கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு எனும் “மோசடி”

இலட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைக்கே அரசுத் திட்டங்களை நம்பியிருக்கின்ற சூழலில், தீவிர வறுமையை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது முழு பூசணியை சோற்றில் மறைப்பது மட்டுமல்ல, பினராயி விஜயன் அரசு அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆற்றும் சேவையை மூடிமறைக்கின்ற திரையுமாகும்.

ந்தியாவிலேயே முதல் மாநிலமாக சி.பி.ஐ.(எம்) கட்சி ஆளும் கேரளாவில் தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். கேரள மாநிலம் உருவான தினமான நவம்பர் 1 அன்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவர் இதனை பெருமையாக அறிவித்தார்.

கேரளாவில் தீவிர வறுமையால் பாதிக்கப்பட்ட 64,006 குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குடும்பங்களின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப குறிப்பான நுண் திட்டங்களை உருவாக்கியதன் மூலம் இது சாத்தியமாயிற்று என்று பினராயி விஜயன் கூறியிருக்கிறார். “இதற்காக ரூ.1000 கோடி செலவில் சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டன. உணவு, இருப்பிடம், மருத்துவத் தேவை, ஆவணங்கள் இல்லாதவர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 5,400-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 5,522 வீடுகள் பழுது பார்க்கப்பட்டுள்ளன. 2,713 நிலமற்ற குடும்பங்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 21,263 நபர்களுக்கு முதல் முறையாக ரேஷன் அட்டை, ஆதார் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 20,648 குடும்பங்களுக்கான தினசரி உணவு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,210 பேருக்கு சூடான உணவு வழங்கப்பட்டது. 85,721 நபர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று நீண்ட பட்டியலை அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இது ‘நவகேரள மாடல்’-இன் வெற்றி என்றும் மக்கள் மையத் திட்ட மாதிரி என்றும் புகழ்ந்திருக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” (People’s Democracy).

அதேசமயம், கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர வறுமை ஒழிப்பு என்பது மோசடி என்று விமர்சித்து சட்டப் பேரவையிலிருந்து வெளியேறியிருக்கிறது. கேரள மக்கள் மத்தியிலிருந்தும் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

கேரள மக்களின் எதார்த்த வாழ்நிலை

தீவிர வறுமை ஒழிக்கப்பட்டதாக மார்தட்டிக் கொள்ளும் சி.பி.எம். கட்சியின் ஆட்சியில்தான், ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கேரளாவின் தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆஷா தொழிலாளர்கள்.

கொரோனா பெருந்தொற்று, வயநாடு நிலச்சரிவு எனப் பேரழிவு காலங்களில், இறந்த பிணங்களை அகற்றுவது, பிறப்பு – இறப்பு கணக்கெடுப்பு எடுப்பது, மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது என ஆஷா தொழிலாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

இத்தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதியிலிருந்து, 200 நாட்களுக்கும் மேலாக, அம்மாநில தலைமைச் செயலகத்தின் முன்பு போராடி வருகின்றனர். 25 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்களே இதில் அதிகம் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆவர்.

சுகாதார முன்களப் பணியாளர்களான இத்தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ வெறும் ரூ.7,000 மட்டுமே. இந்தியா முழுவதும், தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளமாக ரூ.15,000 நிர்ணயிக்க வேண்டுமென்று குரல் கொடுக்கின்ற சி.பி.எம். கட்சி, தங்கள் மாநிலத்தில் பணியாற்றுகின்ற பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு வெறும் ரூ.7,000 மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கான எந்தவித சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்துவது கிடையாது.

இந்நிலையில்தான், கடுமையான வேலைப் பளுவில், நியாயமான ஊதியமின்றி, சமூகப் பாதுகாப்புத் திட்டமின்றி, பணியாற்றும் பெண்கள் தங்கள் உரிமைக்காக களமிறங்கி இருக்கின்றனர். தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும்; தங்களது ஊதியத்தை ரூ.21,000-ஆக உயர்த்த வேண்டும் மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் ரூ.5 லட்சம் வழங்க வெண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். தீவிர வறுமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கும் நேரம் வரை இத்தொழிலாளர்கள் தலைமை செயலகத்தின் முன்பு போராடிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரில் இப்பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கொச்சைப்படுத்தினார். தற்போது தொழிலாளர்களின் தீவிரப் போராட்டத்தால் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த ரூ.8,000-ஐ வைத்து உணவு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகளை கூட பெற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

தொழிலாளர்களின் நிலை இவ்வாறிருக்க, “தீவிர வறுமையை” ஒழித்துவிட்டதாக கேரள சி.பி.எம். அரசு பேசுவது அப்பட்டமான மோசடியே.

அடுத்ததாக, கேரளாவில் 4.85 சதவிகிதம் அளவிற்கு உள்ள பழங்குடியின மக்கள் அனைவரும் தங்களது நில உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். பழங்குடித் தலைவர் மணிக்குட்டன் கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு அறிவிப்பு குறித்து வயநாட்டில் கூறுகையில், “அவர்கள் கடந்த ஆண்டு டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுடன் இங்கு வந்தனர். அவர்கள் எங்கள் உணவு, எங்கள் வருமானம் மற்றும் எங்கள் உடல்நலம் பற்றி கேட்டார்கள். எங்களுக்கு வீடுகளும் நிலங்களும் கிடைக்கும் என்று சொன்னார்கள். இப்போது கேரளா வறுமை இல்லாத மாநிலம் என்கிறார்கள். ஆனால் எங்களுடைய நிலம் எங்கே? வீடு எங்கே?” என்று கேரள அரசின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

அதேபோல், கேரளாவின் பெரும்பாலான மீனவர்களின் வாழ்க்கையும் துயரம் நிறைந்ததாகும். கடல் அரிப்புப் பகுதியில் வாழ்கின்ற இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. இவர்களும் இந்த தீவர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை.

