வானம் பார்த்த பூமியில் நட்டு வைச்ச மிளகாய்ச் செடியோட விவசாயியும் வானம் பார்த்து கிடக்கிறான். இந்த பருவத்துக்கு ஒரு பாட்டம் மழை பெய்ஞ்சிட்டா போதும் பூ பூத்துரும். இருந்தாலும் நிம்மதி என்று உட்கார்ந்துர முடியாது. அதுக்கு முன்னே அடி உரம் வச்சு, அதுக்கு பின்னே களை எடுத்து, இலைச் சுருட்டு நோய் தடுக்க தேவையான மருந்தடிச்சு, காயாகி, பழமாகி அதை பறித்தெடுத்து பக்குவம் பார்த்து சோடை தள்ளி நல்லதை சேகரித்து காயவைத்து வத்தலாக்கி வெளியூர் வியாபாரிகளை கைக்குள்ள போட்டுகிட்டு அவங்களோடு வற்ர உள்ளூர் தரகர்கள் நிர்ணயிக்கும் விலையோட சண்டையிட்டு அடகுவச்ச பொண்டாட்டி தாலிய மீட்டுக்கிறதுக்கு அவங்கேட்கிற விலைக்கு கொடுத்துட்டு பணத்தை கையில் வாங்கி துண்டை உதறி நெற்றி வியர்வையை துடைச்சு கரையேறும்போது ‘அப்பாடான்னு’ இருக்கும் விவசாயிக்கு.
இதில் பழம் பிடுங்க ஆள் கிடைக்காது. சம்பளம் அதிகம். சம்சாரிக்கு கட்டுபடி ஆகாது. இருந்தாலும் வேறு வழியில்ல. உரிய நாளில் பிடுங்கலன்னா மயில் தின்னுரும். ஒரு செடி நாலு ஈத்துவிடும். ஒரே நேரத்துல ஒரு குவிண்டாலையும் களத்துல சேர்த்துற முடியாது. அதுக்கு பாடுபடனும்.
இதுல போன வருசம் உரிய விலை கிடைக்கல. மழை பெய்ஞ்சும் கெடுத்திருது, பெய்யாமலும் கெடுத்துருது. இந்த வருசம் மழை இல்ல. இங்க பயிரிடுற முண்டு வத்தல், சம்பா வத்தல் மலேசியா, சிங்கப்பூர், சவூதி வரைக்கும் புகழ்பெற்றது.
போன மாசம் பெஞ்ச மழை மேல் நம்பிக்கை வச்சு முண்டு வத்தல் செடி வளர்ந்து வந்தது. இப்ப ஒரு மழை பெஞ்சா போதும் கிடுகிடுன்னு மிளகாய் வந்துரும். ஆனா மழையைக் காணோம். சுத்துப்பட்டு விவசாய சனம் மழைய எதிர்பார்த்து காத்திருக்குது.
போன வருசம் குவிண்டாலுக்கு பதினஞ்சாயிரம் போக வேண்டிய வத்தல் ஏழாயிரத்துக்குத்தான் போச்சுது. இந்த வருசம் அதுக்குக் கூட வழியில்லை. இந்த பாழாப்போன மழை எப்ப வருமோ தெரியல.
உலகப்புகழ் பெற்ற தரமான விளாத்திகுளம் வத்தல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா அழியுது. விவசாயிகள் மக்காச்சோள விதைப்புக்கு மாறிகிட்டு இருக்காங்க. ஒரு ஏக்கர் வத்தல் விவசாயத்துக்கு அம்பதினாயிரம் செலவு செஞ்சும் குவிண்டால் ஆறாயிரம் அப்படின்னு அடிமாட்டு விலைக்கு கேட்டா விவசாயிக்கு எப்படி கட்டுபடி ஆகும்.
விவசாயிகளோட கோரிக்கை என்னான்னா, இடைத்தரகர்கள் இல்லாம அரசே நேரடியா கொள்முதல் செய்யனும். அதிக மழை இல்லன்னா வறட்சிங்கிற நிலையில் சூதாட்டத்தைப் போல இருக்கிற விவசாயத்தை அரசு தலையிட்டு பாதுகாக்கனும். விவசாயிகளை காப்பாத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கு. இல்லன்னா இதையெல்லாம் நாளைக்கு இறக்குமதி செஞ்சு சாப்பிடனும். இன்னொருத்தன் கையை நாம் எதிர்பார்க்கனும். விவசாயத்தை பாதுகாக்க அரசு வரலைன்னா விவாசாயிகளோட நாம் எல்லோரும் ஒன்னா சேர்ந்து போராட்டக் களத்துல இறங்குவோம்.
– ரஞ்சித்
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்,
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











