இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒடிசா மாநிலம், நீண்ட காலமாகவே பழங்குடியின மக்களின் பண்பாட்டுச் செழுமைக்கும், ஜகன்னாதர் கோயில் சார்ந்த மதச்சடங்குகளுக்கும் பெயர்பெற்றது. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, குறிப்பாக 2024-இல் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இம்மாநிலம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், இந்துராஷ்டிர பரிசோதனைக் கூடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு, சிறுபான்மையினர் மீது ஏவப்பட்ட அதே நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறை, இன்று ஒடிசாவின் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் முழுவீச்சில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ‘பசுக் கடத்தல்’ என்ற பெயரில் பாலசோரில் அரங்கேறிய இஸ்லாமிய இளைஞர் மகந்தர் முகமதுவின் படுகொலை ஒரு தனித்த தாக்குதல் அல்ல. அது ஒரு நீண்ட, திட்டமிட்ட பாசிச அரசியலின் தொடர்ச்சியாகும். பசுப் பாதுகாப்பு, வங்கதேச ஊடுருவல் தடுப்பு, மதமாற்றத் தடை என்ற பெயர்களில் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் வன்முறை வெறியாட்டங்கள், அரசின் நேரடி ஆதரவுடனும், போலீசுதுறையின் கள்ளக் கூட்டணியுடனும் அரங்கேற்றப்படுகின்றன. பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோதே, அதன் ‘மென் இந்துத்துவா’ போக்கின் காரணமாக சங் பரிவார் அமைப்புகள் ஒடிசாவில் வேரூன்ற அனுமதிக்கப்பட்டன. இப்போது, மோகன் சரண் மாஜி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, அரசு எந்திரமே ஒரு காவிப் படையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.
பாலசோர் படுகொலை: காவி கும்பலின் வெறியாட்டம்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஜனவரி 14, 2026 அன்று, 35 வயதான ஷேக் மகந்தர் முகமது என்ற இளைஞர், ‘பசுக் காவலர்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இந்துத்துவக் குண்டர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு வளர்க்கப்படும் வெறுப்பு அரசியலின் கோர முகத்தை இக்கொலை இன்னொருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. மகந்தரைத் தாக்கிய அந்தக் கும்பல் அவருக்குத் தெரிந்தவர்களாகவே இருந்துள்ளனர். நாயக்கன் கொட்டாய் கிராமத்தைச் சூறையாடிய வன்னிய சாதிவெறியர்கள் பலரும், பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்களாக இருந்தனர் என்ற அதிர்ச்சிகரமான உண்மையுடன் இது ஒத்துப்போகிறது என்பதை இவ்விடத்தில் நினைவுகூர வேண்டியுள்ளது.
உயிரைப் பறித்த உதவி
கொலை செய்யப்பட்ட மகந்தரின் சகோதரர் ஜிதேந்தர் முகமது கூறுகையில், “எனது அண்ணன் ஒரு கொத்தனார். மகர சங்கராந்தி அன்று, கால்நடை ஏற்றிச் சென்ற வண்டிக்கு உதவ ஆள் இல்லாததால், ஓட்டுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உதவச் சென்றார். அந்த உதவிதான் அவர் உயிரைப் பறித்துவிட்டது. அவரைத் தாக்கியவர்கள் வெளியாட்கள் அல்ல; வேலைக்குச் செல்லும் வழியில் அவர் தினமும் பார்க்கும் உள்ளூர் நபர்கள்தான். அவர் ஒரு இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று குமுறுகிறார்.
‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வைத்து வெறியாட்டம்
ஜனவரி 14 அன்று அதிகாலை, பாலசோரின் ஜெயதேவா கஸ்பா பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல், ஓட்டுநரையும் மகந்தரையும் சூழ்ந்துகொண்டு வெறித்தனமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த மகந்தர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக வலைதளங்களில் பரவிவரும் இத்தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று இந்த மதவெறியாட்டத்தின் சாட்சியாக உள்ளது.
இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்கும் மகந்தரைச் சூழ்ந்து நிற்கும் அந்த காவி கும்பல், கையில் தடிகளுடன் அவரை மிரட்டுகிறது. “ஜெய் ஸ்ரீ ராம் சொல்”, “பசு என் தாய் என்று சொல்” என அவரை அடித்து வற்புறுத்துகின்றனர். உயிர் பயத்தில் அந்த இளைஞரும் அவர்கள் சொன்னதைத் திரும்பச் சொல்கிறார். இத்தனைக்குப் பிறகும் அந்த இரத்தவெறி பிடித்த கும்பல் அவரை உயிருடன் விடவில்லை. இது குஜராத் கலவர காலத்தின் போதோ அல்லது 2017-இல் ஜுனைத் கான் ரயிலில் கொல்லப்பட்ட போதோ நடந்த அதே பாணியிலான தாக்குதலாகும்.
சகோதரரின் வாக்குமூலம்: “உடலெல்லாம் தையல்கள்”
“மருத்துவமனையில் என் அண்ணனைப் பார்த்தபோது, அவர் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை. தலை, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க தையல்களும் கட்டுக்களும்தான் இருந்தன. 5 முதல் 8 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதாக இறக்கும் தறுவாயில் அவர் கூறினார். தாக்கியவர்களின் பெயர்களையும் அவரே சொன்னார்.” என்கிறார் சகோதரர் ஜிதேந்தர். குடும்பத்தினர் அளித்த புகாரில் பாபு நன்னா, பவன், பிந்து, நேபாளி, சினு ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மூவர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசுதுறையின் காவி விசுவாசம்:
கொலை வழக்கை விபத்தாக மாற்றிய சதி
இந்தச் சம்பவத்தில் பாலசோர் சதார் போலீசு நிலைய போலீசின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களின் காவி விசுவாசத்தைக் காட்டுகிறது. உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் எஃப்.ஐ.ஆர்-இல், இது ஒரு கும்பல் படுகொலை என்பதையே மறைத்துவிட்டனர்.
“வாகனம் தாறுமாறாக ஓடியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது” என்று மொட்டையாகக் குறிப்பிட்டு, தாக்குதல் பற்றிய ஒரு வார்த்தைக் கூட இல்லாமல் வழக்கை நீர்த்துப்போகச் செய்தனர். பறிக்கப்பட்ட பசுவை கோசாலைக்கு அனுப்பிய போலீசுதுறைக்கு, அடித்துக் கொல்லப்பட்ட மனித உயிரைப் பற்றி அக்கறை இல்லை.
மகந்தரின் குடும்பத்தினர் போராடி, உண்மையான புகாரை அளித்த பிறகே, அது கொலை வழக்காக (BNS 103(2)) பதிவு செய்யப்பட்டது. ‘பசுப் பாதுகாப்பு’க் கும்பலைக் காப்பாற்றுவது மற்றும் கொல்லப்பட்டவர் மீதே “பசுக்கடத்தல்” பழி சுமத்துவது என்ற தெளிவான காவி சதித்திட்டத்தை முதல் எஃப்.ஐ.ஆர். தெளிவாக வெளிப்படுத்துகிறது.
கொலையாளிகளுக்கு ஆதரவாக பஜ்ரங் தளம்
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, பாலசோர் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு பஜ்ரங் தளம் போராட்டம் நடத்தியது. “எங்கள் பசு பாதுகாப்புத் தலைவர் பவன் பாய் எந்தக் காரணமும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூச்சலிட்டனர். இதன் மூலம் இந்தக் கொலையின் பின்னணியில் இருப்பது யார் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது. பஜ்ரங் தளம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவிலும், இஸ்லாமிய இளைஞர் இறந்தது ‘விபத்து’ என்றே திரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இறக்கும் தருவாயிலும் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட மகந்தரின் காணொளி ஒன்றும் அவரது உறவினர்கள் மூலம் தற்போது ஆதாரமாக வெளியாகியுள்ளது. இதன் மூலம் பஜ்ரங் தளத்திற்கு பக்கபலமாக ஒடிசா போலீசுதுறை கொலையாளிகளைக் காப்பாற்ற முயன்றது அம்பலமாகியுள்ளது.
பசு பயங்கரவாதம் – ஒரு பொருளாதாரப் போர்
ஒடிசாவில் நடக்கும் பசுப் பாதுகாப்பு வன்முறைகளை வெறும் மத உணர்வு சார்ந்த விசயமாக மட்டும் பார்க்க முடியாது. இது இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகும்.
