரையும் ஆசைக்காட்டி மோசம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள்; கோதுமை தந்து கிறித்தவத்திற்கு மதம் மாற்றம் செய்கிறார்கள்; துபாயில் வேலை உள்ளதாக ஆசைவார்த்தை பேசி இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்கிறார்கள்; இப்படி மதம் மாறிக்கொண்டே இருந்தால் இந்துக்களாக இருக்கக்கூடிய நாம் சிறுபான்மையாகி விடுவோம்; இந்தியா என்பது இந்துக்களின் நாடாக இல்லாமல் இஸ்லாமியர்களின், கிறித்தவர்களின் நாடாக மாறிவிடும் என்றெல்லாம் இந்துக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார்கள்.
அப்படியும் அவர்களால் அணித்திரட்ட முடியாததால்தான் சாதிப் பெருமை பேச வைக்கிறார்கள். சாதிப் பெருமை பேச பேச மத உணர்வும் மேலோங்கும். சாதி பெருமையை ஒரு உத்தியாக கையிலெடுக்கிறார்கள். “நீ ஆண்ட சாதி. நீ இழிவானவன் இல்லை. நீ பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும். இடதுசாரி அரசியல் வேண்டாம். உனக்கு நாங்கள் இருக்கிறோம். அதிகாரம் பகிர்ந்து தருகிறோம். உங்களை ஆளாக்குகிறோம். உங்கள் குடியிருப்பு பகுதிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள் வேண்டுமோ அவற்றை செய்து தருகிறோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் சாதிப் பெருமை ஊட்டுகின்றனர்.
விஷ்வ இந்து பரிசத், இந்து முன்னணி, அனுமன் சேனா, இந்து சேனா, பஜ்ரங் தளம், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட பல்வேறு சங்கப்பரிவார அமைப்புகளுக்கு இந்த வேலைத் திட்டங்கள் பிரித்து தரப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றாகத்தான் இந்து மக்கள் கட்சி என்று புதிதாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மதமாற்றத்தை தடுப்பது, பசுவை பாதுகாப்பது, காதல் என்கிற பெயரால் நாடகக் காதல் நடக்கிறதென்று கூறி சாதி மறுப்பு திருமணங்களை தடுப்பதுதான் வேலைத்திட்டம்.
இவற்றை சரியாக புரிந்துகொண்டு களத்திலே இன்று நம்மோடு கொள்கை அடிப்படையில் கைக்கோர்த்து நிற்பவர்கள்கள்தான் இடதுசாரி சக்திகள், புரட்சிகர சக்திகள். அதில் தேர்தலில் பங்கேற்கின்ற இடதுசாரிகளும் உண்டு, தேர்தலை புறக்கணிக்கிற, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத இடதுசாரி – புரட்சிகர சக்திகளும் உண்டு. ஆனால், வலதுசாரிகளை எதிர்த்து அவர்களின் மேலாதிக்கத்தை தகர்ப்பது என்பதிலே நாம் ஒரு புள்ளியில் இணைந்து நிற்கிறோம். அப்படிபட்ட மேடைதான் இன்றைக்கு ரவியும் ராதிகாவும் திருமணம் செய்துகொள்கிற இந்த மேடை, இந்த களம்.
தோழர்களே, நாம் மிகவும் ஆபத்தான ஒரு சூழலில் இருக்கிறோம். வலதுசாரிகள் நேரடியாகவும் வருவார்கள், முகமூடிகளை அணிவித்துவிட்டு நம்மில் பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்படி சிலர் இன்று கடப்பாறைகளை தூக்கிக்கொண்டு களத்திலே வருகிறார்கள். உங்களுக்கு தெரியும், மிகவும் ஆபத்தான அரசியல் அது.
அவர்கள் பெரியாரை இழிவுப்படுத்துகிறார்கள். பெரியாரை விமர்சிக்க வேண்டாம், திராவிடக் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. திராவிடக் கட்சி எதிர்ப்பு என்பது வேறு, திராவிட அரசியல் எதிர்ப்பு என்பது வேறு. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான விமர்சனம் என்பது வேறு, கம்யூனிச கருத்தியலுக்கு எதிரான விமர்சனம் என்பது வேறு. கம்யூனிசம் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே உடைமையானது என்று சொல்ல முடியாது. அது மக்களுக்கானது. பாட்டாளி வர்க்கத்திற்கானது. உழைக்கும் மக்களுக்கான தத்துவம் அது. அதை போல திராவிடம் என்கிற கருத்தியல் தி.மு.க., தி.க., அ.தி.மு.க-விற்கு மட்டுமே உரியதல்ல. அது எளிய விளிம்பு நிலை மக்களுக்கானது. உழைக்கிற மக்களுக்கானது சாதி ஒழிப்பு சிந்தனை உள்ளவர்களுக்கானது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கானது. சமூக நீதியின் மீது பற்றுதலும் பிடிப்பும் உள்ளவர்களுக்கானது. அந்த அரசியல் இங்கு தகர்க்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் யார் யார் என்று நீங்கள் பட்டியலிட வேண்டும்.
