பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் பக்பாடா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது உம்ரி சப்ஜிபூர். இப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரான முகமது அரமானும் இந்து பெண் காஜல் சைனியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜனவரி 18-ஆம் தேதியன்று அர்மான் காஜலை சந்திப்பதற்கு அவருடைய வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் இருவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த காஜலின் சகோதரர்கள் அர்மானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மதவெறி தலைக்கேறி அர்மான் மற்றும் அவர்களது சகோதரி இருவரையும் மண்வெட்டியைக் கொண்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். படுகொலையை மறைப்பதற்காக இருவரின் உடலையும் இருசக்கர வாகனத்தில் தூக்கிக் கொண்டு போய் நீம் கரோலி பாபா ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ககன் ஆற்றின் அருகே புதைத்துள்ளனர்.
ஆனால் வெளியே சென்ற தன்னுடைய மகன் வீட்டிற்கு வராததைக் கண்டு பதறிய அர்மானின் தந்தை ஹனிஃப், மகனைக் காணவில்லை என்று ஜனவரி 21 அன்று மூத்த போலீசு கண்காணிப்பாளர் சத்பால் ஆன்டிலையிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அழித்துள்ளார். அதன் பிறகே வழக்கை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் போலீசார் காஜலின் சகோதரர்களிடம் விசாரணை நடத்தியதில் தங்கள் சகோதரி இஸ்லாமிய ஆணை காதலிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாததால் இருவரையும் படுகொலை செய்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் மூலம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இருவரின் உடலையும் 21 ஆம் தேதியன்று இரவு தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மறுநாள் இருவரின் உடலும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் மதவெறியன்கள் இருவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 103(1) மற்றும் 238 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராஜாராம் என்பவனின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர்.
மக்தூப்பிடம் பேசிய முகமது ஹனிஃப், “ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை முதல் என் மகனைக் காணவில்லை; ஜனவரி 21 அன்று நாங்கள் புகார் அளித்தோம். சில கிராமவாசிகள் என் மகனையும், ஒரு பெண்ணையும் இவர்கள் கொன்றுவிட்டதாக எங்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் நாங்கள் அவர்களுக்கு எதிராகப் பெயரிடப்பட்ட புகாரைப் பதிவு செய்யச் சென்றோம்.
“என் மகனின் கொலையில் தொடர்புடைய அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்; இரண்டு பேர் இரண்டு பேரைக் கொல்ல முடியாது. ஆறு பேர் அவர்களைக் கொன்றுள்ளனர். எனக்கு நீதி மட்டுமே வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து இயல்பாக ஏற்படும் காதல் என்ற உணர்வை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மக்களிடையே பார்ப்பனிய – இந்து மதவெறி, பிற்போக்கு கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு எதிரான சாதி, மதம் கடந்து காதலிக்கவும், மணம் முடிப்பதற்கும் ஜனநாயக உரிமை வழங்குகின்ற மாற்றுப் பண்பாடு – கலாச்சாரத்தைக் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலமே காதலுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற ஆணவப்படுகொலைகளைத் தடுக்க முடியும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