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பசுப் பாதுகாப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை என்றாலும், அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நடைமுறையில் போலீசுதுறையிடமிருந்து பறிக்கப்பட்டு, பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற காவி குண்டர்களிடம் மறைமுகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2026 பாலசோர் சம்பவத்திற்கு முன்னதாகவே, நவம்பர் 20, 2025 அன்று பத்ராக் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இதை உறுதிப்படுத்துகிறது. 17 மாடுகளை ஏற்றிச் சென்ற ஒரு பிக்கப் வேனை ‘பசுப் பாதுகாப்பு’க் குண்டர்கள் விரட்டிச் சென்றனர். அவர்கள் ஏற்படுத்திய பீதியால், வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஆனால், பசுக்களைக் காப்பதாகச் சொல்லும் அக்கும்பல், கவிழ்ந்த வாகனத்திற்குத் தீ வைத்தது.
இது, காவி பயங்கரவாதிகளுக்கு பசுவின் உயிர் முக்கியமல்ல; இஸ்லாமிய வியாபாரியின் சொத்து அழிக்கப்பட வேண்டும், அவர் அச்சுறுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
தலித்துகள் மீதான தாக்குதல்: கஞ்சாம் சம்பவம்
பசு பயங்கரவாதம் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, தலித்துகளையும் குறிவைக்கிறது. ஜூன் 2025-இல், கஞ்சாம் மாவட்டத்தில் பாபுலா நாயக் (54) மற்றும் புலு நாயக் (42) ஆகிய இரண்டு தலித் ஆண்கள் பசுக்களை ஒரு திருமண வீட்டிற்குப் பரிசாகக் கொடுக்கக் கொண்டு சென்றனர். அவர்களை வழிமறித்த ‘பசுப் பாதுகாப்பு’க் குண்டர்கள் ரூ.30,000 பணம் பறிக்க மூயன்றுள்ளனர். ஆனால், தலித் ஆண்கள் அதற்கு மறுத்ததால் மொட்டை அடிப்பது, முழங்காலில் ஊர்ந்து செல்ல வற்புறுத்தியது, சாக்கடை நீர் குடிக்க வைப்பது, புல் தின்ன வைப்பது போன்ற கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளனர்.
தலித் ஆண்களை மனிதக்கழிவுகளை உண்ண வைப்பது போன்ற மிகக் கேவலமான சித்திரவதைகளையும் அக்கும்பல் அரங்கேற்றியது. இது சாதிய ஆதிக்கமும் மதவெறியும் இணையும் புள்ளி. பசு என்பது இங்கு ஒரு புனிதச் சின்னம் அல்ல; அது ஒடுக்குமுறையின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘வங்கதேச ஊடுருவல்’ என்ற பொய் – புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்
பா.ஜ.க-வின் அகில இந்தியத் திட்டமான ‘வங்கதேச ஊடுருவல் எதிர்ப்பு’ என்பது ஒடிசாவில் மிகவும் ஆபத்தான வடிவத்தை எடுத்துள்ளது. ஒடிசாவிற்கு கட்டட வேலைகளுக்கும், பிற கூலி வேலைகளுக்கும் மேற்கு வங்கத்திலிருந்து வரும் இஸ்லாமியத் தொழிலாளர்கள், “வங்கதேசிகள்” என்று முத்திரை குத்தப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள், சிறையிலடைத்து ஒடுக்கப்படுகிறார்கள்.
சம்பல்பூர் படுகொலை: ஆதார் அட்டை இருந்தும் கொலை
டிசம்பர் 2025-இல் சம்பல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜூயல் ராணா என்ற 19 வயது இளைஞரின் படுகொலை, ஒடிசாவில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாகும்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூயல் ரானா மற்றும் அவரது நண்பர்கள் கட்டுமானப் பணிக்காக ஒடிசாவிற்கு வந்திருந்தனர். டிசம்பர் 24, 2025 அன்று மாலை தேநீர் அருந்தச் சென்ற அவர்களைச் சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், அவர்கள் வங்காள மொழியில் பேசியதைக் காரணம் காட்டி, அவர்களை ‘வங்கதேச ஊடுருவல்காரர்கள்’ என்று மிரட்டியது.
