இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, அமெரிக்க மேலாதிக்கத்தின் ஆணிவேராகவும், உலகப் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கமைப்பைத் தீர்மானித்த ஒற்றை மையச் சக்தியாகவும் விளங்கியது “பெட்ரோ டாலர்”. தற்போது, பெட்ரோ டாலர் கட்டமைப்பு அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. சவுதி அரேபியா, ரஷ்யா, சீனா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகள் யூரோ, யுவான் போன்ற நாணயங்களில் எண்ணெய் வர்த்தகத்தை நடத்தத் தொடங்கி, டாலரை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விட்டு வருகின்றன.

இந்த நிதியியல் நிலநடுக்கம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் எரிசக்தித் துறையில் ஒரு அடிப்படை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, பசுமை எரிசக்தி மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்டது. இதனால், உலக மேலாதிக்க அரசியலின் மையம் தவிர்க்கவியலாமல் “எண்ணெய் கிணறுகளிலிருந்து” “கனிமச் சுரங்கங்களை” நோக்கி நகர்கிறது. இந்தச் சூழலில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளையும், மதிப்பிட முடியாத அளவிற்கு அருமண் தனிமங்கள் மற்றும் உத்திசார் கனிமங்களையும் கொண்டுள்ள வெனிசுலா, சரிந்துவரும் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் வேட்டைக்களமாக மாறியுள்ளது.
பெட்ரோ டாலர் சாம்ராஜ்யம் – எழுச்சியும் வீழ்ச்சியும்
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், உலகப் பொருளாதாரம் “பிரெட்டன் உட்ஸ்” அமைப்பின் கீழ் இயங்கியது. ஆனால், வியட்நாம் போரினால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமை மற்றும் பணவீக்கம் காரணமாக, 1971-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், டாலரைத் தங்கத்தோடு மாற்றிக்கொள்ளும் முறையை ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தார். இது டாலரின் மதிப்பை கேள்விக்குறியாக்கியது. அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்றவும், டாலருக்கான உலகளாவியத் தேவையைத் தக்கவைக்கவும், 1974-ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் சவுதி அரேபியாவுடன் ஒரு இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இது பின்வரும் விளைவுகளை உருவாக்கியது:
டாலர்மயமாக்கல்: சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்கும்போது, அதற்கான விலையை அமெரிக்க டாலரில் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். பிற நாணயங்களை ஏற்கக்கூடாது.
பாதுகாப்பு உத்தரவாதம்: இதற்குப் பிரதிபலனாக, சவுதி அரேபியாவிற்கு, குறிப்பாக அல்-சவுத் அரச குடும்பத்திற்கு, நிபந்தனையற்ற இராணுவப் பாதுகாப்பையும் நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கும்.
பெட்ரோ டாலர் மறுசுழற்சி: எண்ணெய் விற்பனை மூலம் சவுதி அரேபியா ஈட்டும் உபரி டாலர்களை, மீண்டும் அமெரிக்கப் பொருளாதாரத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக, அமெரிக்க கருவூலப் பத்திரங்களை வாங்குவதன் மூலம், அமெரிக்காவின் கடன் சுமையை நிர்வகிக்க உதவ வேண்டும்.
இந்தக் கட்டமைப்பு, உலக நாடுகள் அனைத்தும் எண்ணெய் வாங்க வேண்டுமானால், முதலில் டாலரை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியது. இதன் மூலம் தனது வர்த்தகப் பற்றாக்குறையைப் பற்றிக் கவலைப்படாமல், எவ்வளவு வேண்டுமானாலும் டாலரை அச்சடிக்கும் ‘அளவற்ற சலுகையை’ அமெரிக்கா உருவாக்கிக் கொண்டது.
ஜூன் 9, 2024 அன்று இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்நிலையில், இத்தனை ஆண்டுகளாக டாலரில் மட்டுமே எண்ணெய் வர்த்தகம் செய்துவந்த சவுதி அரேபியா, டாலரைத் தாண்டி சீன யுவான், யூரோ போன்ற மற்ற நாணயங்களில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, “எம்-பிரிட்ஜ் திட்டம்” (Project m-Bridge) என்ற டிஜிட்டல் நாணயத் தளத்தில் சீனாவுடன் சவுதி அரேபியா இணைந்தது, டாலர் சாராத வர்த்தகத்திற்கான அதன் விருப்பத்தைக் காட்டுகிறது. இது அமெரிக்காவின் டாலர் மேலாதிக்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளதோடு, அமெரிக்கா வாங்கிக் குவித்துள்ள 34 டிரில்லியன் டாலர் கடன் சுமையை நிர்வகிப்பதிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி.
