அமெரிக்க அரசு அரசியல் ரீதியான பேச்சுகளை அரிதாகவே தடை செய்கிறது. இதற்கு பதிலாக, அரசாங்கத்திற்கு கிளம்பும் அரசியல் எதிர்ப்புகளை மடைமாற்றி “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்கிற வகையில் அதிகாரத்துவத்தையும் சட்ட நடைமுறைகளையும் (Bureaucracy and Procedure) கொண்டு ஒடுக்கி வருகிறது. குறிப்பாக, போராட்டக்காரர் அமெரிக்கர் அல்லாதவர் என்றால் குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் மூலமும் அமெரிக்கர் என்றால் குற்றப் புலனாய்வு மூலமும் கையாளுகிறது.
கடந்த பல தசாப்தங்களாக, அமெரிக்க அரசு இதே வழிமுறையை இயக்கங்ளிடமும் எதிர்ப்பாளர்களிடமும் பயன்படுத்தி வருகிறது. போர் எதிர்ப்பு போராட்டங்கள், கருப்பின விடுதலை இயக்கம், போர்டோ ரிக்கோ சுதந்திர ஆர்வலர்களின் அரசியல் போராட்டம், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு எதிரான பழங்குடியின நில உரிமையாளர்களின் போராட்டம் என அனைத்திலும் இதே அணுகுமுறையை பயன்படுத்தி ஒடுக்கி வருகிறது அமெரிக்க அரசு.
இதிலும், குறிப்பாக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு தனித்துவமான அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. ஏனெனில், அமெரிக்காவில் உள்ள இருகட்சிகளாலும் ஆதரிக்கப்படும் அமெரிக்க – இஸ்ரேலின் ‘நிர்வாகக் கட்டமைப்பை’ அமெரிக்காவிற்கு உள்ளிருந்தே பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரம் சவாலுக்குள்ளாக்குகிறது. இந்த அச்சுறுத்தலை சமாளிக்க முடியாமல் கூட்டாட்சி சட்ட அமலாக்கப் பிரிவினராலும் பாதுகாப்பு முகமைகளாலும் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அமெரிக்க அரசின் இந்த உத்தியை இயல்பாக புரிந்துகொள்கின்றனர். இதற்கு காரணம், அவர்களின் அரசியல் வாழ்க்கை நீண்டகாலமாக அமெரிக்க அரசின் முகமைகளாலும் அமைப்புகளாலும் தொடர்ந்து கண்கானிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இந்த அமைப்புகள், அவர்களின் அரசியல் எதிர்ப்பை ‘பாதுகாப்பு’ விவகாரங்களாகவும், போராட்டத்தை ‘ஆபத்தாகவும்’ சித்தரிக்கின்றன. குறிப்பாக சொல்வதானால், அரசியல் பிரச்சினையை நிர்வாக பிரச்சினையாக மாற்றுவது எனக் கையாளப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் இஸ்ரேல் ஆதரவு அமைப்புகள், செல்வாக்குமிக்க காங்கிரஸ் உறுப்பினர், மாணவத் தலைவர்கள், ஊடகங்கள் ஆகியவற்றைக் கொண்டு போராட்டக்காரர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம் செய்வது, பொதுக் கருத்தை உருவாக்குவது, அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது என ஒரு திட்டவகைப்பட்ட வகையில் செயல்படுகின்றன.
இந்த ஒடுக்குமுறை இருவழிகளில் கையாளப்படுகிறது. போராட்டக்காரர் அமெரிக்க குடிமகனாக இல்லாதபோது அரசு குடியேற்றச் சட்டத்தை பயன்படுத்துகிறது. உதாரணமாக, பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு பிறகு நாடு கடத்தப்பட்ட பாலஸ்தீன அமைப்பாளர் ராஸ்மியா ஓடே (Rasmieh Odeh) மற்றும் 1980, 1990-களில் “எல்.ஏ. 8” (Los Angeles Eight) விசயத்திலும் இந்த வழிமுறை கையாளப்பட்டதை நாம் பார்க்க முடியும்.
