ஐந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறையில் அடைபட்டு நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் ஓர் இளம் இஸ்லாமிய கைதி அப்துல் ரவுஃப். அவனது விடுதலைக்காகக் காத்திருக்கும் காதலி கலையரசி. தண்டனையா, விடுதலையா என அவர்களால் அறிந்துகொள்ளக் கூட முடியாத நிலை. சிறை, போலீசு நிலையம், சட்டம், நீதிமன்றம் என இந்த அரசு கட்டமைப்புக்குள் அப்துலுடைய வாழ்க்கை புயலில் மாட்டிய துரும்பாக எவ்வாறு சிக்கி சின்னாபின்னமாகிறது என்பதைத் திரைப்படமானது எதார்த்தமான காட்சிகளின் வழியாக உண்மைக்கு நெருக்கமாக நமக்குக் காட்டுகிறது.
திரைப்படத்தில் ஒரு காட்சியில் விசாரணைக்காக வரும் அப்துல் தனக்குப் பதற்றமாக இருப்பதாகக் கூறி கதிரவன் எனும் போலீசின் அனுமதியோடு நீதிமன்றத்தின் வெளியே நமாஸ் (தொழுகை) செய்கிறான். அப்போது அங்கு வரும் மற்றொரு போலீசு அதிர்ச்சியடைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அப்துல் நமாஸ் செய்யும்போது அவனுக்கு பின்னால் நின்று அதே நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் கலையரசி சாமி கும்பிடுகிறாள்.
‘மதச்சார்பற்ற’ ஒரு நாட்டில், அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படாத போது நீதிமன்ற வளாகத்தில் ஒரு இஸ்லாமியர் நமாஸ் செய்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது. இதுதான் இந்த நாட்டில் பார்ப்பனியம் புகுத்தி இருக்கும் பொதுப்புத்தி. இந்தப் பொதுப் புத்திக்குப் பலியாகி இருக்கும் ஓர் ‘இந்து’விடம் சங்கி கும்பலால் மிக எளிமையாக ‘இஸ்லாமியர் நமது எதிரி’ என்று கட்டமைத்து விட முடியும். பார்ப்பனியம் கட்டமைத்த இந்தப் பொதுப் புத்தியை மூலதனமாகப் பயன்படுத்தியே இந்தியாவில் காய் நகர்த்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல்.
அதேசமயம், அப்துல் வசிக்கும் கிராமத்தில் அவனுடைய ஒரு குடும்பம் மட்டும் இஸ்லாமியராக இருந்தாலும் உழைக்கும் மக்கள் யாரும் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காக ஒதுக்குவதில்லை, இணக்கமாகவே வாழ்கிறார்கள். அப்துலின் மீதான கலையரசியின் காதலும் அவ்வாறே மதத்திற்கு அப்பாற்பட்டுப் பூக்கிறது. சக கைதிகள் அப்துல் சிறையிலிருந்து சென்று நல்லபடியாக வாழ வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அப்துல் இஸ்லாமியர் என்பதற்காகவே துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பிக்கொண்டு வருகிறது போலீசு. இதுதான் அதிகாரத்தினுள் திணிக்கப்பட்டிருக்கும் இந்துத்துவ பொதுப்புத்தி.
இது ஓர் அப்துலின் கதை மட்டுமல்ல. இந்த நாட்டின் சிறைக்கூடங்களில் செய்யாத தவறுக்காகவும், குற்றம் நிரூபிக்கப்படாமலும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல நூறு அப்துல்களின் கதை.
தமிழ்நாட்டில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பல பத்தாண்டுகளாக அப்பாவி இஸ்லாமியர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதாக வாக்குறுதியளித்த தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் வஞ்சித்து வருகிறது.
சி.ஏ.ஏ போராட்டத்தின் போது சங்கி கும்பலால் தூண்டப்பட்ட கலவரத்தில் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உமர் காலித் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை ஐந்து ஆண்டுகளாக ஜாமீன் கூட வழங்காமல் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைத்துள்ளது பா.ஜ.க. கும்பல். மக்கள் எதிர்ப்பால் ஏழு பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் இருவரும் ஓராண்டுக்கு ஜாமீனுக்கு விண்ணப்பிக்கக் கூட தடை விதித்து அவர்களைச் சிறைக் கொட்டடியிலேயே முடக்க எத்தனிக்கிறது.
அப்சல்குரு வழக்கில் அவர் 2001 நாடாளுமன்றத் தாக்குதல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரம் இல்லை என்றும், அவர் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், “புனிதமான நாடாளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படி ஒரு தண்டனை தரப்படுவதே சரியானது” என்று கூறி அப்சல்குருவை தூக்கிலேற்றிக் கொன்றது.
“பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மசூதியை இடித்தது தவறுதான். ஆனால், இஸ்லாமியர்கள் அந்த இடத்தை இந்துக்களுக்கு விட்டுத்தர வேண்டும்” என தீர்ப்பு எழுதியதுடன், அத்வானி உள்ளிட்ட பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் அனைவரையும் குற்றத்திலிருந்து விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பானது இந்திய அரசியல் சாசனத்தின் உள்ளே இந்து ஆன்மா ஒளிந்துகொண்டிருப்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
தனது இயல்பிலேயே பார்ப்பனிய இந்து மதவெறியை அடித்தளமாக வைத்திருக்கும் இந்தக் கட்டமைப்பை இன்று கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் இந்தக் கட்டமைப்பை பாசிசமயமாக்கி வருகிறது. நீதித்துறையில் ஏற்கெனவே இருந்த இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு (ஐ.பி.சி.) மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா போன்ற புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இது கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கான சங்க பரிவாரம் மற்றும் போலீசின் கும்பலாட்சியை நிறுவுவதற்கு வழிவகுக்கிறது.
