உத்தரப்பிரதேசம்: மீண்டும் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் காமவெறிப்பிடித்த மிருகங்களால் தலித் சிறுமிகள், இளம் பெண்கள் வயது வரம்பின்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுடன், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர். பா.ஜ.க. கும்பல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி, ஆர்ப்பாட்டம், மிரட்டலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

0

பாசிச பா.ஜ.க. ஆட்சி செய்துவரும் உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் ஃபர்சத்கஞ்ச் பகுதியில் காமவெறிப்பிடித்த இளைஞன் ஒருவனால் 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

டிசம்பர் 30-ஆம் தேதியன்று 13 வயது தலித் சிறுமி வயலுக்குச் சென்றுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த காமவெறியன் சிறுமியை தன்னுடைய கிணற்றிற்கு அருகே இழுத்துச் சென்று சிறுமி என்றும் பாராமல் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், இதனை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

கண்ணீருடன் வீட்டிற்குத் திரும்பிய சிறுமி தழுதழுத்த குரலில் அச்சத்துடன் தனக்கு நடந்த கொடூரத்தைத் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், இளைஞன் மீது போக்சோ மற்றும் எஸ்.சி-எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

ஆனால், அவனைக் கைது செய்யாமல், குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்குக் குழு அமைக்கப்பட்டுள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசு சாதாரணமாகக் கூறியுள்ளது. இது இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் போலீசின் மனநிலை கொடூரமாக மாற்றப்பட்டுள்ளதை உணர்த்துகிறது.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் காமவெறிப்பிடித்த மிருகங்களால் தலித் சிறுமிகள், இளம் பெண்கள் வயது வரம்பின்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுடன், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் ஜாமீனில் வெளிவந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைக் கொலை செய்யும் அதிர்ச்சிகர சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இக்குற்றவாளிகள் பாலியல் குற்றவாளிகளின் கூடாரமான பா.ஜ.க-வில் தங்களை இணைத்துக்கொள்வதும் பா.ஜ.க. கும்பல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி, ஆர்ப்பாட்டம், மிரட்டலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் இதற்குத் துலக்கமான சான்றாகும்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது; படிக்கவோ வேலைக்குப் போகவோ கூடாது; ஆண்களின் அடிமையாகவே இருக்க வேண்டும் என்ற மனு நீதியை நவீன முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை இதற்கான ஆயுதமாகக் கையிலெடுத்துள்ளது. தலித் பெண்கள் இதன் முதன்மை இலக்காக உள்ளனர்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க