கார்ப்பரேட் – பா.ஜ.க. கூட்டுக் கொள்ளை: தேர்தல் பத்திரங்களுக்குப் பதிலாக அறக்கட்டளைகள்!

தேர்தல் நிதிப்பத்திரங்கள் தற்போது ஒழிக்கப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கொள்ளை வேறு வழியில் தொடர்கிறது. சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் இந்த "கூட்டுக்கொள்ளைக்கு" உடந்தையாக மௌனம் காக்கின்றன.

ழலை ஒழிப்பேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ஊழலையே சட்டப்பூர்வமாக்கி, அதை ஒரு நிறுவனமயமாக மாற்றியிருக்கிறது. 2024 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி அதை ரத்து செய்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பா.ஜ.க-விற்கும் இடையிலான கள்ள உறவை முறித்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் என்ற ‘திருட்டு வாசல்’ அடைக்கப்பட்டவுடன், ‘தேர்தல் அறக்கட்டளைகள்’ என்ற மற்றொரு சட்டப்பூர்வமான பாதையின் மூலம் பா.ஜ.க தனது கஜானாவை நிரப்பி வருகிறது. 2024-25 நிதியாண்டில் மட்டும் பா.ஜ.க பெற்ற மொத்த நன்கொடை ரூ. 6,088 கோடி. இது நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெற்ற தொகையான ரூ. 522 கோடியை விட ஏறக்குறைய 12 மடங்கு அதிகமாகும்.

இந்த மலைக்க வைக்கும் இடைவெளி, இந்தியாவில் நடப்பது ஜனநாயகம் அல்ல, முழுக்க முழுக்க கார்ப்பரேட் பணநாயகம் என்பதை அம்பலப்படுத்துகிறது. பா.ஜ.க குவித்துள்ள இந்த 6,000 கோடி ரூபாய் நன்கொடை அல்ல; இது நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுச்சொத்துகளையும் சூறையாட கார்ப்பரேட் முதலாளிகள் மோடி அரசுக்குக் கொடுத்த “கையூட்டு”. இன்னும் குறிப்பாகச் சொன்னால் அடுத்தகட்ட கொள்ளைக்கான “முன்பணம்”.

தேர்தல் அறக்கட்டளைகள்: புதிய ‘பணச் சலவை’ எந்திரங்கள்

தேர்தல் பத்திரங்கள் தடை செய்யப்பட்ட பிறகு, நிறுவனங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையில் இடைத்தரகர்களாகச் செயல்படும் ‘தேர்தல் அறக்கட்டளைகள்’ பா.ஜ.க-வின் முதன்மை நிதி ஆதாரமாக மாறியுள்ளன.

2024-25 நிதியாண்டில், 9 தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகையான ரூ. 3,811 கோடியில், பா.ஜ.க மட்டும் ரூ. 3,157 கோடியை (82%) அள்ளிக்கொண்டுள்ளது. இதில் ‘ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை’ (Prudent Electoral Trust) மட்டும் பா.ஜ.க-விற்கு ரூ. 2,180 கோடியை வாரிக் கொடுத்துள்ளது.

இந்த ‘ப்ரூடென்ட் அறக்கட்டளை’ (Prudent Electoral Trust) என்பது வானத்திலிருந்து குதித்த ஒரு தனி அமைப்பு அல்ல. இதன் திரைமறைவுப் புரவலர்களாக இருப்பவர்கள் பார்தி ஏர்டெல், ஆர்சிலர் மிட்டல் மற்றும் டி.எல்.எஃப் போன்ற பெரும் கார்ப்பரேட் முதலைகளே. தங்களின் நேரடித் தொடர்பை மறைக்கவும், மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் இந்த நிறுவனங்கள் அறக்கட்டளை எனும் ‘சட்டப்பூர்வ முகமூடியை’ அணிந்துகொண்டு, பா.ஜ.க-வின் கஜானாவை நிரப்புகின்றன.

பா.ஜ.க-வின் கஜானாவை நிரப்பும் இந்த நிறுவனங்கள் எவையும் தேசபக்தி காரணமாக நிதி அளிக்கவில்லை. அவை அனைத்தும் அரசின் சலுகைகளைப் பெற்றவையாகவோ, அல்லது மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் பிடியில் சிக்கியவையாகவோ உள்ளன.

டாடா சன்ஸ்: மக்கள் வரிப்பணத்தில் ‘கமிஷன்’

டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை’ (Progressive Electoral Trust) பா.ஜ.க-விற்கு ரூ. 757.6 கோடி வழங்கியுள்ளது. இது அந்த அறக்கட்டளைக்கு வந்த மொத்த நிதியில் 83 சதவீதமாகும். காங்கிரசுக்குக் கிடைத்ததோ வெறும் 77 கோடி மட்டுமே.

