மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!

இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உழைக்கும் மக்கள், நாளை அனைத்து இரயில்களையும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலைமையை மெல்ல நம் கண்முன்னேயே உருவாக்கி வருகின்றது மோடி அரசு.

ந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத இரயில் பெட்டிகளில் சுமார் 2,187 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 2024-2025 ஆண்டுகளில் மட்டும் சுமார் 651 கோடி மக்கள் முன்பதிவு செய்யப்படாத இரயில் பெட்டிகளில் பயணித்துள்ளனர்.

2025 டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இப்புள்ளிவிவரங்களை வெளியிட்ட இரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், குறைந்த மற்றும் நடுத்தர வருமான பயணிகளுக்கு இரயில்வே விருப்பமான தேர்வாக உள்ளதாக பெருமைப் பொங்கப் பேசினார்.

ஆனால், நாடு இதுவரை கண்டிராத வகையில் இத்தனை கோடி மக்கள் முன்பதிவு செய்யப்படாத இரயில் பெட்டிகளில் பயணம் செய்துள்ளது, இந்திய உழைக்கும் மக்களின் பொருளாதார ஏழ்மை நிலைமையை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டுகிறது.

உலகின் மிகப்பெரிய இரயில்வே சேவைகளில் ஒன்றான இந்தியன் இரயில்வே நாடு முழுவதும் பல்வேறு வகையான இரயில் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் இரயில்வே தற்போது 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 68 கோட்டங்களில் இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான இரயில்கள் நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் நாடு முழுவதும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதில் நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் பயணிகள் இரயில்கள் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்து பிரிவு மக்களின் போக்குவரத்து தேர்விலும் முதன்மையாக இருந்தாலும், சாதாரண உழைக்கும் மக்களின் ஒரே தேர்வாக இருக்கிறது. குறைந்த விலையில் குறித்த நேரத்தில் நெடுந்தூரத்தை அடைவதற்கு ஏதுவாக இருப்பதால் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பயணம் எப்போதும் இரயில் பயணம்தான், அதிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்தான்.

நாடு முழுவதும் தினமும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் இந்த இரயில்களில், பெரும்பாலும் பணக்காரர்கள் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளிலும், நடுத்தர பணம் படைத்த மக்கள் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர உழைக்கும் மக்கள் பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளிலும் பயணிப்பது நடைமுறையாக உள்ளது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில், அதிலும் கடந்த ஓரிரு ஆண்டுகளில், பொதுப்பெட்டியில் பயணிக்கும் பொது மக்களின் எண்ணிக்கை இதற்கு முன்பில்லாத வகையில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அதிலும், இரயில் பயணத்தின் போது அதிகமாக சிரமத்திற்கு உள்ளாவது யார் என்று பார்த்தால் அது முன்பதிவு செய்யப்படாத இரயில் பெட்டிகளில் பயணிக்கும் பொதுமக்கள்தான். குறைந்தபட்சம் 25 பெட்டிகளை கொண்ட பயணிகள் இரயில்களில் ஒரு மகளிர் பெட்டியுடன் சேர்த்து வெறும் ஐந்து பெட்டிகளை மட்டுமே முன்பதிவற்றதாக இயக்கி வருகிறது இரயில்வே நிர்வாகம். ஆனால், இப்பெட்டிகளின் இருக்கை எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் பயணச்சீட்டு விநியோகித்து பொது மக்களுக்குள் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலும் வேறுவழியின்றி மக்கள் பயணிக்க வேண்டிய நிலையிலேயே பெரும்பான்மை மக்களின் வாழ்நிலை உள்ளது. முறையான பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு அமர்ந்து செல்வதற்கு கூட இடம் கிடைக்காமல், பயணம் முழுவதற்கும் நின்று கொண்டோ, நெருக்கமாக ஒடுக்கி அமர்ந்துகொண்டோ அல்லது அபாயகரமான சூழலில் படிகளில் தொங்கிக்கொண்டோ பயணிக்கின்றனர். அதுவும் பண்டிகைகள் போன்ற சிறப்பு நாட்களில் இரயில்களின் படிக்கட்டுகள் தொடங்கி கழிப்பறை வரை பயணிகளின் கூட்டம் அலைமோதும்.


படிக்க: கடலூர் செம்மங்குப்பம் இரயில் விபத்து: தனியார்மயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதே தீர்வு!


