கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வெனிசுலா நாட்டின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் பாசிஸ்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது துணைவி சிலியா ஃபுளோரஸ் இருவரையும் கடத்தியது. அதை நியாயப்படுத்திக் கொள்வதற்காக போதைப்பொருள் பயங்கரவாத சதியில் மதுரோ ஈடுபட்டதாகப் பொய் குற்றஞ்சாட்டி அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தி சிறையில் அடைத்துள்ளது.
வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களை அபகரிப்பதற்காகவே வெனிசுலா மீது இந்த மேலாதிக்க போரைத் தொடுத்துள்ளது டிரம்ப் அரசு. இத்தாக்குதலைக் கண்டித்து வெனிசுலா உள்ளிட்டு உலகின் பல நாடுகளிலும் அமெரிக்காவிலும் கூட மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், வெனிசுலாவின் இறையாண்மையைத் துளியும் மதிக்காமல் அந்நாட்டைப் பணிய வைப்பதற்காக அமெரிக்கா நெருக்கடி கொடுப்பது இது முதன்முறையல்ல.
2001-இல் அப்போதைய அதிபர் ஹூகோ சாவேஸ் அரசாங்கம், 1999-ஆம் ஆண்டு பொலிவேரியன் அரசியலமைப்பில் உள்ள இறையாண்மை விதிகளைப் பின்பற்றி ஒரு ஹைட்ரோ-கார்பன் சட்டத்தை இயற்றினார். அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட ஆட்சியை நடத்தினார். அது முதலே வெனிசுலாவை பணிய வைப்பதற்கான தாக்குதல்கள் தொடங்கிவிட்டன. இவற்றில் சிலவற்றை இங்கு பட்டியலாகக் குறிப்பிடுகிறோம்.
- அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy) மற்றும் யு.எஸ்-எய்ட் (USAID) ஆகியவற்றின் மூலம் பொலிவேரிய எதிர்ப்பு கொண்ட சமூக மற்றும் அரசியல் குழுக்களுக்கு அமெரிக்கா நிதியளித்தது. (2001)
- 2002-இல் வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கு உள்ளது.
- யு.எஸ்-எய்ட் – யின் “மாற்றத்திற்கான முன்முயற்சி அலுவலகத்தால்” (Office of Transtition initiatives) வெனிசுலாவிற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. [வெனிசுலாவில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.] (2002)
- மரியா கொரினா மச்சாடோ தலைமை தாங்கிய சுமேட் (எங்களுடன் சேருங்கள்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பொது வாக்கெடுப்பின் மூலம் யூகோ சாவேஸின் ஆட்சியை கவிழ்க்க முயன்றதற்கு அமெரிக்கா நிதியுதவி அளித்தது. (2003 – 2004)
- சாவேஸின் ஆதரவு தளத்திற்குள் ஊடுருவதால், சாவேஸ் ஆதரவு இயக்கத்தைப் பிளவுப்படுத்துதல், சாவேஸை தனிமைப்படுத்துதல், சுமேட் போன்ற குழுக்களை உருவாக்குதல் மற்றும் அமெரிக்காவின் முக்கிய வணிக நலன்களைப் பாதுக்காப்பதற்காக ஒரு ஐந்து அம்ச உத்தியை உருவாக்கியது. (2004)
- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெனிசுலாவை ஒரு ‘அபாயகரமான அச்சுறுத்தல்’ என அறிவித்தார். இந்த உத்தரவு வெனிசுலா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கான அடிப்படையை உருவாக்கியது. (2015)
- அமெரிக்காவின் வணிக சந்தைகளை பயன்படுத்துவதற்கு வெனிசுலாவிற்கு தடை விதிக்கப்பட்டது. (2017)
- அமெரிக்காவின் இத்தடைகளை பின்பற்றுமாறு சர்வதேச வங்கிகள் மற்றும் கப்பல் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக, இங்கிலாந்து வங்கி வெனிசுலாவின் மத்திய வங்கியில் உள்ள தங்க இருப்புகளை பறிமுதல் செய்தது. (2018)
- அமெரிக்காவின் அனுமதியுடன் ஜூவான் குவைடோவை இடைக்கால அரசாங்கத்தின் அதிபராக நியமிப்பது, கிளர்ச்சியை ஒருங்கிணைப்பது (தோல்வியடைந்துவிட்டது), வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை முடக்குவது மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது என செயல்பட்டுள்ளது. (2019)
