கடந்த டிசம்பர் 28, 2025 அன்று மதுரையில் “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் ரவி (எ) செல்வகணேஷ் – தோழர் ராதிகா இணையரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா எழுச்சிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அலை அலையாக திரண்டுவந்த தமிழ்நாட்டு இளைஞர்கள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சியினரின் பேராதரவினால் இம்மணவிழா ஓர் அரசியல் மாநாட்டை போல நடந்தது என்றால் அது மிகையாகாது.
யா.ஒத்தக்கடை தேவர் சிலை பேருந்து நிலையத்திலிருந்து திருமோகூர் அ.பா.வளையாபதி திருமண மண்டபம் வரையிலான சுமார் இரண்டு கி.மீ. தொலைவிற்கு சாலையின் இருபுறமும், இடது பக்கமாக வான் நோக்கி உயர்த்திய கையுடனும் மின்னும் நட்சத்திரத்துடனும் “மக்கள் அதிகாரக் கழகம்” என்று பொறிக்கப்பட்டிருந்த செங்கொடி நடப்பட்டிருந்தது. இடையிடையே நடப்பட்டிருந்த வி.சி.க. கட்சி கொடியானது இரு கட்சிகளும் இணைந்து இம்மணவிழாவை நடத்துவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவில் மறைந்த நக்சல்பாரி புரட்சியாளர்கள் அப்பு, பாலன், சம்பத் மற்றும் கம்யூனிச புரட்சியாளர்கள் சீனிவாசராவ், களப்பால் குப்பு, சாம்பவான் ஓடை சிவராமன் ஆகிய தோழர்களின் புகைப்படங்கள் கம்யூனிஸ்டுகளின் வர்க்கப் போராட்ட வரலாற்றையும் சாதி ஒழிப்பு போராட்ட வரலாற்றையும் நினைவுகூறும் விதமாக அமைந்தது.
சமீபத்தில் மறைந்த, மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க. (மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், புரட்சிப்புயல் சித்தாந்த இதழின் ஆசிரியர், புதிய ஜனநாயகம் இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் தியாக உணர்வை வரித்துக்கொள்ளும் பொருட்டு இம்மணவிழா அரங்கிற்கு தோழர் சம்பத் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. மேடையின் நடுவே தோழர் சம்பத்தின் புகைப்படமும், சாதி ஆணவப்படுகொலையில் பலியானவர்களின் புகைப்படங்கள் இடப்புறத்திலும், கம்யூனிச ஆசான்கள் சாதி ஒழிப்பு – சமத்துவப் போராளிகளின் புகைப்படங்கள் வலப்புறமும் பொறிக்கப்பட்டு மணவிழா மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மணவிழாவிற்கு அலை அலையாக திரண்டுவந்த மக்கள் கூட்டத்தால் அரங்கம் நிறைந்தது. அரங்கத்திற்கு வெளியே இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகள் முன்பும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மணவிழாவின் பத்திரிகையை இணையத்தில் பார்த்தும் கழகத் தோழர்களின் பிரச்சாரத்தாலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுய விருப்பத்தின் பேரில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் தங்களது நண்பர்கள், குடும்பத்தினரை இம்மணவிழாவிற்கு அழைத்து வந்திருந்தனர்.
நெல்லை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த கழகத் தோழர்கள் பேருந்து ஏற்பாடு செய்து பிற அமைப்புத் தோழர்களையும் நண்பர்களையும் இளைஞர்களையும் மணவிழாவிற்கு அழைத்து வந்தனர். தோழர்கள் செங்கொடி ஏந்தி முழக்கமிட்டவாறு அரங்கத்திற்குள் நுழைந்தது மணவிழாவில் வீற்றிருந்தவர்களுக்கு உணர்வூட்டியது.
மணவிழா நிகழ்ச்சி திட்டமிட்டப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் மாறன் வீரவணக்க உரையை வாசிக்க, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் அதனை ஏற்று மீண்டும் முழங்கினர்.
வி.சி.க. கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அரங்கிற்கு வந்த பிறகு, சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு நிகழ்வு தொடங்கப்பட்டது. சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் மற்றும் அரங்கத்தினர் முன்னிலையில் தோழர் வெற்றிவேல் செழியன் மண ஏற்பு உறுதிமொழியை வாசிக்க, அதனை மணமக்கள் வாசித்தனர். “மணமக்கள் வாழ்க” என்ற முழக்கம் விண்ணதிர மலர் தூவல்களுக்கு நடுவே மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்.
மேலும், இந்த மண ஏற்பு விழா தோழர் ராதிகாவின் மறுமணம் ஆகும். அவரது ஆறு வயது மகனை மணமக்களுக்கு நடுவில் நிற்கவைத்து மண ஏற்பு விழா நடைபெற்றது இம்மணவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல, இந்த சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழாவின் நோக்கத்தை ஈடேற்றும் வகையில், இதே மண விழா மேடையில் மற்றொரு சாதி-மத மறுப்பு மண ஏற்பு விழா நடைபெற்றது. தோழர் திருமாவளவன் தலைமையில் தோழர்கள் கிறிஸ்டோபர் – விஜி இணையர்கள் சாதி, மதம் கடந்து மண ஏற்பு செய்துகொண்டனர்.