இப்படிப்பட்ட நெருக்கடியான‌ சூழ்நிலையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் ஓரிடத்தில் அமர்ந்து பயணிப்பதால் காற்றோட்டம், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இயற்கை உபாதைகளைக் கூட கழிக்க முடியாமல் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் செல்லும் நிலைமைதான் உள்ளது. இந்த மோசமான நிலைமைகள் பயணிகளுடைய இரயில் பயணத்தை மிகவும் துன்பகரமானதாக மாற்றுகிறது.

இப்படிப்பட்ட பல்வேறு சவால்கள், இடையூறுகளை கடந்துதான் இத்தனை கோடி பொதுமக்கள் தங்களுடைய இரயில் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர் என்பதுதான் நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயமாகும். இதனையெல்லாம் சகித்துக்கொண்டு முன்பதிவில்லாத சாதாரண இரயில் பெட்டிகளில் மக்கள் பயணிப்பதற்கு காரணம் அவர்களின் பொருளாதார நிலைமைதான். கூடுதல் பணம் செலவு செய்து முதல் வகுப்பில் பயணிப்பது என்பது முடியாததே.

இவற்றை எல்லாம் நன்கு அறிந்த பாசிச மோடி அரசு, சாதாரண உழைக்கும் மக்களை இரயில் பயணத்தில் இருந்து அந்நியப்படுத்தும் வேலைகளை தொடர்ந்து திட்டமிட்டு செய்து வருகிறது.

இரயில்வே துறையை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் இரயில்கள், தண்டவாளங்கள், இரயில் நிலையங்கள் என அனைத்தையும் பகுதி பகுதியாக கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது. ஏற்கெனவே இயங்கிவரும் இரயில்களில் சொற்ப மாற்றங்களைச் செய்து அதன் பயணச்சீட்டு விலைகளையும் உயர்த்தி வருகிறது.

பெரும்பாலான உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கூடுதலாக இயக்குவதற்கு பதில் அவற்றின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து மக்களை கூடுதல் பணம் செலவு செய்து இரயிலில் பயணிக்க நிர்பந்தம் செய்கிறது. இதன் மூலம், இரயில் பயணத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து வெகு தொலைவில் கொண்டுச்சென்று, இனி மேட்டுக்குடியினர், பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் மட்டுமே இரயில்களில் பயணிக்கக்கூடிய நிலைமையை திட்டமிட்டு உருவாக்கி வருகிறது ஒன்றிய மோடி அரசு.

ஏற்கெனவே, இந்தியா முழுவதும் கொண்டுவந்துள்ள வந்தே பாரத் போன்ற சிறப்பு பயணிகள் இரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணிக்க முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இரயில்வே நிர்வாகம். ஒருவேளை முன்பதிவு செய்ய நினைத்தால் இணையத்தில் தங்களுடைய தகவல்களை பதிவேற்றம் செய்து ஆன்லைன் பயணிச்சீட்டு பெற வேண்டும் போன்ற விதிமுறைகளை விதித்து கொஞ்சம் கொஞ்சமாக உழைக்கும் மக்களை இரயில் பயணத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளது. இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உழைக்கும் மக்கள், நாளை அனைத்து இரயில்களையும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலைமையை மெல்ல நம் கண்முன்னேயே உருவாக்கி வருகின்றது மோடி அரசு.

ஆனால், உழைக்கும் மக்களின் அடிப்படை பயணத்திற்கு தேவை இரயில்கள், அதுவும் குறைந்த விலையில் அடிப்படை வசதியுடன் கூடிய பாதுகாப்பான பயணம். ஆனால் அதற்கான எந்த திட்டங்களையும் பற்றி வாய்திறக்காமல் மெல்ல ஒட்டுமொத்த இரயில்வே துறைகளையும் கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்து விட்டு அரசு விலகிக்கொள்வது என்ற நோக்கில் தொடர்ந்து சட்டங்களை இயற்றி வருகிறது கார்ப்ரேட் நலன் மோடி அரசு. அதற்கேற்ப இரயில்வேதுறைக்கு நிதி ஒதுக்காமலும் பல்வேறு ஊழல் முறைகேடுகள் மூலமும் அத்துறையை சீரழித்து மக்களின் உயிரை பணயம் வைக்கிறது.

உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரின் வரிப்பணத்திலும், உழைப்பிலும் உருவான இந்திய இரயில்வே துறையை சொந்தம் கொண்டாடும் உரிமையும் அவற்றை பாதுகாக்கின்ற கடமையும் உழைக்கும் மக்களுக்குத்தான் உள்ளது. ஆக, உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோடி அரசின் கார்ப்பரேட்மய திட்டங்களை எதிர்த்து நின்று அனைவரும் போராடுவோம். இந்த பாசிச கும்பலை முறியடிப்போம்!


நளன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க