இன்னொரு பக்கத்தில் பெட்ரோலிய – இயற்கை எரிவாயுத் துறையில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும், ஈரானை முடக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதைத் தடுக்கும் வகையில் வரிகளை உயர்த்தி ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளை அடிபணிய வைத்துள்ளது. ரஷ்யா, ஈரானின் இடத்தை நிரப்பும் நோக்கில், பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தானே ஏற்றுமதி செய்வதாக அண்மைக்காலத்தில் ஏராளமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது அமெரிக்கா.
இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நிறைவேற்றும் அளவுக்கு, தங்களது சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயை அமெரிக்காவால் உற்பத்தி செய்ய முடியாது என்பதே உண்மை. அதை ஈடுகட்டும் வகையில்தான், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையிட அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது அமெரிக்கா. இதன் மூலம் சரிந்து கொண்டிருக்கும் தனது டாலர் மேலாதிக்கத்தைத் தக்கவைக்க முடியுமென நம்புகிறது.
லெனினியப் பார்வையில் ஏகாதிபத்தியமும் நவீன தொழில்நுட்ப ஆதிக்கமும்
உற்பத்திக் கருவிகளின் தொடர்ச்சியான முன்னேறிய வளர்ச்சி, ஆரம்பகாலப் போட்டி முதலாளித்துவத்தை ஒழித்து, முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்தது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட உற்பத்தி ஒன்றுகுவிப்பு, வங்கி மூலதனமும் ஆலை மூலதனமும் இணைந்து நிதி மூலதனம் உருவாதல், உற்பத்திக்கான மூலப்பொருட்களின் தேவைக்காக செல்வாக்கு மண்டலங்களை (காலனி) உருவாக்குதல் ஆகியவையே ஏகாதிபத்தியத்திற்கான அடிப்படை என்று 1916-இல் மாமேதை லெனின் வரையறுத்தார்.
லெனின் காலத்திய ஏகாதிபத்திய நாடுகளும், அந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் அன்றைய உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களான இரும்பு, நிலக்கரி ஆகியவற்றைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு உலக நாடுகளைக் காலனிகளாக்கின. 1990-களில், கச்சா எண்ணெய் முக்கிய மூலப்பொருளாக இருந்தது. அவ்வளத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏகாதிபத்தியங்கள் போட்டியிட்டன. ஒற்றைத் துருவ மேலாதிக்கமாக உருவெடுத்த அமெரிக்கா, எண்ணெய் வள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதற்கான பிராந்தியங்களில் தனது அடியாட்களாகப் பிராந்திய வல்லரசுகளை உருவாக்கியது. 30 ஆண்டுகாலம், அமெரிக்காவின் டாலர் மேலாதிக்கமே உலகை ஆட்டி வைத்தது.
அதேசமயம் புதிதாக உருவாகி வந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், அதன் பாய்ச்சலான செயற்கை நுண்ணறிவும் இன்றைய உற்பத்திக்கான அடிப்படையாக மாறியுள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தரவுகள்தான் அடிப்படையானவை. சுருங்கச் சொன்னால் “தரவுகளே” இன்றைய காலகட்டத்தின் “புதிய எண்ணெய்”. இத்தரவுகளைச் செயல்முறைப்படுத்த “குறைகடத்திச் சில்லுகள்” (Semiconductor Chips) மிக முக்கியமானவை. மருத்துவம், இராணுவம், தகவல் தொழில்நுட்பம், இ-வணிகம் என அனைத்தும் செயற்கை நுண்ணறிவுமயமாகி வரும் சூழலில், அதற்கேற்ற “சில்லு”களை (Chip) உற்பத்தி செய்வது அதிமுக்கியமானது.
மறுபக்கத்தில் புதைபடிவ எரிபொருட்களின் பற்றாக்குறை, புவிவெப்பமயமாதல் போன்றவற்றால் பசுமை எரிசக்தியை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. எனவே, மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களுக்கான மின்கலன்கள் உருவாக்குவது, திறன் பேசிகள், இராணுவத் தளவாடங்கள், விண்கலன்கள் என அனைத்தும் இந்த அரியவகைத் தனிமங்களை நம்பியே இருக்கின்றன.
