புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!

பாசிச மோடி அரசோ புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்வது என்ற பெயரில், 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தியிலிருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக மக்களை பேரழிவிற்குள் தள்ளும் பயங்கவாத நடவடிக்கையாகும்.

ந்திய அணுசக்திதுறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான சட்ட மசோதாவை, நடந்துமுடிந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் பாசிச மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

ஏற்கெனவே அணுசக்திதுறையில் குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கி வந்த “அணுசக்தி சட்டம், 1962” மற்றும் “அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010” ஆகிய இரண்டு சட்டங்களையும் நீக்கிவிட்டு, “மாறிவரும் இந்தியாவிற்கான நிலையான பயன்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான அணுசக்தி” என்ற சட்ட மசோதாவை (SHANTI Bill) பாசிச மோடி அரசு எதேச்சதிகாரமாக நிறைவேற்றியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இம்மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டமானது, நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி இறையாண்மை ஆகியவற்றை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு, அந்நிய – உள்நாட்டு மூலதனங்களை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணுசக்திதுறை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்படுவதுடன், இந்திய நாட்டு மக்கள் மீது பேரழிவுத் தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாகவும் அமைந்துள்ளது.

கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய அணுசக்திதுறை

ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி, அணு உலை விபத்துகள் நேர்ந்தால் அதன் பாதிப்புகளுக்கும், அதற்கான இழப்பீடுகள் வழங்குவதற்கும் அணு உலையை இயக்கும் நிறுவனமும், உலையை இறக்குமதி செய்த நிறுவனமும்தான் பொறுப்பேற்க வேண்டும்; அணுசக்தி நிலையத்தை இயக்கும் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், மோடி அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம், அணு உலைகளின் வடிவமைப்பு குறைபாடுகள் அல்லது உற்பத்தி குறைபாடுகளால் விபத்துகள் ஏற்பட்டால் கூட, அதற்கு அணு உலைகளை இறக்குமதி செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும், விபத்துகள் நேர்ந்தால் அணு உலைகளை இயக்கும் நிறுவனங்கள், பெரிய உலைகளுக்கு ரூ.3,000 கோடி, நடுத்தர உலைகளுக்கு ரூ.1,500 கோடி மற்றும் சிறிய உலைகளுக்கு ரூ.100 கோடி என்ற அற்ப தொகையை இழப்பீடாக வழங்கினால் போதும் என்று நிர்ணயித்துள்ளது.

உலகையே அதிர்ச்சியூட்டிய ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை விபத்தின் போது ஒரு லட்சம் கோடி ரூபாயும், சோவியத் யூனியனின் ஷெர்னோபில் அணு உலை விபத்தின் போது ஆறு லட்சம் கோடி ரூபாயும் பாதிப்பை சரிசெய்ய செலவழிக்கப்பட்டுள்ளது. பல பத்தாண்டுகள் கடந்த பின்னும் இன்று வரை அதன் கதிர்வீச்சு பாதிப்புகள் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. ஆனால், மோடி அரசு சில கோடி ரூபாய்களை இழப்பீடாக நிர்ணயித்திருப்பது மக்களை திட்டமிட்டே வஞ்சிப்பதாகும்.

அதேபோல், முன்னர், பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு கோருவதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், புதிய சட்டத்தின்படி, இழப்பீட்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இரசாயன தொழிற்சாலை விபத்தான போபால் விசவாயு படுகொலையிலேயே பத்தாண்டுக்கு பிறகு உடல் ஊனம், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வெளியாகின. எனில், அணுசக்தி கதிர்வீச்சுகளின் பாதிப்பு 20-30 ஆண்டுகளுக்குப் பிறகும் அடுத்தடுத்த தலைமுறையை பாதிக்கக்கூடியது. இதற்கு இழப்பீடு கோர மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அவகாசம் வழங்கியிருப்பது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