மண ஏற்பு விழாவில் தோழர் டங்ஸ்டன் பிரகாஷ், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர், ம.அ.க. வரவேற்புரை ஆற்றினார். தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், ம.அ.க., தோழர் கா.மாரிமுத்து, மக்கள் விடுதலை முன்னணி அமைப்பாளர், தோழர் அண்ணாமலை, திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர், தி.மு.க., தோழர் தீரன், மாநில ஒருங்கிணைப்புக் குழு, பு.மா.இ.மு., தோழர் ஆ.கா.சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு), தோழர் மகாலெட்சுமி, த.மு.எ.க.ச., தோழர் ஆரோக்கியமேரி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம், தோழர் மாலின், மதுரை வி.சிக., தோழர் சரவணன், வழக்கறிஞர் பிரிவு, வி.சி.க., தோழர் நிலவழகன், மக்கள் தமிழகம் கட்சி, தோழர் சிவப்பிரகாசம், 58 கிராம பாசன விவசாய சங்கம், தோழர் சு.க.முருகவேல் ராஜன், தலைவர், மக்கள் விடுதலைக் கட்சி, தோழர் தொல்.திருமாவளவன், தலைவர், வி.சி.க., தோழர் ஜக்கையன், தலைவர், ஆதித்தமிழர் கட்சி, தோழர் முத்துக்குமார், செய்தித் தொடர்பாளர், தமிழ் புலிகள் கட்சி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவர்கள் மட்டுமின்றி, தோழர் வெண்மணி, தலைவர், திராவிட தமிழர் கட்சி, தோழர் கனியமுதன், துணைப் பொதுச் செயலாளர், வி.சி.க., தோழர் பக்ருதீன், மாநில செயலாளர், ஐ.மு.மு.க., தோழர், சீனி அகமது, மாநில நிர்வாகி, ம.ஜ.க., தோழர் மெய்யப்பன், பொறுப்பாளர், தமிழ்தேச குடியரசு இயக்கம், தோழர் வால்டர், மாநிலப் பொறுப்பாளர், இ.சோ.ஒ.மை., தோழர் யோகேஸ்வரன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.எம்.எல். மாஸ்லைன், தோழர் நாகேஸ்வரன், தலைவர், பெரியார் பேரவை, அ.செ.அருண்பாண்டியன், தலைவர், தமிழர் எழுச்சிக் கழகம், முத்துப்பாண்டி, மாநில இளைஞரணி, துணைச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிச அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் புரட்சிகர மணவிழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இம்மணவிழாவில் கலந்துகொள்ளாத அரசியல் சக்திகளும் தோழர்களை தொடர்புகொண்டு தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இவ்வாறு, அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், ஜனநாயக சக்திகள் அங்கீகரிக்கும் நிகழ்வாக இப்புரட்சிகர மணவிழா நடைபெற்றுள்ளது.
முக்கியமாக, இம்மணவிழாவில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடக்கூடிய சக்திகளுக்கான ஆயுதமாக மூன்று முக்கியமான நூல்கள் வெளியிடப்பட்டது. “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்” என்ற நூலை தோழர் வெற்றிவேல் செழியன் வெளியிட தோழர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார். “சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்” என்ற நூலை தோழர் சு.கா.முருகவேல் ராஜன் வெளியிட தமிழ் புலிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தோழர் முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். “தலித் மக்கள் மீது அதிகரித்துவரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற நூலை மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி வெளியிட திராவிட தமிழர் கட்சியின் தோழர் வெண்மனி பெற்றுக்கொண்டார்.
மேலும், மண ஏற்பு விழாவிற்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். இந்நிகழ்வானது சாதியை மறுத்து மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை பல காதலர்கள், இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. அமைப்புத் தோழர்களிடம் பலரும் தங்களது இந்த விருப்பத்தை தெரிவித்திருக்கின்றனர். இதுவே, இந்த புரட்சிகர மணவிழா ஏற்படுத்திய வெற்றியாகும்.
அதுமட்டுமின்றி, இப்புரட்சிகர மணவிழா ஏற்படுத்திய தாக்கம் பலருக்கும் அழியாத நினைவுகளாய் பதிந்திருக்கும் என்றால் மிகையாகாது. “வெட்டுப்பட்டு செத்தோடமடா மேலவளவுல” என்ற ம.க.இ.க-வின் புரட்சிகர பாடலை சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள் பாடும்போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நினைத்து சிலர் தங்களை அறியாமல் கண்ணீர் வடித்தனர். தோழர் ஒருவர் விவகாரத்து பெற்று குழந்தையுடன் உள்ள தன் மகளுக்கும் அமைப்புத் தோழருடன் இதுபோன்று மணம் முடித்து வைத்திருக்கலாம் என்று தன் உணர்வை வெளிப்படுத்தினார்.
