திருச்செந்தூரில் பொங்கல் தினத்தன்று சாதியப் படுகொலை செய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ஏழுமலைவாசனின் இரத்த வாடை இன்னும் அகலவில்லை. அதற்குள் 16.01.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, விஜயநாராயணம் போலீசு நிலைய எல்லைக்குட்பட்ட – சுமார் இருநூறு தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்கள் வசித்துவரும் – தாமரைக்குளம் கிராமத்தில், மீண்டுமொரு சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாடார் சாதி இளைஞர்களின் இக்கொலைவெறித் தாக்குதலில் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த மகாரவி, கார்த்திக் ராஜா, மகாதேவன், தர்மராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில், தாக்குதலை தடுக்க முயன்ற அருகில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டரிடம் மனு கொடுக்க புறப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களை செல்லவிடாமல் போலீசு தடுத்ததாக ஊர்க்காரர்கள் கூறுகிறார்கள். மக்கள் போராட்டத்திற்கு பிறகே போலீசு வழக்கு பதிவு செய்துள்ளது.
தாமரைக்குளம், கண்ணநல்லூர் இரண்டும் அருகருகில் உள்ள கிராமங்கள். இதுவரை இப்படியான பிரச்சினைகள், சாதி ரீதியிலான சண்டைகள் வந்ததில்லை என ஊரார் கூறுவது முக்கியமானது.
அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் எப்படியாவது கலவரத்தை தூண்டிவிட ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் முயற்சிக்கிறது. இதற்கு தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய வேறுபாடுகளை கையில் எடுக்கிறது. அமைதியாக இருக்கும் கிராமங்களை இரண்டாக்குகிறது. ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்குகிறது.
தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதியோ, ஆதிக்க சாதியோ, பிள்ளையைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது, யாரை இந்த சாதி நெருப்பு சாம்பலாக்குமோ என்ற பெரும்பயம் தென்மாவட்டத்து பெற்றோர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது.
எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்குவது போல சாதியப் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண எடுத்துவைக்கும் முக்கியமான அடி ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் அவற்றை பின்னாலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலையும் தடை செய்வதுதான்.
சாதியால் நிம்மதி இழக்கும் உழைக்கும் மக்களும், சாதிய ஒழிப்பில்தான் சமூக முன்னேற்றம் என முன்வரும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு இக்கோரிக்கைகளுக்காக களத்தில் இறங்க வேண்டியத் தருணமிது.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்.
9385353605.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