மேலும், புதிய சட்டத்தின்படி அணு உலையை இயக்கும் நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள், குடிமை சமூக அமைப்புகள், ஏன் அரசு கூட நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர முடியாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் அதிகாரிக்கு (கைகூலி) மட்டுமே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அணுசக்திதுறை கண்காணிப்பு அமைப்பான அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரங்களும் வெட்டி சுருக்கப்பட்டு அது ஒன்றிய அரசின் பொம்மையாக மாற்றப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, அணு உலைகளை இயக்குவதற்கு மட்டுமின்றி, சுரங்கங்கள் அமைத்து அணு கனிமங்களை வெட்டியெடுப்பது, எரிபொருள் உற்பத்தி, உலை கட்டுமானம், செயல்பாடு உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் கார்ப்பரேட்டுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே உரிமத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, மக்கள் கருத்துகேட்பு கூட்டங்களிலிருந்து கார்ப்பரேட்டுகள் தப்பித்துக்கொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அணுசக்தி கழிவு மேலாண்மை, தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான நெறிமுறைகள் வகுக்கப்படாமல், சுற்றுச்சூழலையும் தொழிலாளர்களையும் கேள்விக்கிடமின்றி சுரண்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், கார்ப்பரேட்டுகள் எந்தவித தங்குதடையுமின்றி ஒட்டுமொத்த அணுசக்தி மதிப்புச் சங்கிலியையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடாகவே இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பாசிச மோடி அரசு.

அடிமை மோடியின் அமெரிக்க சேவை

இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த மோடி, அணுசக்திதுறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவதன் மூலம் புதிய முதலீடுகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என்று பேசினார். சங்கி கும்பலும் இச்சட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றே கதையளந்து வருகிறது. ஆனால், இச்சட்டமானது முழுக்க முழுக்க அமெரிக்க வல்லரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து கொண்டுவரப்பட்டது என்பதே நிதர்சனம்.

கடந்தாண்டு ஜனவரியில் பாசிஸ்ட் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானது முதல், அணுசக்திதுறை உள்ளிட்ட இந்தியாவின் பல துறைகளை அமெரிக்க ஏகபோக கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுமாறு இந்திய அரசை நிர்பந்தித்து வருகிறார். குறிப்பாக, அணுசக்திதுறையில் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை விதிக்கும் அணுசக்தி சட்டம், 1962 மற்றும் அணுசக்தி சேத தடுப்புச் சட்டம், 2010 ஆகிய இரண்டு சட்டங்களையும் திருத்த வேண்டுமென்று அமெரிக்க கார்ப்பரேட்டுகள் நீண்டநாட்களாக கூச்சலிட்டு வருகின்றன. டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் இந்த மிரட்டல் தீவிரமடைந்தது.

முதுகெலும்பற்ற மோடி அரசு டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து, மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டங்களையும் திருத்த உள்ளதாக 2025 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் அறிவித்தது. 2025 பிப்ரவரியில் வெளியான இந்திய அடிமை சாசனமான “அமெரிக்க – இந்திய காம்பாக்ட்” திட்ட அறிக்கையில் மோடியின் இந்த அடிமை சேவகம் பாராட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இச்சட்டங்களை திருத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், அச்சட்டங்களை ஒட்டுமொத்தமாக நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவந்திருப்பதன் மூலம் தனது அமெரிக்க விசுவாசத்தை காட்டியிருக்கிறது மோடி அரசு. மோடியின் இச்சேவையை டிரம்ப்பும் கார்ப்பரேட்டுகளும் உச்சிமுகர்ந்து பாராட்டியுள்ளனர்.

மேலும், இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணுசக்திதுறையில் அதானி நிறுவனம் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் 200 மெகாவாட் திறன்கொண்ட 8 சிறிய அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுடன் அதானி குழுமம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது அம்பலமானது. இது மோடி அரசின் அதானி சேவை வெட்டவெளிச்சமாக்கியது. இந்தியாவிலுள்ள பிற கார்ப்பரேட்டுகளும் அணுசக்திதுறையில் முதலீடு செய்யும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

இவற்றின் மூலம் இச்சட்ட நிறைவேற்றமானது அப்பட்டமான அதானி – அமெரிக்க சேவைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதம்

இந்தியாவின் மீது பேரழிவை கட்டவிழ்த்துவிடும் இந்த நாசகர சட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால், பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிராக பெயரளவிலான போராட்டங்களைக் கூட கட்டியமைக்கவில்லை.