எந்த வண்ணத்தில், வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம், அவர்கள் பெரியாரிய – அம்பேத்கரிய – மார்க்சிய அரசியலை எதிர்த்தால் அவர்கள் நம் கொள்கை எதிரிகள்தான் என்பதில் நமக்கு தெளிவு தேவை. தோழர்களே, எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த தெளிவு இல்லையென்றால், தமிழ்நாட்டை வலதுசாரிகள் ஆக்கிரமிப்பு செய்துவிடுவார்கள். அவர்களின் ஆதிக்கம் மேலோங்கிவிடும். இப்படி நம்மால் ஒரு கூட்டத்தை அரங்கத்தில் கூட நடத்த முடியாமல் போய்விடும். ரவியும் ராதிகாவும் இப்படி வெளிப்படையாக அறிவித்து திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். விரட்டி விரட்டி படுகொலை செய்யப்படும் அலங்கோலமும் அவலமும் இங்கே அதிகரிக்கும் நிலை உருவாகும்.
எண்ணிப் பாருங்கள். வழக்கமாக திருப்பரங்குன்றத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருக்கும் தூணில்தான் தீபமேற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அப்படித்தான் ஏற்றப்பட்டது. 1926-லேயே, ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்பே நீதிபதி ராம ஐயர் திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்ப்பளித்துவிட்டார். பள்ளிவாசல், தர்கா, நெல்லித்தோப்பு ஆகியவை மட்டும் இஸ்லாமியர்கள் பயன்பாட்டுக்கு உரியது; காசி விஸ்வநாதர் கோவில், பிள்ளையர் கோவில், முருகன் கோவில் இந்துக்கள் பயன்பாட்டிற்குரியது; எஞ்சிய பகுதிகள் அரசுக்கு, அரசின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகள். இதில் என்ன சந்தேகம், கேள்வி எழுப்பும் வகையில் என்ன சிக்கல் இருக்கிறது?
ஆனால், நீதித்துறையில் இருப்பவர்களோ வலிந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்கக்கூடிய வகையில் தீர்ப்பை எழுதுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இங்கே எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழல் உருவாகி வருகிறது என்பதை பார்க்க வேண்டும். விருப்பம் போல் தீர்ப்பு எழுத முடியும் என்ற நிலை இங்கு கனிந்து வருகிறது. அமைதியான இடத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகி வருகிறது. இது எவ்வளவு ஆபத்தானது.
வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக நாம் கணக்கு போட்டால், நாட்டையும் மக்களையும் யார் காப்பற்றுவது? நம் ஜனநாயக மரபுகளை யார் காப்பாற்றுவது? புரட்சிகர பண்பாட்டு கூறுகளை எப்படி வளர்த்தெடுத்து செழுமைப்படுத்த முடியும்? ஆணவப் படுகொலைகளை எப்படி தடுக்க முடியும்?
எனவேதான், அன்புச் சகோதரர் முருகவேள் ராஜன் பேசும்போது, ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று குரலெழுப்பினார். சாதி ஒழிப்பு அரசியல் என்பது தலித்துகளிடமிருந்து அல்ல, சாதியவாதிகள் அல்லது சாதி பெருமை உள்ளவர்கள் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளிலிருந்து புறப்பட வேண்டும். சாதி ஒழிப்பு அரசியலை திருமாவளவன் பேசுவதல்ல, ரவி என்கிற செல்வகணேஷ் போன்றவர்கள் பேச வேண்டும். அக்குடும்பத்திலிருந்து, தெருவிலிருந்து, குடியிருப்பிலிருந்து தொடங்க வேண்டும்.