லெனின் காலத்திய உற்பத்திக்கு இரும்பும், நிலக்கரியும் உயிர்நாடி என்றால், இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகிற்கு அரியவகைக் கனிமவளங்கள் உயிர்நாடியாகும். ஆகையால், இன்றைய முன்னேறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திக்கும், அதில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றிற்குத் தேவையான கனிமவளங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டியது ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கிறது. ஏகாதிபத்தியமாகத் தொடர்ந்து நீடிப்பதற்கும் இது அவசியமாகும்.
அந்தவகையில் உலக நாடுகளில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் சீனா இருக்கிறது. அதுமட்டுமின்றி, இத்தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக உள்ள அருமண் தனிமங்களை வெட்டியெடுப்பது மற்றும் சுத்திகரிப்பது ஆகியவற்றில் கடந்த முப்பது ஆண்டுகளில், சீனா மிகவும் திட்டமிட்டு, அரசு மானியங்கள் மற்றும் குறைவான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, இத்துறையில் ஒரு முழுமையான ஏகபோகத்தை உருவாக்கியுள்ளது. உலக அளவில், அருமண் தனிமங்களுக்கான மூலப்பொருட்களை வெட்டியெடுப்பதில் 60-70 சதவிகிதமும், தனிமங்களைச் சுத்திகரித்து பிரித்தெடுப்பதில் 90 சதவிகிதமும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
அமெரிக்காவின் “எம்.பி. மெட்டீரியல்ஸ்” (MP Materials) என்ற நிறுவனம் அந்நாட்டில் அருமண் தனிமங்களை வெட்டியெடுத்தாலும், அவற்றைச் சீனாவில்தான் சுத்திகரிக்கிறது. ஏனெனில், இந்த சுத்திகரிப்பு தொழில்நுட்பம் சிக்கலானதும், அதிக செலவு பிடிப்பதும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதுமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கதிரியக்கக் கசிவு காரணமாக கலிபோர்னியாவின் மவுண்ட் பாஸ் பகுதியில் செயல்பட்டுவந்த அருமண் சுரங்கத்தை 1980-களில் அமெரிக்கா மூடிவிட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், இத்தகைய தொழில்களை எல்லாம் அன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தள்ளிவிட்டன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
எனவே, சீனாவுடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கா பன்மடங்கு பின்தங்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்றைய நிலையில் அருமண் தனிமங்களுக்காக அமெரிக்கா, சீனாவையே பெரிதும் நம்பியிருக்கிறது. 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் முற்றிய நிலையில், சீனா தனது கனிம வள ஆதிக்கத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.
சீனா, சில்லுத் தயாரிப்பிற்குத் தேவையான காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவற்றின் ஏற்றுமதியைக் கடுமையாக்கியது. மேலும், அருமண் தனிமங்களைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தது. ஒரு எஃப்-35 ரக போர் விமானத்திற்கு 417 கிலோ அருமண் தனிமங்கள் தேவைப்படும் நிலையில், சீனாவின் இந்தத் தடை அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு ஒரு “இருப்பு சார் நெருக்கடியை” ஏற்படுத்தியது.
எனவே வேறுவழியின்றி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபரைச் சந்தித்து ‘பேச்சுவார்த்தை நடத்தி’ வர்த்தகப் போரைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்தார். இதன்விளைவாக, அருமண் தனிம ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தற்காலிகமாகச் சீனா நீக்கியிருக்கிறது. இதை வர்த்தகப் போர் என்று டிரம்ப் குறிப்பிட்டாலும், அமெரிக்கா-சீனா இடையேயான செயற்கை தொழில்நுட்பத்திற்கான மேலாதிக்கப் போட்டி என்பதும், இப்போட்டியில் சீனாவிடம் அமெரிக்கா தோற்றுவிட்டது என்பதுமே இப்போதைய உண்மை. இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேலாதிக்கமானது, உலகை மறுபங்கீடு செய்வதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறது.
வெனிசுலா மீதான தாக்குதல் –
தோல்வியுற்ற மிருகத்தின் பாய்ச்சல்
சீனாவிடம் தோற்ற அமெரிக்கா, வெறி கொண்ட மிருகம் போலப் பிற நாடுகளின் மீது பாய்ந்து வருகிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கின்ற நாடுகள் ரஷ்ய-சீனக் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடுமோ என்ற அச்சமே அமெரிக்காவின் பாய்ச்சலுக்குக் காரணம்.
