காசா: சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்த இஸ்ரேல் அரசு

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் இயங்கி வந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடை செய்துள்ளது இனவெறி பிடித்த இஸ்ரேல். இது அப்பட்டமான சட்ட மீறலாகும் என ஐ.நா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

க்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் இயங்கி வந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களைத் தடை செய்துள்ளது இனவெறி பிடித்த இஸ்ரேல். இது அப்பட்டமான சட்ட மீறலாகும் என ஐ.நா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உதவிகளைத் தடுப்பதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை மேலும் மோசமாக்குகிறது என்று அவர்கள் இஸ்ரேலைக் குற்றம் சாட்டுகின்றனர்.

“காசாவில் இயங்கி வரும் உயிர் காக்கும் அமைப்புகளுக்குத் தடை விதிப்பது என்பது இனப்படுகொலையால் ஏற்கனவே பேரழிவைச் சந்தித்த மக்களுக்கு வாழ்க்கையைத் தாங்க முடியாததாக மாற்றுகிறது. இது ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது” என ஐ.நா நிபுணர்கள் கூறினர்.

“இந்த உத்தி பாலஸ்தீனியர்களைத் தொடர்ச்சியான வறுமையில் தள்ளும் நிலைமைகளை உருவாக்கும். இது அவர்களின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமைவதுடன், இனப்படுகொலை உடன்படிக்கையையும் மீறுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்” என கூறினர்.

‘தேசியப் பாதுகாப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் இனவெறி இஸ்ரேலால் டிசம்பர் 30, 2025 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை, 37 சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜனவரி 1, 2026 முதல் காசா மற்றும் மேற்கு கரையில் செயல்படுவதற்குத் தடை விதிக்கிறது. இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு அமைப்பு இதற்கு முன்பு ஆதரவளித்திருப்பது; புறக்கணிப்புகளில் ஈடுபட்டது; இஸ்ரேலை யூத மற்றும் ஜனநாயக நாடாக வகைப்படுத்தத் தவறியது போன்ற காரணங்களின் அடிப்படையில், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை மறுப்பதற்கு இந்த விதிமுறை இஸ்ரேல் அதிகாரிகளுக்குப் பரந்த அதிகாரத்தை வழங்குகிறது.

“இந்த தடை என்பது தனியான செயல் அல்ல, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் மனிதாபிமான நடவடிக்கைகள் மீது தொடுக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதியாகும். மேலும், காசாவின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் நடவடிக்கையில் மற்றொரு படியாகும்” என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். “காசாவில், இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சுழல் பாதிப்புகளுக்கு மத்தியில் கடுங்குளிர், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மருத்துவ மற்றும் கல்வி அமைப்புகளின் சிதைவு ஆகியவற்றுடன் போராடி வருகின்றனர்.”

“மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் வளாகங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது; உதவிப் பொருட்களுடன் செல்லும் வாகனங்கள் தடுக்கப்படுகின்றன. இதற்கு மத்தியில், உயிர் பிழைத்தவர்களுக்கு இவை ”கூட்டுத் தண்டனையாக” (Collective Punishment) அமையும்“ என்று அவர்கள் கூறினர்.

“அக்டோபர் 2023 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை இஸ்ரேலிய படை 500க்கும் மேற்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் குறைந்தது 1,500 சுகாதார பணியாளர்களைக் கொலை செய்துள்ளது. மனிதாபிமான உதவியாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல், துன்புறுத்துதல் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் ஆகிய நடவடிக்கையிலும் ஈடுபடுகிறது. ஐ.நா நிவாரண முகமைதான் மிகவும் வெளியில் தெரியும் இலக்காக இருந்தாலும் அது மட்டுமே ஒரே இலக்கு அல்ல” என்று அந்த வல்லுநர்கள் கூறினர்.

டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மனிதாபிமான பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்கள், இஸ்ரேலிய படைகள் காசாவின் பாதி பகுதிகளை ஆக்கிரமித்தும் வருகிறது. தவிர, வான்வெளித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சு மூலம் மூன்று மாதங்களில் 400-க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்துள்ளது.