- ஆபரேசன் கிடியான் (Operation Gideon) மூலம் மதுரோவை கடத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. கூடுதலாக, மதுரோவை கைது செய்வதற்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் வெனிசுலா மீது அதிபட்ச அழுத்தத்தை ஏற்படுத்த உலக நாணய நிதியத்தின் (IMF) மூலம் அதன் சொத்துகளை முடக்கியது. (2020)
- அமெரிக்காவின் ஆசிபெற்ற வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவிற்கு கடந்தாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது. நோபல் கமிட்டி மதுரோவை ராஜினமாக செய்யக் கூறியது. (2025)
- வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொய் குற்றஞ்சாட்டி வெனிசுலாவின் படகுகள் மீது தாக்குதல் நடத்தியது; வெனிசுலாவை முற்றுகையிடுவதற்காக ஒரு கப்பற்படையை நிலைநிறுத்தியது; வெனிசுலாவிலிருந்து வந்த எண்ணெய் டேங்கர்களை கைப்பற்றியது (2025-26) என அமெரிக்கா தொடர்ந்து வெனிசுலாவிற்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாகவே தற்போது வெனிசுலா அதிபர் மதுரோவை கடத்தியுள்ளது. அந்நாட்டில் அமெரிக்க ஆதரவு ஆட்சியை நடத்துவதற்கு பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருகிறது.
போர்வெறி பிடித்த அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவ எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு மேல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலே சாட்சி.
2003-ஆம் ஆண்டு ஈராக் மீது போர் தொடுத்தது முதல் தற்போது அடாவடியாக வெனிசுலாவின் அதிபரைக் கைது செய்தது வரை அதன் பட்டியல் நீண்டுகொண்டு செல்கிறது. அமெரிக்க மக்கள் “போர் வேண்டாம்” என மிகப்பெரிய பேரணியை நடத்தியும் உலகின் பெரும்பாலான நாடுகள் எச்சரித்தும் கூட 2003-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேர் இணைந்து ஈராக் மீது சட்டவிரோத போரைத் தொடுத்தனர். தற்போது, வெனிசுலா மீதான தாக்குதல் தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் நிலைத்தன்மையை பாதிப்பிற்குள்ளாக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி பாசிஸ்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தாக்குதல் தொடுத்துள்ளது.
போர்வெறி பிடித்த அமெரிக்க ஓநாய்களின் இரத்த வெறியால் ஈராக் முதல் வெனிசுலா வரை மக்கள் செத்து மடிக்கின்றனர். ஈராக் மீதான சட்டவிரோத போரில் பத்தாண்டில் பத்து இலட்சம் மக்களை அமெரிக்கா கொலை செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.
ஜனவரி 4 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடவிருந்த நிலையில், தனது வருடாந்திர உரை நிகழ்த்துவதற்காக டிரம்ப் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்க காங்கிரஸில் வேண்டுமானால் டிரம்பிற்கு கைத்தட்டல் கிடைக்கலாம். ஆனால், இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இரு தசாப்தங்களாக வெனிசுலா மீது தொடுக்கப்பட்டுவரும் ‘ஹைபிரிட் போரால்’ இலட்சக்கணக்கான மக்கள் துன்பப்படுவதும் அதற்கான விலையாக உள்ளது. அமெரிக்க அரசின் கொட்டத்தை அடக்கும் வகையில் உலகளவில் மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் இல்லாமல் இது சாத்தியப்படாது.
மூலக் கட்டுரை: எம்.ஆர்.ஆன்லைன்
![]()
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











