சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி

சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சிக்குப் பண்பாட்டுத் தளத்தில் சரியான மாற்றை முன்னிறுத்தும் வகையில், ஒரு பண்பாட்டுப் போருக்கான தொடக்கப்புள்ளியாக இம்மணவிழா அமைந்துள்ளது. இது அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகரும்.

ந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு முதன்மையான காரணமாகும்.

எனினும், தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதற்குப் பின்னணியில் உள்ள பல்வேறு காரணிகளையும், அதற்கெதிரான அம்மக்களின் எதிர்ப்புணர்வையும் சரியாகப் பரிசீலிப்பது சாதி ஒழிப்பிலும், அதிகரித்துவரும் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றும்.

1990-களில் தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில், தங்கள் மீதான சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் தலித் மக்கள் எழுச்சிகரமாகப் போராடத் தொடங்கினர். மேலவளவு, கொடியங்குளத்தில் நடந்தேறிய சாதிவெறியாட்டங்கள் அந்த எழுச்சியின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளாகும். அன்று இந்த எழுச்சிக்கு முகங்கொடுக்கும் வகையில் புரட்சிகர அமைப்புகளும், பல்வேறு தலித் அமைப்புகளும் களத்திற்கு வந்தன.

அதன் பிறகு, இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக விவசாய நசிவு, நகரமயமாக்கல் போன்றவை தீவிரமடைந்தன. கூலி, ஏழை விவசாயிகளாக இருந்த தலித் மக்கள் பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கி நகர்ந்தனர். இது கிராமங்களில் ஆதிக்கச் சாதியினருடனான தலித் மக்களின் சாதியப் பிணைப்பில் ஒரு தளர்வை ஏற்படுத்தியது.

கடந்த சில பத்தாண்டுகளில் சமூகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் உற்பத்தி சக்திகளிலும் துலக்கமான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உற்பத்தி சக்திகளின் இந்த வளர்ச்சியானது நிலவும் கட்டமைப்பு, பண்பாடு, அரசியல் சட்டங்கள் ஆகியவற்றில் மாற்றத்தைக் கோருகிறது.

தலித் மக்களின் உரிமைகள் குறித்தும் சமத்துவமான சமூகத்திற்கானத் தேவை குறித்தும் கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விவாதங்கள் அதிகரித்திருப்பது இதன் அங்கமே.

சமத்துவத்திற்கான இந்த எழுச்சியைச் சகித்துக்கொள்ள முடியாத பிற்போக்குக் கும்பல், சாதிவெறி, வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்பி தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. சாதி ஆணவப் படுகொலைகளும் இதன் வெளிப்பாடே.

2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தலித் இளைஞர்கள் கூலிங் கிளாஸ், டி-சர்ட் அணிந்துகொண்டு ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெண்களைப் பணத்திற்காக நாடகக் காதல் செய்து ஏமாற்றுவதாக ராமதாஸ் – பா.ம.க. கும்பல் சாதிவெறி வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இதன் உச்சமே, நத்தம் காலனி தாக்குதலும் இளவரசனின் ஆணவப் படுகொலையும். அப்போது அதற்கெதிராக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் குரல் கொடுத்தது.

அப்போது கொங்கு மாவட்டங்கள் சாதியத் தாக்குதலின் குவிமையமாக இருந்தன. தற்போது தென்மாவட்டங்கள் ஆதிக்க சக்திகளின் இத்தாக்குதல் இலக்கில் உள்ளன. நன்றாகப் படித்ததற்காக நாங்குநேரி சின்னதுரை சக மாணவர்களாலேயே வீடு புகுந்து வெட்டப்பட்டது; தூத்துக்குடியில் கபடி போட்டியில் வெற்றி பெற்றதற்காக தேவேந்திரன் என்ற பள்ளி மாணவன் வெட்டப்பட்டது; சிவகங்கையில் புல்லட் ஓட்டியதற்காக அய்யாச்சாமி என்ற இளைஞரின் கைகள் வெட்டப்பட்டது ஆகியவை இத்தாக்குதல்களின் கோரத்தைக் காட்டுகின்றன.

இத்தாக்குதல்கள், 1990-களில் நடந்ததைப் போல மக்களிடையே வேரூன்றியுள்ள சாதி ஆதிக்கத்தினால் நடப்பதைக் காட்டிலும், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களாலும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பல சம்பவங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன. முன்னேறிவரும் சமூகத்தின் மீதான இந்தப் பிற்போக்குச் சக்திகளின் தாக்குதல் திட்டவகைப்பட்ட வகையில் தீவிரமடைந்து வருகிறது.

தலித் மக்கள் மீது மட்டுமின்றி, பெண்கள் தங்கள் துணையைச் சுயமாகத் தேர்ந்தெடுப்பதற்கு எதிராகவும், இளந்தலைமுறை சாதி, மதம், வர்க்கம் கடந்து காதலித்து மணம் முடிக்கும் ஜனநாயக உணர்வின் மீதும் இத்தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. குறிப்பாக, ஆணவப் படுகொலைகள் என்பன பெண்களை உடமைகளாக்கி அவர்களை பழைய நிலையில் இறுத்தி வைப்பதற்கான தாக்குதல்களாகும். பெண்களிடையே ஏற்பட்டுவரும் சுதந்திரம், சமத்துவத்திற்கான வேட்கையை ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சியாகும்.

எனவே, கவின் உள்ளிட்ட இளைஞர்கள் மீதான சாதி ஆணவப் படுகொலைகளை இப்பின்னணியில் இருந்தே பார்க்க வேண்டியுள்ளது. 2013-இல் இளவரசனின் ஆணவப் படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கிளர்ந்தெழுந்தது போல, கடந்தாண்டு அரங்கேறிய கவினின் ஆணவப் படுகொலையையும் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கண்டித்தது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் தளத்திற்கு வந்தது.