டிசம்பர் மாத தொடக்கத்தில், ஐ.நா முகமைகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் 85,000 மக்களுக்காக வெறும் 14,600 கூடாரங்களை மட்டுமே வழங்க முடிந்தது. இதனால் 13 லட்சம் பாலஸ்தீனியர்கள் போதுமான குளிர்கால தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர். எட்டு குழந்தைகள் உட்பட பல பேர் ஏற்கெனவே கடும் குளிரால் உயிரிழந்துள்ளனர்.

“நாம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம்; இதில் இஸ்ரேலும் அவர்களது ஆதரவாளர்களும் சாட்சிகளற்ற இனப்படுகொலை என்கிற கட்டத்தை எட்டியுள்ளனர்,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது; அவர்களுக்கு அனுமதி மறுப்பது; வெளியேறக் கட்டாயப்படுத்துவது; மனிதாபிமான அமைப்புகளை முடமாக்குவது, வெளியேற்றுவது என பொதுமக்களின் கவனத்திற்குச் செல்லாத வகையில் அட்டூழியங்கள் இழைக்கப்படுகின்றன.”

“காசா மாறிவருவது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை” என ஐ.நா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“உதவிகளை நிறுத்துவதற்கும் மனிதாபிமான அமைப்புகள் மீது கட்டாயத் தேவைகளை (coercive requirements) விதிக்கவும் எந்த சட்டப்பூர்வ உரிமையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு இல்லை” என வல்லுநர்கள் கூறுகின்றனர். “சர்வதேச சட்டத்தின்படி இந்த ஆக்கிரமிப்புகள் சட்டவிரோதமாகும். இந்த சட்டக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கான ஒரே வழி, பாலஸ்தீனத்தை காலனி ஆக்கப்படுவதிலிருந்து விடுவித்து, பாலஸ்தீனிய மக்களின் வாழ்வு மற்றும் நிலத்தின் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது தான்.”

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் நிபந்தனையின்றிச் செல்வதை உறுதிசெய்ய, குறிப்பாக செல்வாக்கு மிக்க நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். “சர்வதேசக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு நாடு, சட்டவிரோத ஆக்கிரமிப்பைச் செய்து கொண்டே, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் உயிர்காக்கும் உதவிகளைத் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என ஐ.நா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இனப் படுகொலைச் செயல்களைத் தடுப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறினால், மற்ற நாடுகளின் தலைவர்களும் பொறுப்பேற்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.

“இப்பகுதியில் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கு இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் இனவெறி நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதே ஒரே வழி என்றாலும், பிற நாடுகள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அனைத்துத் தடைகளையும் நீக்கி ஐ.நா. மேற்பார்வையிடப்பட்ட தரை மற்றும் கடல் வழித்தடங்கள் வழியாக பாதுகாப்பான, தொடர்ச்சியான மற்றும் தடையற்ற உதவிகள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர்கள் மேலும் கூறினர்.

போர்நிறுத்த விதிமுறைகளை மீறி தாக்குதல் தொடுப்பது; காசா மக்களுக்கான அடிப்படைப் பொருட்களை முடக்குவது; உணவு வாகனங்களை நிறுத்தி வைப்பது என காசாவில் தொடர்ந்து அட்டூழியங்களை நிகழ்த்தி வருகிறது இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு. இந்நிலையில், காசாவில் இயங்கி வந்த சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குத் தடை செய்திருப்பதன் மூலம் இந்நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவிற்கு ஆதரவாக நடக்கும் மக்கள் போராட்டங்களால் மட்டுமே இஸ்ரேலின் அராஜகத்தைத் தடுத்த நிறுத்த முடியுமே ஒழிய ஐ.நா வல்லுநர்கள் கூறுவதுபோல் பிற நாட்டுத் தலைவர்களிடம் முறையிடுவது மூலம் நிறுத்த முடியாது என்பதே கடந்தகால உண்மையாகும்.


சையத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க