மேலும், இம்மணவிழாவில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மணவிழாவிற்கு வந்த மக்களில் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
அரங்கத்தின் நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் கடையில் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. மணவிழாவில் வெளியிடப்பட்ட மூன்று நூல்களும் அதிகளவில் விற்பனையாகின.
இவ்வாறு தோழர்கள் ராதிகா – ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா ஓர் அரசியல் இயக்கமாக நடந்து முடிந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலாலும் ஆதிக்கச் சாதி வெறியர்களாலும் தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் சூழலில் இதுபோன்ற சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள் அதற்கெதிரான கலகக்குரல்களாகும். இத்தகைய மணவிழாக்களே ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. கும்பல்களுக்கும் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கும் சம்மட்டி அடி கொடுக்கும்.
அந்தவகையில், இம்மணவிழா சாதி, மதம் கடந்த காதல்களையும் திருமணங்களையும் ஊக்குவிப்பதாவும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போருக்கான தொடக்கப்புள்ளியாகவும் அமைந்துள்ளது. மேலும், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக மக்களிடையே எழுந்துவரும் பண்பாட்டு எழுச்சிக்கு முகங்கொடுத்திருப்பதன் மூலம் இம்மணவிழா நாளானது சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி நாளாக அமைந்துள்ளது.
***
சாதி மறுப்பு மணவிழா – மக்களின் பேராதரவு
தோழர்கள் ராதிகா – ரவியின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவின் சிறப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது மணவிழாவின் அழைப்பிதழாகும். சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கண்ணகி – முருகேசன், இளவரசன், சங்கர், கவின் உள்ளிட்ட தியாகிகள் மற்றும் சமத்துவப் போராளிகளின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அழைப்பிதழில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்த்த பலர் கண்ணீர் வடித்தனர். தாமாக முன்வந்து இம்மணவிழாவில் பங்கேற்றனர். கவினின் புகைப்படத்தைக் கண்டு நெகிழ்ந்த பெண்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வுடன் மணவிழாவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மணவிழா அழைப்பிதழ் பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. நேரடியாகவும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் ஜனநாயக சக்திகளின் பிரச்சாரத்தாலும் அழைப்பிதழ் பத்தாயிரக்கணக்கான மக்களை சென்று சேர்ந்துள்ளது.
அழைப்பிதழில் பொறிக்கப்பட்டிருந்த “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கம் மணவிழாவிற்கான தலைப்பு என்பதைக் கடந்து தற்போதைய அரசியல் சூழலுக்கான அரசியல் முழக்கமாக அமைந்துள்ளது. இம்மணவிழாவை மையமாக வைத்து இம்முழக்கத்தின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.), மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேல் அரசியல் இயக்கம் எடுத்துள்ளனர். கம்யூனிச, திராவிட, தலித்திய, பெண்ணிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் இம்முழக்கத்தை உணர்வுப்பூர்வமாக வாசித்து மணவிழாவிற்கு அழைப்பு விடுத்து காணொளி வெளியிட்டனர். தோழர்கள் லஜபதிராய், திருமாவளவன் போன்ற முக்கிய தலைவர்களும் ஜனநாயக சக்திகளும் காணொளி பதிவிட்டனர்.
அதேபோல், மணவிழாவிற்கான துண்டுப்பிரசுரங்களும் ஆயிரக்கணக்கில் – இருமுறை அச்சடிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது. அதனையும் தோழர்கள் வாசித்து காணொளியாக வெளியிட்டனர். மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக வினவு வலைதளத்தில் வெளியிடப்பட்ட உரை வீச்சையும் தோழர்கள் வாசித்து சமூக ஊடகப்பக்கங்களில் வெளியிட்டனர். மணவிழாவில் சிறப்புரையாற்றிய தோழர் தொல். திருமாவளவனின் உரையை மைய ஊடகங்கள் சில முழுமையாக ஒளிபரப்பியதன் மூலம் அக்கருத்துகள் லட்சக்கணக்கான மக்களிடம் சென்றுள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இம்மணவிழாவின் தட்டிகள் வைக்கப்பட்டன. சுவரொட்டி ஒட்டிய தோழர்கள் மீது போலீசு அடக்குமுறையை ஏவியது. இந்த அடக்குமுறைகளை முறியடித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் வீச்சாகக் கொண்டு செல்லப்பட்டது.
மக்கள், ஜனநாயக சக்திகள் நிதி அளித்து ஆதரவளித்ததுடன், தாமாக முன்வந்து மணவிழா பிரச்சாரத்திலும் மணவிழா வேலைகளிலும் பங்கெடுத்துக் கொண்டனர். பலரும் மக்கள் அதிகாரக் கழகத்தில் இணையவும் முன்வந்துள்ளனர்.
![]()
ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