சமீபத்திய உதாரணமாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டதாரி மஹ்மூத் கலீல், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் தலைமை தாங்கியதற்காக, மார்ச் 8, 2025-ஆம் தேதி குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த குடியேற்றச் சட்டம், அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குகிறது. எந்தக் குற்றச்சாட்டும் நிரூப்பிக்கபடாமலேயே ஒருவரைத் அடைத்து வைக்க முடியும். இதில் தலையிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு குறைந்தளவு அதிகாரம் மட்டுமே உள்ளது. நாடு கடத்துவது நிர்வாக நடைமுறையாகவே கருதப்படுகிறது. அரசியல் செயல்பாடுகளை ஒடுக்குவதற்காகவே ஒருவர் இச்சட்டத்தின் கீழ் ஒடுக்கப்படுகிறார் என்பது ஒருபோதும் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை.
ஒருவேளை போராட்டக்காரர் அமெரிக்கராக இருந்தால் குடியேற்றச் சட்டத்திற்கு பதிலாக குற்றவியல் புலனாய்வு, தேசிய பாதுகாப்பு, அரசு தரப்பிலான வரம்பற்ற அதிகாரம் மூலம் ஒடுக்கப்படுகிறார். குறிப்பாக, “ப்ளாக் பேந்தர் பார்டி” (Black Panther Party) மற்றும் மார்டின் லூதர் கிங் ஜூனியருக்கு எதிராக இவ்வாறே செயல்படுத்தப்பட்டது. அரசியல் கருத்துகள் சட்டவிரோதமாக ஆக்கப்படவில்லை என்றாலும் அதனை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுகிறது. இயக்கங்களை பலவீனப்படுத்தவும், பிளவுப்படுத்தவும் கண்காணிப்பு, கைதுகள், உளவு மற்றும் அவதூறுப் பிரச்சாரங்களை பயன்படுத்துகிறது.
படிக்க: வெனிசுலா மீது பல பத்தாண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்க அரசாங்கம் வெறும் கொள்கை அடிப்படையில் செயல்படாமல் நடைமுறைகளின் வாயிலாக மக்கள் தலைவர்களின் செயல்பாடுகளை முடக்குகிறது. குறிப்பாக, குடியேற்ற நீதிமன்றம் மூலம் தடுப்புக் காவல், நாடு கடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அரசியலமைப்பு ரீதியான உரிமைகளை கோர முடியாத சூழல் உருவாகிறது. இதன் அடிப்படையில்தான், மஹ்மூத் கலீலின் விடுதலை இரத்தானது.
குறிப்பாக, மஹ்மூத் கலீலின் வழக்கைப் பார்ப்போம். இஸ்ரேல் ஆதரவு அமைப்புகள், அரசியல் நன்கொடையாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலீலின் காசா போருக்கு எதிரான போரட்டத்தை குறிப்பிட்டு அவரது பேச்சு “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என முத்திரைக் குத்தினர்.
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர், கலீலின் இருப்பு “மோசமான வெளியுறவு விளைவுகளை” ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். இது கலீலின் அரசியல் உரையை நேரடியாக எதிர்கொள்ளாமல், ஒட்டுமொத்த விவகாரத்தையும் நிர்வாக நடவடிக்கையின் கீழ் கொண்டுவந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
மே 28, 2025 அன்று, நீதிபதி மைக்கேல் இ.ஃபார்பியார்ஸ் கலீலைத் தடுத்து வைத்ததற்கான வெளியுறவுக் கொள்கை அடிப்படை அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்தார். ஆனால், அரசாங்கம் இந்த தார்மீக வாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அவர் மீது கூடுதல் நிர்வாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கியது. ஜனவரி 15, 2026 மேல்முறையீட்டு நீதிமன்றம் கலீலின் விடுதலையை ரத்து செய்தது.
மஹ்மூத் கலீலின் வழக்கு மூலம், அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு பாலஸ்தீன ஆதரவுப் பிரச்சாரங்களை வெறும் “நிர்வாக மேலாண்மைப் பிரச்சினையாக” மாற்றி ஒடுக்குகிறது என்பது தெரிய வருகிறது. இது பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவின் நீண்டகால அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது.
![]()
உமர்
மூலக்கட்டுரை: countercurrents
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











