இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025): ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும் பாசிச சர்வாதிகாரத்தையும் முறியடிக்க உறுதியேற்போம்!

இப்போதைய கடுமையான சூழலில் ஏகாதிபத்திய கும்பல்களுக்கும் இந்திய பாசிஸ்டுகளுக்கும் எதிராக நிராயுதபாணியாக போராடிக்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒருமுகப்படுத்தவும்; ஆற்றலும் வளமும் கொண்ட நமது இந்திய நாட்டில் புரட்சியை முன்னெடுத்து செல்லவும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இன்னும் அதிகரித்துள்ளது.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025):

ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும்
பாசிச சர்வாதிகாரத்தையும்
முறியடிக்க உறுதியேற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

டிசம்பர் 25, 2025, மாபெரும் இந்திய கம்யூனிச இயக்கமானது தனது நூற்றாண்டை நிறைவு செய்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு எதிராகவும் உயர்ந்த செங்கொடியின் கீழ், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் பெரும் உழைக்கும் வர்க்கங்கள் போராடினர்; அவர்கள் சிந்திய இரத்தத்தால், செங்கொடி மேலும் சிவந்து வர்க்கப் போராட்டத்தை முன்னகர்த்தி வருகிறது.

இந்திய கம்யூனிச இயக்கம் தொடங்கிய காலம் முதலாகவே, சமரசமின்றி மக்களின் வாழ்வுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் போராடி தமது பாதையை செப்பனிட்டு வந்துள்ளது. அதனால்தான், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, செல்வாக்கு செலுத்திய திரிபுவாதத்தை முறியடித்து நக்சல்பாரி இயக்கம் முன்னேறியது. அந்த இயக்கத்தில், 1970-களில் தலைதூக்கிய இடது தீவிரவாதத்தையும் முறியடித்து, முதலாளித்துவவாதிகளுக்கும் பிற்போக்கு பாசிச சக்திகளுக்கும் இன்றளவும் அச்சுறுத்தலான சக்தியாகவே உள்ளது.

நாடாளுமன்றப் பாதை என்னும் புதைகுழியில் சிக்கிய சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ(எம்-எல்) லிபரேசன் போன்ற கட்சிகளின் தேர்தல் தோல்விகளை எடுத்துக்காட்டி கம்யூனிசம் தோற்று வருகிறது என இப்பிற்போக்கு சக்திகள் ஊளையிடுகின்றன. மா-லெ குழுக்களிடம் இருக்கும் பிளவுகளைக் காட்டி “கம்யூனிசம் இனி கதைக்குதவாது” என்று எக்காளமிடுகின்றன.

அதேசமயம் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான் நாட்டை விடுதலை செய்யும், ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என்று ஆரூடம் கூறிய தனியார்மயத்தின் தாசர்கள், “ஐயோ! நெருக்கடி முற்றுகிறதே!” என்று ஒப்பாரி வைக்கின்றனர். “விலைவாசி விண்ணை முட்டுகிறதே! வேலையின்மை அதிகரிக்கிறதே! கொலை, கொள்ளை, பாலியல் வெறியாட்டங்கள், போதைக் கலாச்சாரங்கள் அதிகரித்துவிட்டதே! புவி வெப்பம் அதிகரித்து பூமி அழியப்போகிறதே!” என்று இந்த ஒப்பாரியின் அலறல்கள் நமது காதுகளைக் கிழிக்கின்றன.

எனினும், தாங்கள் பின்பற்றி வந்த இந்த நாசகரக் கொள்கைகளை பின்வாங்கிக் கொள்ளவில்லை; தங்கள் முதலாளித்துவ சுரண்டலை குறைத்துக் கொள்ளவுமில்லை. உழைக்கும் வர்க்கத்தை கசக்கிப் பிழிவது இயற்கை வளங்களை மென்மேலும் ஒட்டச் சுரண்டுவது என இரத்த வெறிபிடித்து அலைகின்றனர்.

நேரடி மற்றும் மறைமுகப் போர்கள், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மேலாதிக்கக் கழுத்தறுப்புப் போட்டிகள் நாளும் தீவிரமடைகின்றன. எந்நேரமும் அணு ஆயுதப் போர் மூண்டுவிடுமோ என்ற கலக்கத்தில் ஏகாதிபத்தியவாதிகள் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.