குஜராத்தின் தோலேரா மற்றும் அசாமின் மோரிகான் ஆகிய இடங்களில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில வாரங்களிலேயே இந்த நிதி கைமாறியுள்ளது.

ரூ. 91,000 கோடி மதிப்புள்ள இந்த குறைக்கடத்தி (Semiconductor) திட்டத்திற்கு 50% மூலதன மானியமாக சுமார் ரூ. 45,000 கோடி மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது. அதாவது, மக்களிடமிருந்து வரியாகப் பிடுங்கிய பணத்தை மானியமாக கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதும், அதில் ஒரு சிறு பகுதியை (ரூ. 757 கோடி) கட்சி நிதியாகத் திரும்பப் பெறுவதும் ஒரு “சுழற்சி முறை ஊழலாக” மாற்றப்பட்டுள்ளது.

வேதாந்தா: சுற்றுச்சூழல் கொலைகாரனின் கூட்டாளிகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேரைச் சுட்டுக் கொன்ற அரசின் ஆதரவு பெற்ற வேதாந்தா நிறுவனம், பா.ஜ.க-வின் முக்கியப் புரவலராகத் தொடர்கிறது. 2023-24 இல் ரூ. 26 கோடி அளித்திருந்த வேதாந்தா, 2024-25 நிதியாண்டில் பா.ஜ.க-விற்கு அளித்த தொகையை ரூ. 97 கோடியாக உயர்த்தியுள்ளது (நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி). சுற்றுச்சூழலை நாசமாக்கி, சொந்த மக்களைக் கொன்று குவித்த ஒரு நிறுவனம், ஆளும் கட்சிக்கு சுமார் 100 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்குகிறது.  இது “மக்கள் நல அரசு” அல்ல, மாறாக “கார்ப்பரேட் கொலைகாரர்களின் அடியாட்படை” என்பதற்கு இத்தகைய கையூட்டுகளே சாட்சி.

மேகா இன்ஜினியரிங் (MEIL): உள்கட்டமைப்புத் திருடன்

ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம், ப்ரூடென்ட் அறக்கட்டளை மூலமாகவும், நேரடியாகவும் சுமார் ரூ. 320 கோடிக்கும் மேல் பா.ஜ.க-விற்கு வழங்கியுள்ளது. காளேஸ்வரம், ஜோஜிலா சுரங்கப்பாதை, தானே-போரிவளி சுரங்கப்பாதை என நாட்டின் மெகா உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்தும் இந்நிறுவனத்திற்கே தாரை வார்க்கப்படுகின்றன. ஐ.டி ரெய்டு நடவடிக்கைகளுக்குப் பிறகே இந்நிறுவனம் பா.ஜ.க-வின் மிகப்பெரிய நிதி ஆதாரமாக மாறியது என்பது கவனிக்கத்தக்கது.

கெய்னீஸ் டெக்னாலஜி: குஜராத் மாடல் மிரட்டல்

மைசூரைச் சேர்ந்த கெய்னீஸ் டெக்னாலஜி (Kaynes Technology) மற்றும் அதன் உரிமையாளர் பா.ஜ.க-விற்கு ரூ. 28 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

கைம்மாறு: இந்நிறுவனம் தெலுங்கானாவில் அமைக்கத் திட்டமிட்டிருந்த தனது குறைக்கடத்தி ஆலையை, திடீரென குஜராத்தின் சனந்த் நகருக்கு மாற்றியது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசும், குஜராத் அரசும் இணைந்து சுமார் ரூ. 2,300 கோடி மானியம் வழங்குகின்றன. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை முடக்கி, அனைத்துத் தொழில்களையும் குஜராத்திற்கு மடைமாற்றும் மோடி-ஷா கும்பலின் “பிராந்தியப் பாகுபாட்டிற்கு” இதுவே சான்று.

ருங்க்டா சன்ஸ்: கனிமவளக் கொள்ளையன்

கொல்கத்தாவைச் சேர்ந்த ருங்க்டா சன்ஸ் (Rungta Sons) நிறுவனம் பா.ஜ.க-விற்கு ரூ. 95 கோடி (நேரடியாகவும் அறக்கட்டளை மூலமாகவும்) வழங்கியுள்ளது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் கனிம வளங்களைச் சுரண்டும் இந்நிறுவனம், சமீபத்தில் எஸ்.எம்.சி. பவர் ஜெனரேஷன் என்ற பொதுத்துறை நிறுவனத்தைக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு: மிரட்டிப் பணம் பறிக்கும் ‘வசூல் ராஜா’

மத்தியப் புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை (ED), வருமான வரித்துறை (IT) மற்றும் சி.பி.ஐ (CBI) ஆகியவை பாஜகவின் “வசூல் ஏஜெண்டுகளாக” மாற்றப்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஹீரோ குழுமம்: வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் குழுமம், வருமான வரித்துறைச் சோதனைகளுக்குப் பிறகு தனது பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம் பா.ஜ.க-விற்கு ரூ. 78.5 கோடி வழங்கியுள்ளது. இது வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான ‘ஜாமீன் தொகை’ அன்றி வேறில்லை.