“நாங்கள் இந்தியர்கள்தான்” என்று கூறி அவர்கள் தங்களது ஆதார் அட்டையைக் காட்ட முயன்றபோதும், அக்கும்பல் அதை ஏற்க மறுத்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜூயல் ரானா பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பல்பூர் போலீசுதுறை இச்சம்பவத்தை “திடீர் ஆத்திரமூட்டல்” என்று கூறி, இதன் பின்னால் இருந்த வெறுப்பு அரசியலை மறைக்க முயன்றது. ஆனால், தாக்குதலுக்கு முன் மத அடையாளத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு “ஆதார் அட்டையைக் காட்டு” என்று கேட்டது திட்டமிட்ட செயல் என்பதை தொழிலாளர்களின் ஒப்பந்ததாரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல மறுத்தால் அடி: கஞ்சாம் சம்பவம்
நவம்பர் 2025-ல், கஞ்சாம் மாவட்டத்தில் ராகுல் இஸ்லாம் என்ற 24 வயது மேற்கு வங்க வியாபாரி தாக்கப்பட்டார். கொசுவலை மற்றும் குளிர்கால ஆடைகளை விற்றுக் கொண்டிருந்த அவரை, ஒரு கும்பல் வழிமறித்து ‘வங்கதேசி’ என்று கூறி தாக்கியது. அவர் தனது ஆதார் அட்டையைக் காட்டியும், அது போலி என்று தூக்கியெறியப்பட்டது.
அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவோம் என்று மிரட்டி, வலுக்கட்டாயமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட வைத்தனர். இது ஒடிசாவில் இஸ்லாமியர்கள் வாழ்வதற்கான உரிமையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் உயிருக்குப் பயந்து ஒடிசாவை விட்டு வெளியேறி வருகின்றனர். இது ஒடிசாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றாலும், சங் பரிவாரின் நோக்கம் ‘இந்து ராஷ்டிரம்’ அமைப்பதே தவிர, மக்களின் வாழ்வாதாரம் அல்ல.
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் – பிணங்களின் மீதான போர்
இஸ்லாமியர்களைப் போலவே, ஒடிசாவின் பழங்குடியின கிறிஸ்தவர்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். 2008 கந்தமால் கலவரத்திற்குப் பிறகு, இப்போது ஒடிசா மீண்டும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது. பா.ஜ.க அரசு அமைந்த பிறகு, உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் அமைதி, மரியாதை மறுக்கப்படுகிறது.
ஒடிசாவின் கிராமப்புறங்களில், கிறிஸ்தவர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறினாலொழிய உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று இந்துத்துவ கும்பல் மிரட்டுகிறது. இது ஒரு புதிய வகை வன்முறை.
பிணங்களின் மீதான ‘கர் வாப்சி’
புதாய் ஹரிஜன் என்ற பெண், தனது கணவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தபோது, 30-40 பேர் கொண்ட கும்பல் வந்து உடலுக்கு “சுத்தி” சடங்கு செய்து, வலுக்கட்டாயமாக இந்து முறைப்படி எரித்தது. “அவர்கள் என் கணவரின் பிணத்தைக் கூட விட்டுவைக்கவில்லை, அதை இந்துவாக மாற்றினர்” என்று அந்தப் பெண் கதறினார்.
புதைகுழி மறுப்பு
அக்டோபர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை, குறைந்தது நான்கு பழங்குடியின குடும்பங்கள் மற்றும் ஒரு தலித் குடும்பத்திற்கு பொது இடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், ஏற்கெனவே புதைக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு காட்டில் வீசப்பட்டுள்ளன.
பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீதான தாக்குதல்
ஆகஸ்ட் 7, 2025 அன்று, ஜலேஸ்வர் பகுதியில் இரண்டு கத்தோலிக்க பாதிரியார்கள், இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் ஒரு மதபோதகர் மீது பஜ்ரங் தளக் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் ஒரு “நினைவுத் திருப்பலி” நிறைவேற்றச் சென்றிருந்தனர். ஆனால், “மதமாற்றம் செய்கிறார்கள்” என்று பொய்யான வதந்தியைப் பரப்பி, 70 பேர் கொண்ட கும்பல் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
போலீசுதுறை சம்பவ இடத்திற்கு வந்த பிறகும், அவர்கள் முன்னிலையிலேயே பாதிரியார்கள் தாக்கப்பட்டனர். அவர்களது அலைபேசிகள் பறிக்கப்பட்டு, உடைக்கப்பட்டன. “இனிமேல் பி.ஜே.டி. ஆட்சி இல்லை, இது பா.ஜ.க ஆட்சி, இங்கே கிறிஸ்தவர்களை உருவாக்க முடியாது” என்று அக்கும்பல் முழக்கமிட்டது. இறுதியில், தாக்கியவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட பாதிரியார்களையே ‘விசாரணைக்கு’ அழைத்துச் சென்று, போலீசுதுறை தனது ‘விசுவாசத்தை’ நிரூபித்தது.