எனவே, ரஷ்ய-சீன நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் நெருக்கம் காட்டுகிற நாடுகளின் மீது அதிகப்படியான வரி விதிப்பை மேற்கொண்டார் டிரம்ப். இந்தியா, கனடா நாடுகளின் மீது அதிகப்படியான வரி விதிப்பு, இஸ்ரேலைத் தக்கவைக்க காசா மீதான போர், ரஷ்யாவைப் பலவீனப்படுத்த உக்ரைன் போர் என அனைத்தும் சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தைத் தூக்கி நிறுத்த அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளாகும்.
இதன் தொடர்ச்சிதான், வெனிசுலா மீதான போர் தயாரிப்பு. தென்னமெரிக்காவில் அர்ஜென்டினா, சிலி, பொலிவியா போன்ற நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கக் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இந்நாடுகளுடன் வெனிசுலாவும் அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டால், மூலவளங்கள் அனைத்தும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுமென்று அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்குவதற்கு அங்கிருக்கும் எண்ணெய் வளம் மட்டும் காரணமல்ல; அதைவிட ஆழமான காரணம் அங்கு கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள். வெனிசுலாவிடம் சுமார் 303 பில்லியன் பேரல்கள் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தி இன்னும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது.
அதைவிட முக்கியமாக, வெனிசுலாவின் தெற்கே அமைந்துள்ள “ஆர்கோ மினெரோ” (Orinoco Mining Arc) என்ற பகுதியில், சுமார் 2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கனிமங்கள் புதைந்துள்ளன. தங்கம், கோல்டான், தோரியம், மற்றும் அருமண் தனிமங்களான நியோடைமியம், லாந்தனம் ஆகியவை டன் கணக்கில் புதைந்துக் கிடக்கின்றன. அமெரிக்கத் தளபதி ஜெனரல் லாரா ரிச்சர்ட்சன், “இந்த வளங்கள் நம் எதிரிகள் (சீனா, ரஷ்யா) கைகளுக்குச் செல்வதை நாம் அனுமதிக்க முடியாது. இது நமது தேசியப் பாதுகாப்புப் பிரச்சினை” என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசியதே, இது வளங்களுக்கான போர் என்பதற்கான நேரடிச் சாட்சியம்.
தென்னமெரிக்கக் கண்டத்தில் ரஷ்ய-சீன ஆதிக்கத்தைத் தடுக்கவும், வளங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா 2025-இன் இறுதியில் “ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்” என்ற போரைத் துவக்கியது. இதன் தொடர்ச்சியாகத்தான், ஜனவரி 3, 2026 அன்று, போதைப்பொருள் கடத்தல் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில், வெனிசுலா தலைநகர் கராகஸில் புகுந்த அமெரிக்கப் படைகள் அதிபர் மதுரோவைக் கடத்திச் சென்றன. ஈராக் மீது படையெடுக்க “பேரழிவு ஆயுதங்கள்” என்ற பொய்யை அமெரிக்கா பயன்படுத்தியது போல, வெனிசுலாவைச் சூறையாட “போதைப்பொருள் பயங்கரவாதம்” என்ற புதிய பொய்யைக் கட்டமைத்துள்ளது.
செல்வாக்கு மண்டலங்களுக்கான அமெரிக்காவின் வெறி
வெனிசுலா அதிபரைக் கடத்தியதில் வெற்றிபெற்ற ஆணவத்தில், டிரம்ப் தனது ஏகாதிபத்திய – மேலாதிக்க வெறியின் உச்சத்துக்கே சென்று மற்ற நாடுகளை எல்லாம் மிரட்ட ஆரம்பித்து விட்டார்.
வெனிசுலா மீதான டிரம்ப்பின் தாக்குதலை, கொலம்பியாவின் அதிபரான குஸ்டாவோ பெட்ரோ கடுமையாகக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், ஒரு நாட்டின் அதிபர் என்றும் பாராமல், பெட்ரோவை “போதைப்பொருள் கடத்தல்காரர்” என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு, “அவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். அத்துடன் நிற்காமல், கொலம்பியாவை “போதைப்பொருள் ஒழிப்பில் ஒத்துழைக்காத நாடு” என்று சான்றளித்து, பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அச்சுறுத்தினார். ஆனால், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பணியாத பெட்ரோ, “நாங்கள் ஆக்கிரமிப்புகளை ஏற்க மாட்டோம்; தேவைப்பட்டால் தாய்நாட்டைக் காக்க மீண்டும் ஆயுதம் ஏந்துவேன்” என்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சூளுரைத்துள்ளார்.
