தமிழ்நாடு பேரிடர் நிதியை முடக்கும் மோடி அரசு

தமிழ்நாடு அரசு தனது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதனை காது கொடுத்து கேட்கக் கூட மோடி அரசு தயாராக இல்லை. தமிழ்நாடு அதீத வருவாய் வழங்கினாலும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கி மோடி அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது.

மிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம் போன்ற கடுமையான இயற்கை பேரிடர், இழப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரிய ரூ.24,679.77 கோடி நிதியில், தற்போதுவரை வெறும் ரூ.4,136 கோடியை மட்டுமே பேரிடர் பாதிப்பு நிவாரண நிதியாக அனுப்பியுள்ளது ஒன்றிய பாசிச மோடி அரசு.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தொகையில் வெறும் 17 சதவிகிதத்தை மட்டுமே இதுவரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுய லாபத்திற்காக இயற்கை வளங்கள் அனைத்தும் வரைமுறையின்றி நாசமாக்கப்படுகின்றன. உலகம் முழுதும் தீவிரமடைந்துவரும் இப்போக்கால் ஒட்டுமொத்த உலகமே மாபெரும் பருவநிலை மாற்றத்தை அடைந்துள்ளது. இதனால், மனித இனம் இதுவரை கண்டிராத பல தீடீர் இயற்கை பேரிடர்களையும், மோசமான சூழலியல் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவிலும் கடந்த பத்து ஆண்டுகளில் நிலச்சரிவு, தீடீர் வெள்ளபெருக்கு, அதீத கனமழை, கடுங்குளிர், சூறைக்காற்று, வெப்பக்காற்று போன்ற மோசமான இயற்கை பேரிடர்கள் தாக்கி வருகின்றன. இதிலிருந்து மாநிலங்கள் மீண்டுவர ஒன்றிய அரசின் பேரிடர் நிவாரண நிதி பங்களிப்பு இன்றியமையாதது.

இத்தேவைகளுக்காகவே மாநிலங்கள் ஒன்றிய அரசிற்கு வரி செலுத்துகின்றன. பேரிடர் காலங்களில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலப் பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அந்தந்த மாநிலங்கள் கோரும் நிதி பரிசீலிக்கப்பட்டு உடனே விடுவிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் கோரிய நிதி இரண்டு தவணைகளாக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்கப்படும். முந்தைய தவணையாக வழங்கப்பட்ட நிதி செலவு விவரங்களை மாநிலங்கள் முறையாக சமர்ப்பித்த பின்னரே அடுத்த தவணை தொகை மாநில அரசிற்கு வழங்கப்படும்.


படிக்க: தொடரும் இயற்கைப் பேரிடர்கள்: இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு! 


இந்நிலையில், கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு பேரிடர் பாதிப்பு நிவாரண நிதியாக வெறும் 12,208 கோடி ரூபாயை மட்டுமே பெற்றுள்ளது. இதே காலகட்டங்களில் பா.ஜ.க. ஆளும்  மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.24,000 கோடிக்கும் அதிகமாகப் நிதியை அள்ளிக் கொடுத்துள்ளது. நாடு முழுவதும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட பேரிடர் பாதிப்பு நிவாரண நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது கவனிக்க வேண்டியது.

அதேபோல், ஒரு இயற்கை பேரிடர் மிகக் கடுமையானதாக வகைப்படுத்தப்பட்டால் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து கூடுதல் நிதி உதவிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். அதையும் திட்டமிட்டு தவிர்த்து வருகிறது பாசிச மோடி அரசு.

இத்தனைக்கும் தமிழ்நாடு அரசு முறையான தரவுகளை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்த பிறகும், பேரிடர் பாதிப்புகளை எடுத்துச் சொன்ன போதிலும், நிதியை ஒதுக்காமல் பாரபட்சத்துடனும் பாசிசத் திமிருடனும் நடந்துகொள்கிறது.

அதேபோல், மாநிலங்கள் பாதிப்புகளில் இருந்து கோரும் நிவாரணத் தொகைக்கும், ஒன்றிய அரசு தான் வழங்குவதாக அறிவிக்கும் தொகைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. மேலும், அவ்வாறு நிர்ணயித்த நிதியை கூட விடுவிக்காமல் திட்டமிட்டே மாநிலங்களை வஞ்சிக்கிறது. இது இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கிறது.

தமிழ்நாடு அரசு தனது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதனை காது கொடுத்து கேட்கக் கூட மோடி அரசு தயாராக இல்லை. தமிழ்நாடு அதீத வருவாய் வழங்கினாலும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காமல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கி மோடி அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணிக்கும் பாசிச மோடி அரசின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கையை உழைக்கும் மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பேரிடர் நிவாரண நிதி உடனே வழங்கப்பட வேண்டும். மாநில உரிமைகளை நசுக்கும் பாசிச பா.ஜ.க-வை தமிழ்நாடு மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.


நளன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க