நான்காவது தொழிற்புரட்சியால் ஊக்குவிக்கப்படும் டிஜிட்டல்மயமாக்கம், தானியங்கிமயமாக்கம், செயற்கை நுண்ணறிவுமயமாக்கம் போன்றவற்றால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள், கலைஞர்கள் செல்லாக்காசாக்கப்பட்டு வீதியில் வீசப்படுகின்றனர். இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு அத்துக்கூலிகளாக ஆக்கப்படுகின்றனர். உண்ண உணவின்றி, தங்குவதற்கு வீடின்றி வீதிகளில் அலைகின்றனர்; இதனால், சமூக குற்றங்கள் பெருகி வருகின்றன. மக்களின் தனியுரிமைகள் பறிக்கப்பட்டு அனைவரும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இன்னொருபுறம், இயற்கை வளக் கொள்ளை மனித குலத்தின் முன்னுள்ள மாபெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த தொழிற்புரட்சி 4.0 என்பது அரியவகை கனிமங்களின் மீதான ஏகாதிபத்திய கும்பல்களின் கட்டுப்பாடுகளை மென்மேலும் தீவிரப்படுத்துகிறது.

இந்தியாவில் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பார்ப்பனிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது, ஏகாதிபத்தியங்களின், குறிப்பாக அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் நலன்களுக்கு ஒத்திசைவான முறையில் வளர்ந்து வந்துள்ளது. பாசிச மோடி-அமித்ஷா கும்பல் அமெரிக்காவுக்கு நாட்டையே அடிமையாக்கி வருகிறது. இதற்கு உகந்த வகையில் நாட்டை இந்துராஷ்டிரம் என்னும் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றி வருகிறது.

ஏகாதிபத்தியம் – பாசிசம் இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஏகாதிபத்திய சுரண்டல் ஒருபுறமும் பார்ப்பனிய சாதி ஆதிக்க ஒடுக்குமுறைகள் மறுபுறமும் என்று இந்திய உழைக்கும் மக்களும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களும் மிகத்தீவிரமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகின்றனர்.

இச்சூழலில் கம்யூனிசம் ஒன்றே உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கும் வலிமை கொண்ட ஒரே தத்துவமாக விளங்குகிறது. மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையின் அடிப்படையில், புரட்சிகர மா-லெ இயக்கங்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும் வலுப்படுத்துவதும் நம் முன்னேயுள்ள உடனடியான உயிராதாரமான பணியாக உள்ளது.

அதன்கீழ், பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற தலித்தியம், திராவிடம் உள்ளிட்ட சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இப்போதைய கடுமையான சூழலில் ஏகாதிபத்திய கும்பல்களுக்கும் இந்திய பாசிஸ்டுகளுக்கும் எதிராக நிராயுதபாணியாக போராடிக்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒருமுகப்படுத்தவும்; ஆற்றலும் வளமும் கொண்ட நமது இந்திய நாட்டில் புரட்சியை முன்னெடுத்து செல்லவும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இன்னும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஆதிக்கத்தில் இருக்கும் பாசிசத்தை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி வகைப்பட்ட பாசிசம் என்ற வரையறுப்புதான் சரியாக அடையாளப்படுத்துகிறது. நிலவுகின்ற நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, இந்த பாசிசத்தை வீழ்த்த முடியாது.

மாறாக, இந்தக் கட்டமைப்பிற்கு வெளியே பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் எழுச்சியைக் கட்டியமைக்க வேண்டும். அதன் வளர்ச்சியில், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியின் தலைமையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதே தீர்வாகும். இவ்வாறு ஒரு அரசியல்-பொருளாதார-சமூக மாற்றுத்திட்டத்தின் மூலமாகத்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்; சோசலிசத்தை நோக்கி உழைக்கும் மக்களை அணிதிரட்டி வழிநடத்திச் சென்று முன்னேற முடியும். இதன் மூலமாகத்தான், சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமையையும் கட்டியமைத்து ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து உலகை மீட்க முடியும்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டை நிறைவு செய்யும் இத்தருணத்தில் இக்கடமைகளை வரித்துக்கொண்டு முன்னேறுவோம்!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!
புரட்சி நீடூழி வாழ்க!


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க