கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!

வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி.

2026 ஜனவரி 3-ம் தேதி, உலக வரலாற்றின் பக்கங்களில் ஒரு கறுப்பு நாளாகப் பதிவாகியுள்ளது. ‘போதைப்பொருள் கடத்தல்’ என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில், வெனிசுலாவின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதித்து, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது துணைவியையும் அமெரிக்கா கடத்திச் சென்றிருக்கிறது. இது வெறும் கைது நடவடிக்கை அல்ல; இது ஓர் உலக ரவுடி தனக்குக் கீழ்ப்படியாத நாடுகளை எப்படி நடத்துவான் என்பதற்கான அப்பட்டமான பாசிச முன்னுதாரணம்.

“ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்” (Operation Absolute Resolve) என்ற பெயரில் ஜனவரி 3 அன்று நள்ளிரவு அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியது. சுமார் 150-க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரைச் சூழ்ந்தன. தாக்குதல் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் “சைபர் கட்டளை மையம்” வெனிசுலாவின் மின் விநியோகக் கட்டமைப்பை முடக்கி, தலைநகரை இருளில் மூழ்கடித்தது. இருளில் பதுங்கி, ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த “சீல் டீம் 6” மற்றும் “டெல்டா ஃபோர்ஸ்” கூலிப்படைகள், மதுரோவையும் அவரது துணைவி சிலியா ஃப்ளோரஸையும் சிறைபிடித்துச் சென்றன.

கண்கள் கட்டப்பட்டு, விலங்கிடப்பட்டு, ஒரு போர்க்கைதியைப் போல இழுத்துச் செல்லப்பட்ட மதுரோவின் புகைப்படம், அமெரிக்கா பேசும் ‘மனித உரிமை’யின் யோக்கியதையையும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு அலையும் டிரம்ப்பின் பாசிச வெறியையும் அம்பலப்படுத்தியது.

வெனிசுலாவைச் சூறையாட, “ஃபெண்டானில்” (Fentanyl) எனும் போதைப்பொருள் வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு கடத்திவரப்படுவதாக பொய்யை பரப்பி அதனை பேரழிவு ஆயுதமாக அறிவித்துள்ளது டிரம்ப் நிர்வாகம். அமெரிக்காவின் சொந்தப் போதைப்பொருள் தடுப்புத் துறையே, ஃபெண்டானில் மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து மெக்சிகோ வழியாகவே அமெரிக்காவிற்குள் நுழைகின்றன என்று தரவுகளுடன் ஒப்புக்கொண்டு விட்டது. அதன் பிறகும், மதுரோ மீது பழி சுமத்துவதற்கு ஒரே காரணம், என்ன செய்தேனும் வெனிசுலாவை அடிமைப்படுத்த வேண்டுமென்ற அமெரிக்காவின் மேலாதிக்கவெறி மட்டுமே.

இது போதைப்பொருளுக்கு எதிரான போர் அல்ல; கடந்த பல பத்தாண்டுகளாக அமெரிக்கா கட்டிக்காத்து வந்த டாலர் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான போர். நவீன டிஜிட்டல் சகாப்தத்தில் மேலாதிக்கம் செலுத்த அடிப்படையாக உள்ள அரிய வகை கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்கான போர். முன்பு, தங்களின் எண்ணெய் வளத்தை டாலரில் விற்க மறுத்த ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனும், லிபியாவின் முன்னாள் பிரதமர் கடாபியும் அமெரிக்காவால் கொல்லப்பட்டனர். இப்போது டாலருக்கு மாற்றாக சீன யுவானிலும், ரஷ்ய ரூபிளிலும் வர்த்தகம் செய்யத் துணிந்த வெனிசுலா அதிபர் மதுரோ குறிவைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பது “கச்சா எண்ணெய்” மற்றும் “லித்தியம்”தான் என்பதை டிரம்ப்பும் அவரது கையாட்களும் துளியும் கூச்சமின்றி வெளிக்காட்டி வருகின்றனர். மதுரோ கடத்தப்பட்ட உடனே, “நாங்கள் எண்ணெய் வணிகத்தில் இருக்கிறோம்; எங்கள் நிறுவனங்கள் உள்ளே சென்று பணத்தை ஈட்டும்” என்று டிரம்ப் மிகத் திமிராகப் பேசியிருப்பது, இது ஒரு திட்டமிட்ட பகல் கொள்ளை என்பதற்கான சான்று. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பான 303 பில்லியன் பேரல்களைக் கொண்ட வெனிசுலாவின் வளங்களை, செவ்ரான் மற்றும் எக்ஸான்மொபில் போன்ற அமெரிக்கக் கார்ப்பரேட் முதலைகளுக்குத் தாரைவார்ப்பதே இக்கும்பலின் உடனடி நோக்கம்.

மறுபுறம், எலான் மஸ்க் போன்ற தொழில்நுட்பப் பெருமுதலாளிகள் வெனிசுலாவின் ஒரினோகோ சுரங்க வளைவிலும், சிலி – பொலிவியா – அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய லித்தியம் முக்கோணத்திலும் குவிந்து கிடக்கும் லித்தியம் மற்றும் அரிய வகை கனிமங்கள் மீது கண் வைத்துள்ளனர். 2019-இல் பொலிவியா ஆட்சிக்கவிழ்ப்பின் போது “நாங்கள் விரும்பும் எவர் மீதும் ஆட்சிக்கவிழ்ப்பு செய்வோம்! அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று திமிராகப் பதிவிட்ட எலான் மஸ்க், இன்று மதுரோவின் கைதை “உலகிற்கான வெற்றி” என்று கொண்டாடுகிறார்.