சீரம் இன்ஸ்டிடியூட்: கோவிஷீல்ட் தடுப்பூசி மூலம் பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டிய ஆதார் பூனாவாலாவின் சீரம் நிறுவனம், பாஜகவிற்கு ரூ. 100 கோடி (பல்வேறு காலகட்டங்களில்) வழங்கியுள்ளது. மக்களின் உயிர் பயத்தைப் பயன்படுத்தி ஈட்டிய லாபத்தில், ஒரு பங்கை ஆளும் கட்சிக்கு அள்ளி வீசியுள்ளது.

பிற முக்கிய நன்கொடையாளர்கள் (2024-25)

நிறுவனத்தின் பெயர் தொகை (தோராயமாக) பின்னணி
டி.எல்.எஃப் (DLF) ரூ. 100 கோடி ரியல் எஸ்டேட் சலுகைகள்
எல் அண்ட் டி (L&T) ரூ. 500 கோடி உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் (துணை நிறுவனம் மூலம்)
ஜிண்டால் குழுமம் ரூ. 167 கோடி நிலக்கரி மற்றும் எஃகு
டைகர் அசோசியேட்ஸ் ரூ. 142 கோடி லாட்டரி விநியோகம்
டொரெண்ட் குழுமம் ரூ. 98.5 கோடி மின்சாரம் மற்றும் மருந்துத்துறை

 

தீர்வு என்ன?

மேற்கண்ட தரவுகள் வெறும் எண்களல்ல; இவை இந்தியாவின் போலி ஜனநாயகம் எவ்வாறு கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கான ‘பணநாயகமாகச்’ சீரழிந்து நிற்கிறது என்பதற்கான நேரடி சாட்சியங்கள். “நான் (இலஞ்சம்) சாப்பிடவும் மாட்டேன், சாப்பிட விடவும் மாட்டேன்” என்று முழங்கிய ‘சௌக்கிதார்’ மோடியின் ஆட்சியில், ஊழல் என்பது தனிநபர் சார்ந்ததாக இல்லாமல், நிறுவனமயமாக – கட்டமைப்பு ரீதியானதாக மாற்றப்பட்டிருப்பது தான், ‘ஊழலை’ ஒழித்திருக்கும் இலட்சணம். அம்பானி – அதானி கும்பலின் கூட்டுக்களவாணிகள் மட்டுமல்ல, இதர கார்ப்பரேட்டுகளை மிரட்டிப் பணம் பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்கள் தான் மோடி-ஷா கும்பல் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் தற்போது ஒழிக்கப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கொள்ளை வேறு வழியில் தொடர்கிறது. சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் இந்த “கூட்டுக்கொள்ளைக்கு” உடந்தையாக மௌனம் காக்கின்றன. இதன் விளைவாக, தேர்தல் களம் என்பது சமனற்ற, பணபலத்தால் தீர்மானிக்கப்படும் ஒரு சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு, எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் என அனைத்தையும் பிளப்பதையும், முக்கியமானவர்களை விலைக்கு வாங்குவதையும் எந்தத் தயக்கமுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறது மோடி கும்பல்.

இந்த “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச”க் கூட்டணியை வீழ்த்த, வெறும் ஆட்சி மாற்றங்களோ அல்லது தேர்தல் சீர்திருத்தங்களோ போதாது என்பதே இந்தக் கூட்டுக்கொள்ளைகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. கார்ப்பரேட்டுகள் வீசியெறியும் கோடிகளில் தங்களுக்குப் பங்கு கிடைக்கவில்லை என்று புலம்புவதையும், அந்தப் பணத்தைக் கொண்டு தங்கள் கட்சிகளை பா.ஜ.க அரித்து வருவதைக் கண்டு விரக்தியடைவதையும் எதிர்க்கட்சிகள் கைவிட்டாக வேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கவும் மக்களிடம் செல்ல வேண்டும். இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வூட்டுவதன் மூலம், சீரழிந்த கட்டமைப்பைத் தகர்க்கும் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைப்பதே புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் முன்னிருக்கும் அவசியப் பணியாக உள்ளது.


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க