இதேபோல, மெக்சிகோ மீதான அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் மெக்சிகோ தனது லித்தியம் வளங்களைத் தேசியமயமாக்கி, “லிட்டியோ எம்.எக்ஸ்.” (LitioMX) என்ற அரசு நிறுவனத்தை உருவாக்கியது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பேரிடியாக அமைந்தது. உடனே, இந்நடவடிக்கை “அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு” (USMCA) எதிரானது என்று கூச்சலிட்ட அமெரிக்கா, லித்தியம் துறையைத் தனியாருக்குத் திறந்துவிடுமாறு மெக்சிகோவை நெருக்கி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, 2025-இல் மெக்சிகோவிற்கு எதிராகச் சர்வதேச நடுவர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து நெருக்கடியை உருவாக்கி வருகிறது.
வடக்கே, ஆர்க்டிக் பகுதியிலும் அமெரிக்காவின் கழுகுக் கண்கள் பதிந்துள்ளன. கிரீன்லாந்தின் தெற்கே உள்ள “குவானேஃப்ஜெல்ட்” சுரங்கத்தில், மிகப்பெரிய அளவுக்கு அருமண் தனிமங்கள் மற்றும் யுரேனியம் போன்றவை புதைந்து கிடக்கின்றன. இதைக் கைப்பற்றத் துடிக்கும் டிரம்ப், கிரீன்லாந்தை ஒரு ரியல் எஸ்டேட் சொத்தைப் போல ‘விலைக்கு வாங்க’ விரும்புவதாகக் கூறினார். அது நடக்காத பட்சத்தில், “இராணுவ நடவடிக்கை எப்போதும் ஒரு விருப்பத் தேர்வாக உள்ளது” என்று வெள்ளை மாளிகை மூலம் தனது நேட்டோ கூட்டாளியான டென்மார்க்கையே மிரட்டும் அளவிற்கு அமெரிக்காவின் வள வேட்டை எல்லை மீறிச் சென்றுள்ளது.
அமெரிக்காவை எதிர்க்கும் ரஷ்ய – சீன நிலை என்ன?
வெனிசுலா அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் அதே நேரத்தில், அமெரிக்காவின் எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் மிக நெருக்கமான அரசியல்-பொருளாதார உறவுகளை மேற்கொண்டுள்ளது. வெனிசுலாவின் மிகப்பெரிய கடன் வழங்குநராகத் திகழும் சீனா, தமது மேலாதிக்கத்திற்கான “பெல்ட் அண்ட் ரோடு” திட்டத்தில் வெனிசுலாவையும் இணைத்துள்ளது.
குறிப்பாக, 2024-25 காலகட்டத்தில் சீனாவின் “சி.சி.ஆர்.சி.” (CCRC) மற்றும் “அன்ஹுய் குவாங்டா” போன்ற நிறுவனங்கள், வெனிசுலாவின் மரக்காய்போ ஏரி மற்றும் ஒரினோகோ மண்டலப் பகுதிகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன. மேலும், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 80 சதவிகிதம் சீனாவிற்கே செல்கிறது. இந்த சட்டப்பூர்வமான ஒப்பந்தங்கள் மட்டுமன்றி, ஒரினோகோ சுரங்கப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோதச் சுரங்கத் தொழிலிலும் சீனா மறைமுகப் பங்கு வகித்து, தங்கம் மற்றும் கோல்டானைப் பெறுகிறது.
மறுபுறம், வெனிசுலாவை அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் உள்ள தனது இராணுவக் கோட்டையாகவே ரஷ்யா பார்க்கிறது. ரோஸ்நெஃப்ட் நிறுவனம் மூலம் எண்ணெய் துறையில் ஆழமாக காலூன்றியுள்ள ரஷ்யா, 2025-இல் எஸ்-300 வான் பாதுகாப்பு அமைப்புகளையும், சுகோய் போர் விமானங்களையும் வழங்கி வெனிசுலாவின் இராணுவப் பலத்தை உயர்த்தியுள்ளது. தனது இராணுவ அதிகாரிகளை அனுப்பி இராணுவத்திற்குப் பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபட்டு வருகிறது. இதேபோல, துருக்கியும் வெனிசுலாவின் தங்கத்தைச் சுத்திகரித்து, அமெரிக்கத் தடைகளை மீறி அந்நியச் செலாவணியைப் பெற உதவுகிறது.
