உ.பி: தொழுகை நடத்துவது சட்டவிரோதம்; கலவரங்கள் நடத்த சங்கிகளுக்கு சுதந்திரம்!

கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசு சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு 12 இஸ்லாமியர்களைக் கைது செய்துள்ளது.

0

பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ளது முகமதுகஞ்ச் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்து 12 இஸ்லாமிய ஆண்கள் ஜனவரி 16 ஆம் தேதியன்று கட்டுமானத்திலிருந்த வீடொன்றில் தொழுகை நடத்தியுள்ளனர். இதனை சங்கி ஒருவன் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளான். தொழுகை நடத்திய வீட்டை அனுமதியின்றி மதரசாவாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக சங்கி கும்பல் போலீசில் பொய் புகார் அளித்துள்ளது.

கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசார் சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு கலவரம், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை முன்கூட்டியே கைது செய்வதற்கு பயன்படுத்தப்படும் பி.என்.எஸ். பிரிவு 170-இன் கீழ் சட்டவிரோதமாக 12 இஸ்லாமிய ஆண்களைக் கைது செய்துள்ளது. கடும் எதிர்ப்புகளுக்குப் பின்னர் மறுநாள் அபராதத்துடன் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

மேலும் பிரார்த்தனையில் ஈடுபட்டதை ‘சட்டவிரோதம்’ என்று கூறிய போலீசு சமூக அமைதியின்மையைத் தடுக்க ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று சட்டவிரோத கைதை சட்டத்தின்படி செய்தது போன்று நியாயப்படுத்தியுள்ளது. ஆனால் இதே போலீசு தான் கலவர நோக்கோடு சங்கிகள் நடத்தும் மத ஊர்வலங்களுக்கும் மத நிகழ்ச்சிகளுக்கும் முன்னெச்சரிக்கையின்றி அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ஒருவர் தன்னுடைய மதத்தைப் பரப்புவதற்கும், பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் அரசியலமைப்பின் 25-வது பிரிவு அனுமதி அளிக்கிறது. ஆனால் அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமிய ஆண்கள் கைது செய்துள்ளது. இதை வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.


படிக்க: ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!


இதுகுறித்து வழக்கறிஞர் விருந்தா குவேரா கூறுகையில் “இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. சட்ட அமலாக்க நிறுவனங்களால் மீண்டும் மீண்டும் நடைபெறும் துஷ்பிரயோகங்களும், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான நிறுவன சார்பின் ஒரு வடிவத்தைக் காட்டுகிறது. இத்தகைய சட்ட துஷ்பிரயோகங்கள் நமது மதச்சார்பற்ற கட்டமைப்பையே காயப்படுத்துகின்றன. அடிப்படை உரிமைகளை அரசியலமைப்புக்கு விரோதமாக ஒடுக்குவது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்கக்கூடும். ஆனால், போலீசு அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்வது நீதிமன்றங்களின் கடமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் ராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகை நாட்களில் இந்து மதவெறி கும்பல் இஸ்லாமியர்களின் சொத்துகளைச் சூறையாடி வருகின்றது. மாட்டிறைச்சி கடத்தல், பசு கடத்தல் போன்ற பொய்க் குற்றச்சாட்டில் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்திப் படுகொலை செய்து வருகிறது.

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது ‘சட்டவிரோதம்’; சங்கிகள் கலவரம் நடத்துவதற்கு முழு சுதந்திரம். இதுதான் இந்துராஷ்டிர நீதி.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க