மேலும், அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய புள்ளிவிவரமானது, கேரளாவில் 29.9 சதவிகித மக்கள் கடனாளிகளாக இருக்கின்றனர் என்றும் அத்தியாவசிய செலவுகள், கல்வி மற்றும் விவசாய செலவுகள், இ.எம்.ஐ. (EMI) ஆகியவற்றுக்காக கடன் வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கடன் வாங்குவதில், இந்தியாவிலேயே கேரளா மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

ஏனெனில், கேரளாவில் நிலையான வேலை கிடையாது. அரசு புள்ளிவிவரப்படியே கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.5 சதவிகிதமாகும். எனவேதான், பெண்கள் உட்பட பலர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். கேரளப் பொருளாதாரத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதேபோல, காலனியக் காலத்திலிருந்தே தேயிலை தோட்டத்தின் வரிசை வீடுகளில் வாழ்ந்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவில்லை.

இவ்வாறு அன்றாட மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற அடித்தட்டு உழைக்கும் மக்களை புறக்கணித்துவிட்டு, தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக சி.பி.எம். அரசு ஜம்பமடிப்பது அயோக்கித்தனமாகும்.

அதுமட்டுமின்றி, “64,000 குடும்பங்கள்தான் தீவிர வறுமையில் இருப்பதாக கண்டறிந்ததற்கு என்ன மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன? இது தேர்தலுக்கான அரசியல் நாடகம்” என்கிறார், கேரள சமூக விஞ்ஞானி ஜே.பிரபாஸ்.

மேலும், சமூக செயற்பாட்டாளர் ஆர்.வி.ஜி. மேனன், பொருளாதார வல்லுநர்கள் எம்.ஏ. உம்மன் மற்றும் கே.பி. கண்ணன் உள்ளிட்டு 24 பேர் கையெழுத்திட்ட கடிதத்தில், ஏழைகளை தெளிவாக அடையாளம் காணும் நம்பகமான மற்றும் விரிவான ஆய்வையும், எந்த நிபுணர் குழு இக்கணக்கெடுப்பை மேற்கொண்டது என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

“ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “அந்தியோதயா அன்ன யோஜனா” திட்டத்தில் 5.92 இலட்சம் மக்கள் பயன்பெறுவதாக உணவுத் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். வறுமையில் வாழ்கின்ற இவர்களுக்கு அரிசியும் கோதுமையும் வழங்கப்படுகிறது. கேரளாவில் 64,000 குடும்பங்கள்தான் தீவிர வறுமையில் இருந்தன என்றால், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்படுவார்களா?” என்று காட்டமாகக் கேள்வியெழுப்புகிறார், கே.பி. கண்ணன்.

மேலும், 2021-இல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது, உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பான வீடு, குறைந்தபட்ச வருமானம் மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்பொழுது தங்களைப் பராமரித்துக்கொள்ள இயலாதவர்கள் மட்டுமே  இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இக்கேள்விகள் எதற்கும் கேரள சி.பி.எம். அரசு பதிலளிக்கத் தயாராக இல்லை. மாறாக, கேரளாவில் தீவிர வறுமையின் விகிதம் 0.72-தான் என்று நிதி ஆயோக்கின் புள்ளிவிவரத்தைக் கைக்காட்டுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைக்கே அரசுத் திட்டங்களை நம்பியிருக்கின்ற சூழலில், தீவிர வறுமையை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது முழு பூசணியை சோற்றில் மறைப்பது மட்டுமல்ல, பினராயி விஜயன் அரசு அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆற்றும் சேவையை மூடிமறைக்கின்ற திரையுமாகும்.

திரிபுவாதத்தின் உச்சம்

மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்த ஓட்டாண்டித்தனத்திற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டாக இந்தத் தீவிர வறுமை ஒழிப்பு நாடகம் உள்ளது.

முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் ஒரு போதும் வறுமையை ஒழிக்க முடியாது என்பது மார்க்சியத்தின் அடிப்படை. முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் அடிப்படையாக இருப்பது உற்பத்திச் சாதனங்களின் தனியுடைமையே. அது பொதுவுடைமையாக, ஒட்டுமொத்த சமூகத்தின் உடைமையாக மாற்றப்பட வேண்டும். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலமே சாத்தியம் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. ஆனால், “மார்க்சிஸ்டுகள்” என்று சொல்லிக் கொள்கிற சி.பி.எம். கட்சியினர், அதானிக்கு சேவை செய்து கொண்டே ‘தீவிர வறுமையை’ ஒழித்துவிட்டதாகக் கூறுவது மார்க்சியத்திற்கு செய்யும் துரோகமாகும்.

லெனின் காலத்திய திரிபுவாதிகள் முதலாளித்துவத்திலிருந்து படிப்படியாக சோசலிசத்தை நோக்கி செல்ல முடியும் என்றார்கள். அவர்களின் வாரிசுகளான சி.பி.எம். கட்சியோ நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருப்பதுடன், அதன் நீட்சியாக, வறுமையை ஒழிக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமெல்லாம் தேவையில்லை, முதலாளிகளுக்கு சேவை செய்துகொண்டே வறுமையை ஒழித்துவிட முடியும், அதுதான் கேரள மாடல் என்று நம்ப சொல்கிறது. இது திரிபுவாதத்தின் உச்சமாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க