மல்காங்கிரி தாக்குதல்
ஜூன் 21, 2025 அன்று, மல்காங்கிரி மாவட்டத்தில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் புகுந்த 300-400 பேர் கொண்ட இந்துத்துவ கும்பல், 20 கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாகத் தாக்கியது. கோடாரிகள், கம்புகள், கற்களால் தாக்கப்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர்.
போலீசுதுறை இந்த வன்முறையை “சகோதரர்களுக்கு இடையிலான சண்டை” என்று கூறி நீர்த்துப்போகச் செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் “சமஸ்கிருதி பச்சாவோ அபியான்” (கலாச்சாரப் பாதுகாப்பு இயக்கம்) என்ற பெயரில் சங் பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
கட்டாக் கலவரம் – மதவெறியர்களின் திட்டமிட்ட சதி
ஒடிசாவின் வர்த்தகத் தலைநகரான கட்டாக், வரலாற்று ரீதியாக மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்றது. ஆனால், அக்டோபர் 2025-இல் அங்கு நடந்த வன்முறை, ஒடிசாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு விடப்பட்ட சவாலாக மாறியுள்ளது.
கலவரத்தின் துவக்கம்
அக்டோபர் 4, 2025 அன்று, தர்கா பஜார் பகுதியில் துர்கா பூஜை ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், மிக அதிக சத்தத்துடன் டி.ஜே. (DJ) இசை ஒலிக்கப்பட்டது. இதை எதிர்த்த உள்ளூர் மக்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதுவே கலவரத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
விஷ்வ இந்து பரிஷத்தின் சதி
கலவரம் நடந்த மறுநாள் (அக்டோபர் 5), போலீசுதுறை அனுமதி மறுத்த பிறகும், விஷ்வ இந்து பரிஷத் ஒரு மாபெரும் இருசக்கர வாகனப் பேரணியை நடத்தியது. 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்பேரணியில், இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது மீண்டும் வன்முறைக்கு வித்திட்டது. கடைகள் சூறையாடப்பட்டன; தீ வைக்கப்பட்டன.
இணையச் சேவை முடக்கப்பட்டு, 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், வன்முறையைத் தூண்டிய முக்கியத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்குப் பதிலாக, இஸ்லாமிய இளைஞர்கள் குறிவைக்கப்பட்டனர்.
அக்டோபர் 6 அன்று, கட்டாக்கிற்கு அருகிலுள்ள குண்டுனி கிராமத்தில், இரண்டு இஸ்லாமிய இளைஞர்களைப் பிடித்து, அவர்களிடம் காவி கொடியைக் கொடுத்து, “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் “சிவாஜி மகராஜ் கி ஜெய்” என்று முழக்கமிட வைத்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். “இது மோகன் மாஜியின் அரசு, எங்களை யாரும் தடுக்க முடியாது” என்று அக்கும்பல் கூறியது காணொளியில் பதிவாகியுள்ளது.
போலீசுதுறை மற்றும் அரசாங்கத்தின் கள்ளக் கூட்டணி
ஒடிசாவில் நடைபெறும் இந்த வன்முறைகளில், போலீசுதுறை ஒரு பார்வையாளராக மட்டும் வேடிக்கை பார்க்கவில்லை; அது காவிப் படையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
எஃப்.ஐ.ஆர். மோசடி
மகந்தர் முகமது கொலையில், போலீசுதுறை முதலில் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர், அதை ஒரு சாலை விபத்து என்று சித்தரித்தது. பாதிக்கப்பட்ட குடும்பம் போராடிய பிறகே அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதேபோல், மல்காங்கிரி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை “குடும்பச் சண்டை” என்று திரித்தது.
பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்களில், அடித்துக் கொல்லப்பட்டவர் மீதே ‘பசுக்கடத்தல்’ வழக்கு பதிவு செய்யப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஷஹீதீன் குரேஷி கொல்லப்பட்டபோது நடந்த அதே பாணி ஒடிசாவிலும் பின்பற்றப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதும் வழக்கு பாய்வதால், அவர்கள் நீதிக்காகப் போராட அஞ்சும் நிலையை உருவாக்குகின்றனர்.
அரசியல் அழுத்தம்
பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் போலீசு நிலையங்களை முற்றுகையிட்டு, கைது செய்யப்பட்ட தங்கள் ஆட்களை விடுவிக்கக் கோருகின்றனர். போலீசுதுறையும் அவர்களின் அரசியல் பலத்திற்குப் பணிந்து ‘விசுவாசமாக’ செயல்படுகிறது.
அரசியல் பின்னணி: பி.ஜே.டி. முதல் பா.ஜ.க வரை
ஒடிசாவில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், பா.ஜ.க-வுடன் கொண்டிருந்த சந்தர்ப்பவாதக் கூட்டணிதான் இன்றைய நிலைக்குக் காரணம். நவீன் பட்நாயக் ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க., அதன் விருப்பம் போல வளர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. 2008 கந்தமால் கலவரத்தின்போது பி.ஜே.டி.-பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.
இப்போது மோகன் சரண் மாஜி தலைமையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. மோகன் மாஜி, ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாரா சிங்கின் விடுதலைக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஒரு நபர் முதல்வராக இருக்கும் மாநிலத்தில், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புவது பகல் கனவுதான்.
‘டபுள் இன்ஜின்’ அரசின் சாதனை
பா.ஜ.க-வின் ‘டபுள் இன்ஜின்’ அரசு (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி) என்பது, வெறுப்பு அரசியலை இரண்டு மடங்கு வேகத்தில் அமல்படுத்துவதாகவே உள்ளது.
புதிய சட்டங்கள்
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கும்பல் படுகொலைக்கு மரண தண்டனை வரை விதிக்க முடியும் என்று சட்டம் சொன்னாலும், நடைமுறையில் பசுப் பாதுகாப்புக் குண்டர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. மாறாக, அவர்களுக்குக் போலீசுதுறையின் பாதுகாப்புதான் கிடைக்கிறது.
பழங்குடியினர் பிளவு
பழங்குடியினரை இந்துக்களாக மாற்றுவது மற்றும் அவர்களைக் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் திருப்புவது என்பது சங் பரிவாரின் நீண்டகாலத் திட்டம். வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற அமைப்புகள் மூலம் பழங்குடியினப் பண்பாடு அழிக்கப்பட்டு, தொடர்ந்து காவிமயமாக்கப்பட்டு வருகிறது.
ஒடிசாவில் நடந்து கொண்டிருப்பது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல; அது ஒரு பாசிசத் தாக்குதல். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய இரு சிறுபான்மை சமூகங்களையும் எதிரிகளாகச் சித்தரித்து, பெரும்பான்மை இந்துக்களைத் திரட்டும் சங் பரிவாரின் பாசிச அரசியல் திட்டம் இது.
ஒடிசாவின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்த மதக்கலவரங்கள் தேவைப்படுகின்றன. அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே மோகன் மாஜி அரசு தலைமையிலான பா.ஜ.க. செயல்படுகிறது. அதற்கு பசுப் பாதுகாப்பு என்பது ஒரு முகமூடிதான்.
அணிதிரள்வதே உடனடித் தேவை!
மகந்தர் முகமதுவின் படுகொலை, ஜூயல் ராணாவின் படுகொலை, கிறிஸ்தவர்களின் பிணங்கள் மீதான போர் – இவை அனைத்தும் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒன்றுதான்: பாசிசம் வாசலில் நிற்கவில்லை, அது வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டிருக்கிறது. போலீசுதுறை, நிர்வாகம், ஊடகம் என அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு வரும் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, பாசிச எதிர்ப்பு அமைப்புகளின் தலைமையில் அணிதிரள்வதே உடனடித் தேவை.
![]()
தமிழ்ச்சுடர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











