சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம்முடிக்க
வேண்டும் ஜனநாயகம்!
பிப்ரவரி 21, 2026
தமுக்கம், மதுரை
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
தப்பாட்டம் – நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் –
சாதி, மத மறுப்பு இணையர்களின் அனுபவப் பகிர்வுகள் – கருத்துரைகள்
ஆணவப் படுகொலைகளின் இரத்தச் சாட்சிகள் – ஓவியம், படக் கண்காட்சி
நேரடி அனுபவங்கள் – தீர்மானங்கள் – புரட்சிகரக் கலை நிகழ்ச்சி
***
(பிரசுரத்தை பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்)
***

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
காதல்,
வாழ்க்கைத் துணையைத்
தேடிக்கொள்ளும் உரிமை.
பொதுவில், காதலை எதிர்த்தாலும்
பிள்ளைகள் தேர்ந்தெடுத்த
வாழ்க்கைத்துணை
ஏழைகளாகவும், தலித்துகளாகவும்,
இசுலாமியர்களாகவும்,
இருக்கும் போதுதான் அந்த வெறுப்பு,
ஆணவப் படுகொலைகளாக
அரங்கேறுகிறது.
இளவரசன், சங்கர், கவின், முகமது ஆஷிக்….
சாதிவெறி, மதவெறியின் இரத்தச் சாட்சிகள்!
பிள்ளைகள் படிக்க வேண்டும்.
சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்.
ஆனால்,
வாழ்க்கைத் துணையை மட்டும்
அவர்களே தேடிக்கொள்ளக் கூடாது.
இது குடும்ப கௌரவமா? இல்லை!
சாதிவெறி, மதவெறியை
மறைக்கப் பயன்படும்
ஆணாதிக்கத்தின் முகமூடி!
பார்ப்பனியம் ஊட்டி வளர்த்த
அடிமைப் புத்தியின் வெளிப்பாடு!
காதல் என்றாலே கலாச்சாரச் சீரழிவு எனும்
போலிப் புனிதத்தின் பிதற்றல்!
“நாடகக் காதல்”, “ஆண்ட பரம்பரை”,
“லவ் ஜிகாத்”, “இந்துப் பண்பாடு”
இவை, போலிப் பெருமிதங்கள் மட்டுமல்ல
நச்சு விதைகள்.
வேங்கைவயலும் நாங்குநேரியும்
இவற்றின் வேறுபட்ட வடிவங்கள்!
ஆணவப் படுகொலைகளும்
சாதிவெறி, மதவெறித் தாக்குதல்களும்
உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும்
சமூகப் பண்பாட்டுப் போரின் வடிவங்கள்!
இவற்றின் தளகர்த்தர்களாக
சங்க பரிவாரக் கும்பல்களும்
ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களும்.
பார்ப்பனியத்தின் புதிய அவதாரங்களான
இவைதான், மக்களின் எதிரிகள்!
“ஆண்ட பரம்பரை”
எனும் போர்வையில்
தலித் மக்களையும் இழுக்கும் கருங்காலிகள்!
“மூத்தக் குடி” என்று கூறிக்கொண்டே
சங்கிகளுக்கு சலாம் போடும் அரை சங்கிகள்!
இவை, தமிழ் இனத்தை
அழிக்கும் பார்ப்பனியத்தின்
கோடாரிக் காம்புகள்!
சாதிவெறிச் சங்கங்கள், சங்கப் பரிவாரங்களைத்
தடை செய்ய வேண்டும்.
சாதிவெறித் தாக்குதலில் ஈடுபடுபவர்களின்
சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
உடனடியாக, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க
சிறப்புச் சட்டம் வேண்டும்.
இவை, நமது கோரிக்கை.
பெண்களுக்கு
சொத்துரிமை பறிப்பு
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பறிப்பு
பொது சிவில் சட்டம்… இவை,
சாதி-மதவெறியர்களின் கோரிக்கை.
பக்கபலமாக, பாசிச மோடி அரசும்
சங்கிகளின் நீதிமன்றங்களும்.
இதுதான், சட்டத்தின் வழியே
பாசிசத்தின் அரங்கேற்றம்!
இவை மட்டுமா…
பாசிசத்தின் தீச்சுவாலைகள்?
மாநிலங்களின் உரிமையைப் பறிக்க
“ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு…!
மக்களின் உயிரை மாய்க்க
மொழி, கல்வி, வரி, நிலம், சட்டம் ஒழுங்கு என
அனைத்திலும் நுழைந்துள்ளது
சங்கிகளின் சர்வாதிகாரம்.
இதுதான், இந்துராஷ்டிரம்!
இதன் கடவுளர்களாக
அம்பானி, அதானி, அகர்வால்கள்…!
குலதெய்வங்களாக மார்வாடி-சேட்டுகள்!
சமஸ்கிருதம், அகண்டபாரதம்,
இந்துராஷ்டிரம் என
பரிமாணங்கள் பலவாகினும்
சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமுமே
பார்ப்பனியத்தின் இரண்டு கண்கள்!
சாதி, மதம் கடந்த மணங்கள்
பார்ப்பனிய நச்சுமுறிவு மருந்து!
வேடன் முருகன் – குறத்தி வள்ளி
காத்தவராயன் – ஆரியமாலா
மதுரை வீரன் – பொம்மி
இளவரசன் – திவ்யா
கவின் – சுபாஷினி…
பார்ப்பனியக் கொடுங்கனவின்
கதாநாயகர்கள்!
காதலில் மட்டுமல்ல… நீதியிலும்
தமிழ்நாடு பார்ப்பனியத்தின் கொடுங்கனவே!
புட்டுக்கு மண்சுமந்த ஈசனும்
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றத்தை உரைத்த நக்கீரனும்
உழைக்கும் மக்களின் நியதி.
மனுநீதிக்கு எதிரானதே,
தமிழ் கூறும் நல்லுலகின் நீதி!
தமிழ் மண்ணில் தழைத்தோங்கிய
சமத்துவம், ஜனநாயகம்…
இதுவே, நமது பண்பாடு.
தமிழ்ப் பண்பாடு!
ஆர்.எஸ்.எஸ்-ஸும்
ஆதிக்கச் சாதிவெறியர்களும்
தொடுக்கும் பண்பாட்டுப் போருக்கு எதிராக..
உழைக்கும் மக்களின்
தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்!
வாழ்க்கைத் துணைத் தேடும்
உரிமையை அழிக்கும்
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக,
மக்களைப் பிளவுபடுத்தும்
சாதி – மதவெறிக்கு எதிராக,
தாய்மொழியை அழிக்கும்
இந்தி – சமஸ்கிருத ஒற்றை மொழி
சர்வாதிகாரத்திற்கு எதிராக,
மறைக்கப்படும் நம் மரபுகளை மீட்டெடுக்க,
தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கே உரிய
சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும்
நிலைநாட்ட… வாருங்கள்!
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கு
அலைகடலெனத் திரளுங்கள்!
***