இந்த ஒப்பந்தங்கள் மற்றும் நகர்வுகள் அனைத்தும் வெனிசுலாவின் வளமிக்க ஆர்கோ மினெரோ கனிமப்படுகையைக் குறிவைத்தே நடக்கின்றன. அமெரிக்கத் தடைகளை மீறி நடக்கும் இந்த ரஷ்ய-சீனக் கூட்டுறவும், சீனாவின் கனிம வேட்டையும் அமெரிக்காவிற்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. மேலும், தென்னமெரிக்கப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டுமானால், வெனிசுலாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற மேலாதிக்கக் கண்ணோட்டத்திலிருந்துதான் வெனிசுலா மீது போர் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா.
ரஷ்யாவும் சீனாவும் இதைக் கண்டித்தாலும், அமெரிக்காவின் மீதான தமது பொருளாதாரத் தாக்குதல் குறித்து இன்னும் மௌனமாகவே உள்ளன. இவ்விரு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அருமண் தனிமங்கள், யுரேனியம், இரசாயன உரங்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவோம் என மிரட்டாமல், பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ளும் நோக்கிலேயே இதுவரை அணுகிக் கொண்டிருக்கின்றன.
என்ன செய்யப் போகிறோம்?
மேற்கண்ட தரவுகள் யாவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது ஒரு ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளதைக் காட்டுகின்றன. பெட்ரோ டாலர் வீழ்ச்சியால் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியும், தொழில்நுட்பப் போரில் சீனாவிடம் பின்தங்கிக் கிடக்கும் விரக்தியுமே அமெரிக்காவை இத்தகைய வெறிபிடித்த இராணுவ நடவடிக்கைகளுக்குத் தள்ளியுள்ளன.
ஐ.நா-வின் உறுப்பு அமைப்புகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறும் முடிவில் டிரம்ப் கையெழுத்திட்டு இருப்பதும், இராணுவச் செலவை 50 சதவிகிதம் அதிகரிக்க இருப்பதாகக் கூறுவதும், அமெரிக்க மேலாதிக்கவெறி தீவிரமடைவதைக் காட்டுகின்றன. கனிமவளக் கொள்ளைக்காக இராணுவமயமாக்கும் போக்கினைத் தீவிரமாக்கினால், அது நிச்சயமாக பெரும் அழிவுமிக்க போர்களை உருவாக்கும் என்பது உறுதி.
இச்சூழலில், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக, நாம் வெனிசுலா நாட்டின் இறையாண்மையைச் சிதைக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேசமயம், அமெரிக்காவை எதிர்ப்பதற்காக ரஷ்யா மற்றும் சீனாவின் காலடியில் தஞ்சம் புகுவது உண்மையான விடுதலையைப் பெற்றுத் தராது. வெனிசுலாவில் ரஷ்யாவும் சீனாவும் மேற்கொண்டுள்ள முதலீடுகள் அந்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கானவையே தவிர, சோசலிச நோக்கங்களுக்காக அல்ல.
எனவே, ஒரு ஏகாதிபத்தியத்திடம் (அமெரிக்கா) இருந்து தப்பிக்க, போட்டியில் ஈடுபடும் இன்னொரு ஏகாதிபத்தியத்திடம் (சீனா-ரஷ்யா) உறவாடுவது தற்காலிகப் பலன்களையும் நீண்டகால நெருக்கடிகளையும் உள்ளடக்கியது. இது தேசிய இறையாண்மை கொண்ட தற்சார்பான நாட்டை உருவாக்க உதவாது என்பதே வெனிசுலா ஆட்சியாளர்களும் மக்களும் உணர வேண்டிய உண்மை.
உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலை, அனைத்து வகையான ஏகாதிபத்தியச் சுரண்டல்களையும் முறியடிப்பதில் மட்டுமே உள்ளது. அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை முன்னெடுக்கும் வெனிசுலா மக்களுக்கும், இதர நாடுகளின் மக்களுக்கும் துணைநிற்போம்! மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம்!
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











