ஹரியானா: ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஹரியானா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் பா.ஜ.க ஆட்சியில் தலித் சிறுமிகள், இளம்பெண்கள் காமவெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது.

0

ரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் 28 வயது இளம்பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 29 அன்றிரவு வீட்டிற்குச் செல்வதற்காக சாலையோரத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது காரில் வந்த இரண்டு ஆண்கள் அவரை பத்திரமாக வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர். அதனை நம்பி அவரும் காரில் ஏறியுள்ளார்.

ஆனால், அக்கும்பல் அவருடைய வீட்டிற்கு செல்லாமல் குர்-காவ் நோக்கிச் சென்றுள்ளனர். அதனை எதிர்த்து பெண் கேள்வி கேட்டதும் அவரை மிரட்டி, ஓடும் காரில் இரண்டரை மணி நேரம் வரையில் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதிகாலை மூன்று மணிக்கு எஸ்.ஜி.எம். நகரின் ராஜா சௌக்கில் உள்ள முலா ஹோட்டல் அருகே ஓடும் காரிலிருந்து பெண்ணை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளது அக்கும்பல்.

இதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த அப்பெண் தன்னுடைய சகோதரியை கைப்பேசி மூலம் அழைத்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சகோதரி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். காரிலிருந்து தூக்கி வீசப்பட்டதால் பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட காயத்தில் பன்னிரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கோட்வாலி போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் இரண்டு கொடூரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே டிசம்பர் மாதத்தில் ஹரியானாவின் நூஹ் பகுதியில் 17 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மிரட்டி வயல்வெளிக்கு வரவழைத்து இரவு முழுவதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதனைக் காணொளியாகப் பதிவு செய்த அக்கும்பல், இதுகுறித்து வெளியே சொன்னால் காணொளியை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி மறுநாள் காலை 11 மணிக்கு சிறுமியை விடுவித்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே அச்சிறுமியைத் தாக்கி காணொளி எடுத்த அக்கும்பல், சிறுமியிடம் கைப்பேசியைக் கொடுத்து தொடர்ந்து தொடர்பில் இல்லாவிட்டால் காணொளியைப் பரப்பி ‘குடும்ப மானத்தை’ எடுத்துவிடுவோம் என்று மிரட்டி வந்துள்ளது. இவ்வாறு மிரட்டியே சிறுமியை வயல்வெளிக்கும் வரவழைத்துள்ளது.

அதேபோல், கடந்த ஜனவரி 12 அன்று நள்ளிரவில் பேருந்தில் பயணித்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண்ணை பின்தொடர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஹரியானாவின் பகதூர்கரில் உள்ள ஒரு தாபாவிற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இவ்வாறு ஹரியானா மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக. ஹரியானா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் பா.ஜ.க ஆட்சியில் தலித் சிறுமிகள், இளம்பெண்கள் காமவெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது. பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் இக்கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க