அம்பேத்கர் அரசியல் சேரிகளில் மட்டும்தான் பேசப்படுகிறது. அம்பேத்கரின் நூல்கள், படைப்புகள், சிந்தனைகள், சாதி ஒழிப்பின் மீது நம்பிக்கையுள்ள அதையே ஒரு செயல்திட்டமாக கொண்டிருக்கிற சேரிப் பகுதிகளில் வாழ்கிற மண்ணின் மைந்தர்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளது. அது இன்னும் பரவ வேண்டும். பெரியார் அரசியலும் அப்படி முடங்கி போயிருக்கிறது, ஒரு வரம்பிற்குள் கட்டுக்குள்ளே கிடக்கிறது. மார்க்சிய அரசியலும் அப்படி ஒரு குழு விவாதத்திற்குரிய அரசியலாகவே முடங்கி கிடக்கிறது என்கிற சுயவிமர்சனம் நமக்கு தேவை. பாட்டாளி வர்க்கம், உழைக்கும் வர்க்கம், பரந்துபட்ட மக்களை இன்னும் சென்று சேரவில்லை.
எனவேதான், அம்பேத்கர் சிலைகளும் படங்களும் திறக்கப்படுகின்ற இடமெல்லாம் பெரியார், மார்க்ஸ், சிலைகளும் படங்களும் திறக்கப்பட வேண்டும் என்று நான் சொன்னேன். மேலும், ஐந்தாம் வகுப்பு படிக்கிற பிள்ளைகள் 10 வயதிலிருந்து இம்மாமேதைகளின் பெயர்களை படிக்க வேண்டும், உச்சரிக்க வேண்டும், புரிகிறதோ இல்லையோ அவர்களை செவிமடுக்க வேண்டும். ஒரு புதிய இடதுசாரி தலைமுறையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
அவ்வபோது நாம் இத்தகைய திருமணங்களை நடத்தி அதில் மகிழ்ச்சியடைந்து விட்டு நாம் நம்முடைய செயற்பாட்டு தளங்களை அப்படியே நிறுத்திவிட்டால், சுருக்கிவிட்டால் அது வெற்றிகரமாக மாறாது. ஏனென்றால், ஆக்டோபஸ்ஸின் கால்களை போல சங்கப் பரிவாரங்கள் இன்று முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்குவங்கம் இம்மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் அனைத்திலும் அவர்களின் வேர்கள் ஆழ ஊன்றியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் வேர்பிடிக்க அ.தி.மு.க. போன்ற கட்சிகள் துணைநிற்கின்றன. தி.மு.க-வை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக திராவிட அரசியலையெ எதிர்க்கிறோம் என்று இப்போது வெளிப்படையாக களத்திற்கு வந்திருக்கிறார்கள். அறிந்தே சங்கப்பரிவாரங்கள் வேர் பரப்ப வழிவகுக்கிறார்கள்.
நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தல் வரும், போகும். அது பிரச்சினை இல்லை. எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது பிரச்சினை இல்லை. ஆனால், அதிலும் நாம் எச்சரிக்கையாக இருந்து வலதுசாரிகளை வீழ்த்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. அதிலே நாம் வெற்றி பெறுகிறோம் என்பதை விட, இடதுசாரி அரசியல் வெற்றிபெற வேண்டும். வலதுசாரி அரசியல் வீழ்த்தப்பட வேண்டும். தமிழ் மண்ணிலே வலதுசாரி அரசியலுக்கு இடமில்லை என்று அவர்கள் பின்னங்கால்கள் பிடறியிலடிக்க புறமுதுகிட்டு வட இந்தியாவை நோக்கி ஓட வேண்டும். தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அத்தகைய புரிதலோடு நாம் இந்த களத்தில் கைகோர்த்து நிற்போம். அதைத்தான் இன்றைக்கு மணமக்கள் இருவரும் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டார்கள். பார்ப்பனிய – முதலாளித்துவ பண்பாடுகளை நிராகரித்து, ஜனநாயகப் பண்பாட்டுக் கூறுகளை ஏற்று இல்லறத்தை நாங்கள் நல்லறமாக நடத்துகிறோம் என்று உறுதிமொழி ஏற்றார்கள். நாம் ஒவ்வொருவரும் அப்படி உறுதிமொழி ஏற்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம், களமாட கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இடதுசாரி அரசியல் இம்மண்ணில் செழுமைப்பெற வேண்டும் என்கிற புரிதலோடு கைகோர்த்து நிற்போம் என்பதைச் சொல்லி மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