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் முழக்கங்கள்!
- ஆணவப் படுகொலைக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதி வெறியாட்டங்களைத் தூண்டிவரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்வது; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்று!
- சாதி, மத மறுப்பு மணங்களை மக்கள் முன்னிலையில் அரசே முன்னின்று நடத்தி அங்கீகரி! சாதி, மத மறுப்பு மணம் புரியும் இணையர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு! ஊக்கத்தொகை வழங்கு! சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்து! மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் “சாதி, மதமற்றவர்” என்று பதிவு செய்ய தனிப்பிரிவை உருவாக்கு! “சாதி, மதமற்றோர்” என சான்றிதழ் பெற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கு!
- டாஸ்மாக்கை மூடு – போதைப் பொருட்களைத் தடை செய்! பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத போலீசு அதிகாரிகளைத் தண்டித்திடு பெண் கல்வி, பெண் சுதந்திரத்தை மறுக்கும், பெண்களை போகப் பொருளாக்கும் ஆபாசத் திரைப்படங்கள், இணையதளங்கள், நாடகங்கள், புராண இதிகாசங்கள் உள்ளிட்டவற்றைத் தடைசெய்!
- கீழடி தொல்லியல் புதையல்கள், பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுகள், சமணர் குகைகள் போன்ற தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு – டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு – ஐல்லிக்கட்டுப் போராட்டங்களின் தொடக்கப்புள்ளியாகவும், விடுதலைப் போரின் தொடக்கப்புள்ளியாகவும், திருப்பரங்குன்றம், பறம்பு மலை என மதநல்லிணக்க அடையாளங்களின் தாய்மண்ணாகவும் பார்ப்பனிய எதிர்ப்பு நாட்டார் தெய்வ, குல தெய்வ வழிபாடுகளின் அடையாளமாகவும் திகழ்கின்ற மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவி! இந்த மரபுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஐ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்!
- இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயம், சிறு-குறு வணிகத்தை அழிக்கும். கல்வி, மருத்துவத்தைப் பண்டமாக்கும், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் கொள்கைகள், திட்டங்களைக் கைவிடு! தமிழ்நாட்டை ஆக்கிரமித்துள்ள மார்வாடி கும்பலை வெளியேற்று!
இணைந்து பயணிக்க:
9962366321 – 9791653200
9444836642 – 7397404242
படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு
நிதி ஆதரவு தாரீர்!

98402 49210 (G-Pay)
மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
தமிழ்நாடு – புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