ஆனால், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கச் சட்டப் பாதுகாப்பு மட்டும் போதாது, மக்களுக்கு சமூகப் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. சான்றாக, டிஜிட்டல் ஊடகங்களைத் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்றினாலும், சமூகத்தில் அதற்கான ஜனநாயக வளர்ச்சி ஏற்படாதவரை அத்தவறுகளைத் தடுக்க முடியாது.

அதுபோன்று, ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சரியான வழிமுறைகளை இங்கு முன்வைக்க வேண்டியுள்ளது. இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்கும் ஒரு பண்பாட்டு ரீதியான சமூக மாற்றம் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டு ரீதியான ஒரு எதிர்த்தாக்குதல், ஒரு பண்பாட்டுப் போர் தேவைப்படுகிறது!

குறிப்பாக, சாதி ஒழிப்பில் அகமணமுறை ஒழிப்பின் முக்கியத்துவத்தை பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி ஒழிப்புத் தலைவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். செங்கொடி இயக்கம், நக்சல்பாரி இயக்கத் தோழர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சாதி மறுத்து மணமுடித்துக் கொள்வதை இயல்பான வழிமுறையாகக் கடைப்பிடித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, 1990-களின் பிற்பகுதியில் ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் அங்கமாக சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாக்களை நடத்தி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே, டிசம்பர் 28, 2025 அன்று தோழர்கள் ராதிகா-ரவி இணையரின் “சாதி மறுப்புப் புரட்சிகர மணவிழா” நடந்தேறியுள்ளது. அதிலும் குறிப்பாக, பிற்போக்கு சக்திகள் மாறிவரும் இச்சமூகத்தின் மீது தொடுக்கும் ஆணவப்படுகொலைகள், சாதியத் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு மாற்றுப் பண்பாட்டுப் போரைத் தொடுக்க வேண்டும் என்பதை சரியாக அடையாளப்படுத்தும் விதமாக இம்மணவிழா நடந்துள்ளது.

முக்கியமாக, இம்மணவிழாவிற்கு தலைப்பிடப்பட்ட “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கம் இங்கு ஓர் உண்மையான ஜனநாயகவெளி தேவை என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது.

அதேபோல், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளவரசன், சங்கர், கவின் உள்ளிட்ட தியாகிகளின் புகைப்படங்களுடன் அச்சடிக்கப்பட்ட இம்மணவிழா அழைப்பிதழ் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இந்தப் பண்பாட்டுப் போரில் உயிர்நீத்த இத்தியாகிகளை சாதி ஆதிக்கத்திற்கு எதிரான எழுச்சியின் நாயகர்களாக அங்கீகரித்து அவர்களை முன்னிறுத்தி இம்மணவிழா நடைபெற்றது.

திருமண அழைப்பிதழ்களில் மார்க்சிய ஆசான்கள், அரசியல் தலைவர்கள், தங்களுடைய முன்னோர்களின் புகைப்படங்களைப் போடுவது வழக்கமாக உள்ள நிலையில், ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் புகைப்படங்களைப் போட்டு அழைப்பிதழ் அடித்தது பலருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அழைப்பிதழைப் பார்த்த கவினின் தாய் தனது மகனின் புகைப்படம் திருமண அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பதைப் பார்த்து நெகிழ்ந்து போனார்.

இந்த அனைத்து வகையான உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், ஜனநாயக சக்திகள் இம்மணவிழாவிற்குத் தாமாக முன்வந்து பிரச்சாரம் செய்தனர், மணவிழா வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டனர், அலை அலையாக மண்டபத்தைத் தேடிவந்து கலந்துகொண்டனர். மொத்தம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இம்மணவிழாவில் பெண்களும் இளைஞர்களும் தாமாக முன்வந்து பங்கேற்றனர். பலர் தங்கள் காதலர்களுடன் இம்மணவிழாவிற்கு வருகை புரிந்தனர். அவர்களுக்கு நாமும் இவ்வாறு திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை மணவிழா ஏற்படுத்தியது. இது இந்த அரசியல் முன்னெடுப்பிற்கான அங்கீகாரமும் அவர்களிடம் விதைக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுமாகும்.

முக்கியமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் தோழர் சு.க.முருகவேல் ராஜன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் தோழர் ஜக்கையன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி, மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் தோழர் கா.மாரிமுத்து ஆகியத் தலைவர்கள் மணவிழாவில் பங்கேற்றது என்பது தலித் மக்களிடம் இம்மணவிழாவிற்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பறைசாற்றுகிறது. மேலும், ஆணவப் படுகொலைகள், சாதியத் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கும் தேர்தலுக்கு வெளியே ஒன்றிணைய வேண்டியத் தேவையை இத்தலைவர்கள் மணவிழாவில் வலியுறுத்திப் பேசினர்.

ஒட்டுமொத்தமாக, சாதி ஒழிப்பையும், வர்க்க ஏற்றுத்தாழ்வை ஒழித்து ஒரு சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தி இம்மணவிழா நடந்தேறியது. சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சிக்குப் பண்பாட்டுத் தளத்தில் சரியான மாற்றை முன்னிறுத்தும் வகையில், ஒரு பண்பாட்டுப் போருக்கான தொடக்கப்புள்ளியாக இம்மணவிழா அமைந்துள்ளது.

இது அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகரும். சாதி – மதம் கடந்து காதலிப்பவர்கள் மற்றும் மணம் முடிப்பவர்களுக்குச் சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதற்கான சமூக மாற்றத்திற்கு வித்திடும். அதற்கு அடித்தளமிட்ட இப்புரட்சிகர மணவிழா நாளானது ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சிநாள் ஆகும்.


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க