ஈரானில் மக்கள் போராட்டம்: அமெரிக்க சதிகளை முறியடிப்போம்!

தற்போதைய ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னேயும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே முதன்மை பங்காற்றுகின்றன. இதனை மக்களுக்கு எடுத்துக் கூறி ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ரானில் கடந்த மூன்று வாரங்களாக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப்போராட்டங்களில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்துகொண்டு ஜனநாயக வேடம் போட்டுவந்த மன்னர் ஷாவின் ஆட்சி அதிகாரம் 1979-இல் அயதுல்லா கோமினி தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூக்கி எறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 47 ஆண்டுகளாக ஈரானில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேசமயம், இஸ்லாமிய மத அடிப்படையிலான சட்டங்களை நடைமுறைப்படுத்தி பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும், மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டும் வருகிறது.

ஈரான் அரசின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தனது கொள்ளைக்கும் மேலாதிக்கத்திற்கும் சவாலாக இருந்து வருவதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. ஈரானின் பல பில்லியன் டாலர்களை அந்நிய வங்கிகளில் முடக்கி வைத்துள்ளது. இவற்றால் ஈரானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி, நாணயத்தின் மதிப்பு அதள பாதளத்திற்கு சரிவு, அதன் விளைவாக கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாணவர்கள், தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. மேலும், ஈரான் அரசின் ஜனநாயக உரிமைகள் பறிப்பு, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவை மக்களிடம் ஏற்படுத்தியுள்ள எதிர்ப்புணர்வு ஆயிரக்கணக்கான மக்களை வீதிக்குக் கொண்டுவந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் போராட்டம் புதிய உச்ச நிலையை அடைந்து வருகிறது.

இந்நிலையில், ஈரானில் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, மக்களின் போராட்டங்களை ஆதரிப்பது போல நாடகமாடி, மீண்டும் ஷா கும்பலின் ஆட்சியை நிறுவுவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. இதன் மூலம் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க – இஸ்ரேல் அதிகாரத்தை கேள்விக்கிடமற்ற முறையில் நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறது.

குறிப்பாக, ஈரானில் நடந்துவரும் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக இணைய வசதிகளைச் செய்து கொடுக்க அமெரிக்கா முயன்று வருகிறது. இவை மட்டுமின்றி மேலும் பல மறைமுக வழிகளில் அமெரிக்கா ஈரான் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் அதனைக் கைப்பற்றவும் முயன்று வருகிறது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டுவது ஈரானின் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தி மக்களை மேலும் ஆத்திரங்கொள்ளச் செய்யும் நடவடிக்கையே ஆகும்.

சென்ற ஆண்டில், தனது மேலாதிக்க நலன்களுக்கு ஈரானை அடிபணிய வைப்பதற்கு இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தொடுத்த போரின் தொடர்ச்சியாகவும் போராட்டங்களைத் தூண்டிவிடும் அமெரிக்காவின் இந்த சதி வேலைகள் அமைந்துள்ளன.

வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை ஆக்கிரமிப்பதற்காக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்று போர் கைதியாக வைத்துள்ளது. இதன் மூலமாக, அந்த நாட்டை ஆக்கிரமித்து அடிமைப்படுத்த முயன்று வருகிறது. “கிரீன்லாந்தை ஆக்கிரமிப்போம்” என்றும் அதற்கு மற்ற நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ச்சியாகக் கொக்கரித்து வருகிறார். கரீபியன் தீவுகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளதாக அமெரிக்கா தற்போது கூச்சலிட்டு வருகிறது.

அமெரிக்காவின் இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், சரிந்துவரும் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படுபவை ஆகும். ஆகையால், அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒவ்வொரு நாட்டிலும் தீவிரப்படுத்த வேண்டும். இதன் மூலமே போர் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

அமெரிக்காவின் கைப்பாவையாக மாறிப்போன ஐக்கிய நாடுகள் சபை கூறும் பொதுவான கண்டனங்களைக் கூட அமெரிக்கா சகித்துக்கொள்ளத் தயாராக இல்லை. சர்வதேச சட்டங்கள் எதையும் மதிக்காத ஒரு புதிய இயல்பு நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதுமான மக்களின் போராட்டங்கள் மட்டுமே அமெரிக்காவைப் பணிய வைக்கும்.

உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் நோக்கம், பிற நாடுகளின் இயற்கை வளம் மனிதவளம் போன்றவற்றை ஒட்டச் சுரண்டுவதாகும். அவ்வகையான மேலாதிக்கமானது, அந்த நாடுகளின் இறையாண்மையைப் பறிப்பது மட்டுமின்றி, மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் கடுமையாக நசுக்குவதில் சென்று முடியும். தற்போதைய ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னேயும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே முதன்மை பங்காற்றுகின்றன.

இதனை மக்களுக்கு எடுத்துக் கூறி ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். நாட்டின் இறையாண்மை, சுயசார்பு, மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற ஜனநாயக உரிமைகளை இதன் வழியே நிலைநாட்ட வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு, சீன ஏகாதிபத்திய ஆதரவு என்றுமே தீர்வாகாது. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு மக்களை ஒன்றிணைக்க, மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரித்து, புரட்சிகர ஜனநாயக சக்திகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைக்க ஈரான் ஆளும் வர்க்கங்களில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரிவு முன்வரவேண்டும்.

அந்த வகையில் மேற்கொள்ளப்படும் ஓர் ஆட்சி அதிகாரத்தால் மட்டுமே, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் இறுதிவரை உறுதியாக நின்று நீடிக்க முடியும்.


தங்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க