மதுரோ கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள், வெனிசுலாவில் தனது “ஸ்டார்லிங்க்” இணையச் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்குவதாக மஸ்க் அறிவித்திருப்பது, அந்நாட்டின் வலதுசாரி கும்பல்கள், மதுரோ அரசுக்கு எதிராக தமது அவதூறு பிரச்சாரங்களைத் தடையின்றி நடத்துவதற்கான ஏற்பாடாகும். இது எதிர்காலத்தில், வெனிசுலாவின் டிஜிட்டல் கட்டமைப்பைக் கைப்பற்றும் சதித்திட்டத்திற்கான முன்னோட்டமும் கூட.

அமெரிக்காவின் இந்த அத்துமீறலை ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளும், பிரேசில், கொலம்பியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளும் “கடத்தல்” என்றும் “ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு” என்றும் கண்டித்துள்ளன. அதே சமயத்தில், ரஷ்ய – சீன ஏகாதிபத்தியங்கள், தமது நெருங்கிய கூட்டாளியான வெனிசுலா மீதான தாக்குதலைக் கைவிடவும், மதுரோவை விடுதலை செய்யவும் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை – ஏற்றுமதிகளை மையமாக வைத்து நெருக்கடி கொடுக்க முடியும். அவ்வாறு செய்தால், அருமண் தனிமங்கள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட தனது அத்தியாவசியத் தேவைகளுக்காக இவ்விரு நாடுகளைச் சார்ந்திருக்கும் அமெரிக்காவைப் பணிய வைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அது அமையும். ஆனால், தங்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்திச் சிந்திக்கும் இவ்விரு ஏகாதிபத்தியங்களும் கண்டன அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம், “விஸ்வகுரு” என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மோடி அரசோ, அமெரிக்காவின் பெயரை உச்சரிக்கக் கூட அஞ்சி, “ஆழ்ந்த கவலையை” மட்டும் தெரிவித்துவிட்டுப் பதுங்கிக் கொள்கிறது. உக்ரைன் போரில் நடுநிலை என்று வேடம் போட்ட இந்தியா, வெனிசுலாவின் இறையாண்மை நசுக்கப்படும்போது வாயை மூடிக்கொண்டிருப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈடு இணையில்லாத அடிமையாக மோடி கும்பல் மாறிவிட்டதையே இந்த “கள்ள மௌனம்” காட்டுகிறது.

அரசு மௌனமாக இருந்தாலும், இந்திய மக்களும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் அமைதியாக இருந்துவிடவில்லை. சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில், “அமெரிக்காவே, வெனிசுலாவிலிருந்து வெளியேறு!”, “இது கைது அல்ல, கடத்தல்!” என்ற முழக்கங்களுடன் அமெரிக்கத் தூதரகங்களை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பாவில் பிரஸ்ஸல்ஸ், மாட்ரிட் நகரங்களிலும், அமெரிக்காவிற்குள்ளேயே நியூ-யார்க், சிகாகோ, சான் டியாகோ, போஸ்டன், வாஷிங்டன், ஃபிலடெல்பியா போன்ற நகரங்களிலும், வெனிசுலாவிலும், உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். பாசிச டிரம்ப்பின் திமிரையும், அமெரிக்க ஏகாதிபத்திய வெறியையும் சகித்துக்கொள்ள முடியாது என்பதே இப்போராட்டங்கள் வெளிப்படுத்தும் ஒற்றை உணர்வாக உள்ளது.

நியூயார்க் நீதிமன்ற விசாரணையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட மதுரோ, “நான் ஒரு குற்றவாளி அல்ல; நான் வெனிசுலாவின் ஜனாதிபதி. நான் ஒரு போர்க்கைதி ” என்று நீதிபதியின் முகத்திற்கு நேராக முழங்கினார். தன்னை விசாரிக்கும் தகுதி அமெரிக்க நீதிமன்றத்திற்கு இல்லை என்று அவர் விடுத்த சவால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு துணிவுமிக்க போர்க்குரல்.

அமெரிக்கா ஒரு தலைவரைக் கைது செய்திருக்கலாம்; ஆனால் ஒரு தேசத்தின் ஆன்மாவைச் சிறைபிடிக்க முடியாது. கடந்த 25 ஆண்டுகளில், முன்னாள் அதிபர் ஹூகோ சாவேஸ் மற்றும் மதுரோவின் ஆட்சியின் கீழ் சுமார் 45 இலட்சம் வெனிசுலா மக்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர். “பொலிவேரியன் மக்கள் படை” என்ற பெயரில் ஆயுதமேந்தத் தயாராக உள்ள இம்மக்களோடு, கொரில்லாப் படைகளும் மைய இராணுவத்தின் ஒரு பகுதியும் இணைந்து காடுகளையும், நகரங்களையும் போர்க்களமாக்குவது திண்ணம். எனவேதான், நேரடியாகப் போரில் ஈடுபடாமல் திடீர்த் தாக்குதல் நடத்தி மதுரோவை மட்டும் கடத்திச் சென்றுள்ளது அமெரிக்கா. மேலும், புதிய ஆட்சியாளர்களுடன் ‘ஒப்பந்தம்’ போட்டு எண்ணெய் ஏற்றுமதியை முழுவதுமாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்வோம் எனப் பேசி வருகிறார் டிரம்ப்.

வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி. அமெரிக்க ஏகாதிபத்தியம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க