பாபர் மசூதிக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பினை போன்று, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதிலும் நீதிமன்றத்தால் அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் தங்களது பாசிசத் திட்டங்களின் அடிப்படையில் காய்களை நகர்த்த முடியும் என்பதை பாசிசக் கும்பல் நிரூபித்திருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் கட்டமைப்பானது பெரும்பான்மை ‘இந்து’ உழைக்கும் மக்களுக்குமே எதிரானதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், அவர்களுக்காகப் போராடும் ஜனநாயக சக்திகளுக்கும் எதிரானதுதான் இந்தக் கட்டமைப்பு. பழங்குடி மக்களுக்காகப் போராடிய ஸ்டேன் சாமியை சிறையில் வைத்துக் கொன்றது. நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றது. ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களின் மண்டையை உடைத்தது. எட்டு வழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயத்தையும், மக்களையும் கொல்லும் திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள் இந்தக் கட்டமைப்பில் தேசத் துரோகிகளாக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இத்திரைப்படம், திரையினுள் அப்துலை காட்சிப்படுத்தும் அதேவேளையில், எதார்த்தத்தில் சிறைக் கொட்டடியில் முடக்கப்பட்டுள்ள ஆயிரம் ஆயிரம் அப்துல்களையும், மக்களுக்காகப் போராடி சிறைவாசம் அனுபவிப்பவர்களையும் நினைவூட்டுகிறது. இந்தக் கட்டமைப்பு அவர்களுக்கு இழைத்துவரும் அநீதிகளைக் கண்ணுற்றுப் பார்க்குமாறு நம் முகத்தில் அறைகிறது.
எனினும், கதிரவன் போன்ற சில நல்லவர்கள் தங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அப்துல் போன்ற அப்பாவிகளை இந்தக் கொடூரக் கட்டமைப்புக்கு பலி கொடுக்காமல் தப்பிக்கலாம் என்கிற இறுதிக்காட்சி மூலம் மறுபடியும் நம் விரல் பிடித்து இந்தக் கட்டமைப்புக்குள் நம்பிக்கை வைக்க அழைத்துச் செல்ல எத்தனிக்கிறது. இந்த நம்பிக்கையைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி அவர்களை ஆசுவாசம் கொள்ளச் செய்கிறது.
“விசாரணை” திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் குற்றம் இழைக்காத அப்பாவி இளைஞர்களையும் அந்த இளைஞர்களுக்குப் பரிவு காட்டும் போலீசையும் இந்தக் கட்டமைப்பு எப்படி கொல்கிறது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் காட்டியிருப்பார். ஆனால், வெற்றிமாறனுக்கு இருந்த அந்த அனுகூலம் அவரின் உதவியாளரான இத்திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு இல்லை. ஏனெனில், “சிறை” திரைப்படத்தில் வரும் அப்துல் ஓர் இஸ்லாமியர். “இஸ்லாமியர் எதிர் இந்திய அரசு” எனக் காட்டுவதில் மிகப்பெரிய சிக்கல்களை இயக்குநர் எதிர்கொள்ள வேண்டிவரும்.
ஒரு வகையில் தப்பிக்க வாய்ப்பு இருந்தும் தப்பிக்காமல் மீண்டும் மாட்டிக்கொள்ளும் அப்துல் போலத்தான், இயக்குநர் சுரேசும் இந்தக் கட்டமைப்பின் மீது கேள்வி எழுப்பி மறுபடியும் இந்தக் கட்டமைப்புக்குள்ளேயே வந்து சிக்கிக் கொள்கிறார். பார்வையாளர்களுக்கும் வேறு மாற்று வழி இல்லாததால் இந்த முடிவையே ஏற்றுக்கொண்டு வீடு திரும்புகிறார்கள். ஆனால், எதார்த்தமானது மாற்றத்தைக் கோரி அங்கேயே நிற்கிறது.
இந்தக் கட்டமைப்புக்குள் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புறக்கணிப்பதற்கு இல்லை. ஆனால், இந்தக் கட்டமைப்பு யாருக்கானது என்பதைப் புரிந்துகொண்டு வினையாற்றுவது மிக முக்கியமானது. பாசிசமயமாகியிருக்கும் இந்தக் கட்டமைப்பின் உள்ளேயே நாம் தீர்வை தேடிக் கொண்டிருந்தால் பல அப்துல்களை நாம் இழக்க வேண்டிவரும். மாறாக, மாற்றுக் கட்டமைப்பிற்கான போராட்டத்தில் அப்துல்களையும், கலையரசிகளையும், கதிரவன்களையும் இணைத்துக்கொண்டு நாம் களமிறங்க வேண்டிய அவசியம் உள்ளது.
![]()
செங்குரல்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