இது எதிர்க்கட்சிகளின் வழக்கமான சந்தர்ப்பவாதம், கையாலாகாத்தனம் அல்ல. மாறாக, அணுசக்திதுறையை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒத்தக்கருத்துதான் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

குறிப்பாக, 1998-இல் இந்தியா அணுகுண்டு சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அப்போதைய பிரதமாராக இருந்த வாஜ்பாய் அமெரிக்காவிற்கு அடிபணிந்ததுடன், அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடக் கூடத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா, இந்திய அணுசக்திதுறையை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்தே அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் என்ற அடிமை சாசனம் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் கையெழுத்தானது. தற்போது மோடி அரசு நிறைவேற்றியிருக்கும் புதிய அணுசக்தி சட்டத்திற்கு இந்த ஒப்பந்தமே மூலவேர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அடிமை சாசனத்தை அப்போதைய எதிர்க்கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்தன என்பதே உண்மை. அச்சமயத்தில் ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக பா.ஜ.க. பேசியதெல்லாம் வெற்று நாடகம் மட்டுமே. இந்திய அணுசக்திதுறையை அமெரிக்காவின் அடிமாடாக்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ்-பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் பல பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது என்பதே நிதர்சணம். இந்த வர்க்கப் பாசத்தின் காரணமாகவே இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் தற்போதும் கள்ளமௌனம் சாதித்து, இந்திய மக்கள் மீதான தாக்குதலுக்கு துணைபோகின்றன.

கட்டவிழ்த்துவிடப்படும் பேரழிவு

சோவியத் யூனியனின் ஷெர்னோபில் அணு உலை விபத்து (1986), ஜப்பானில் ஃபுக்குஷிமா அணு உலை விபத்து (2011) உள்ளிட்ட அணு உலை விபத்துகளுக்கு பிறகு பல நாடுகள் அணுசக்தி ஆற்றலிலிருந்து பின்வாங்கத் தொடங்கின. அணுசக்தி கழிவு மேலாண்மை சவால் நிறைந்ததாகவும் அபாயகரமானதாகவும் உள்ளதாலும், கழிவுகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சு வெளிவருவதாலும், அதீத கட்டுமான செலவாலும், பல நாடுகள் சூரிய ஒளி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட மாற்று ஆற்றல்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன.

இதனால் எரிசக்தித்துறையில் ஆதிக்கம் செலுத்திவந்த அணுசக்தி கார்ப்பரேட்டுகளின் லாபமும் பிடியும் சரியத் தொடங்கியது. இதனை ஈடேற்ற எரிசக்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளில் அணு உலைகளை திணிப்பது என்ற திட்டத்தின் அங்கமாகவே அமெரிக்க – இந்திய அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டு இந்தியாவில் அணு உலைகளை திறக்க கார்ப்பரேட்டுகள் திட்டமிட்டன.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுயாதிபத்தியத்தை அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பித்த இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அச்சமயத்தில் தமிழ்நாட்டில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்ப்பின் விளைவாக அணு உலைகளைகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களே சேதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற வகையில் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010 நிறைவேற்றப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுக்கு கூட கார்ப்பரேட்டுகள் இணங்க மறுத்ததால் அதன் பிறகு அணு உலைகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதுவே கார்ப்பரேட்டுகளின் யோக்கியதையைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையமும், குறுக்குவழியில் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக தீவிரமான போராட்டங்கள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டன. இன்றளவும் மக்கள் அணு உலையின் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். மேலும், உலகெங்கும் 136 அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், பாசிச மோடி அரசோ புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்வது என்ற பெயரில், 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தியிலிருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக மக்களை பேரழிவிற்குள் தள்ளும் பயங்கவாத நடவடிக்கையாகும். நாட்டின் வளர்ச்சிக்காக அணுசக்திதுறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான தேச துரோகமாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள இப்பேரழிவை தடுப்பதற்கு இந்த தேச துரோக கும்பலுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் வீதியில் இறங்கி போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டியது இன்றையக் கட்டாயமாகும்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க