மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் – பாகம் 4

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அழகர் கோவில், பாண்டி கோவிலிலும் ஆடு, கோழி பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை கிளப்பி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்ற கொக்கரிப்புடன் சங்கி கும்பல் மதுரையில் பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024 டிசம்பரில் திருப்பரங்குன்றத்தில் பிரச்சினையை கிளப்பிய சங்கி கும்பல், ஆடு, கோழி பலியிடுவதற்குத் தடை விதித்தது தொடங்கி தற்போது நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது வரை அதன் கெடுநோக்கத்தை புரிந்துகொள்ள முடியும்.

இக்கும்பலின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய எமது அமைப்புகள் போராடி வருவதை தாங்கள் அறிவீர்கள். எமது போராட்ட அனுபவங்கள், நடவடிக்கைகளை தொகுத்து “புதிய ஜனநாயகம்” இதழில் இதுவரை மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளோம். அந்தவகையில், 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை மேற்கொண்ட நடவடிக்கைகளை இங்கு பதிவு செய்கிறோம்.

1. திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பாக இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பைத் தொடர்ந்து நீதிபதி விஜயகுமார் அமர்விற்கு வழக்கு சென்றது. இவ்வழக்கில் ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் அவர்களும் மனுதாரராக இணைந்து சட்டப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி, ஆடு, கோழி வெட்டக் கூடாது என்ற நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பை அம்பலப்படுத்தி தோழர் இராமலிங்கம் காணொளி வெளியிட்டார்.

இதனையொட்டி, புதிய ஜனநாயகம் நவம்பர் 2025 இதழில், “இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’ 2.0” என்கிற தலைப்பில் கட்டுரை கொண்டுவரப்பட்டது.

2. நீதிபதி விஜயகுமாரின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் 27-ஆம் தேதி மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

3. இதனைத் தொடர்ந்து, சங்க பரிவாரக் கும்பல், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை தர்கா அருகே உள்ள தூணில் ஏற்ற வேண்டும் என வெறுப்புப் பிரச்சாரத்தை தொடங்கியது. மேலும், தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள் என்ற பொய் பிரச்சாரத்திலும் ஈடுபட்டது. இப்பொய் பிரச்சாரத்தை எல்.முருகன் போன்ற பா.ஜ.க-வின் அமைச்சர்கள் முதல் ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் பரப்பியது.

நவம்பர் 30 அன்று மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உள்ளதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார். மதக்கலவரத்தை தூண்டும் இந்நடவடிக்கையை தடுத்துநிறுத்தக் கோரியும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக் கோரியும் நவம்பர் 14 அன்று மதுரை மாநகர போலீசு ஆணையரிடம் ம.க.இ.க. சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில் மக்கள் அதிகாரக் கழகம், திராவிடர் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் பாதை பேரியக்கம் மற்றும் ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

4. இதற்கிடையில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளையொட்டி மக்களிடத்தில் கருத்து கேட்டு ம.க.இ.க. சார்பாக காணொளி வெளியிடப்பட்டது. குறிப்பாக, திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படாத காரணத்தால் மிகவும் ஆபத்தான முறையில் மக்கள் தண்டவாளத்தை கடக்கும் அவலம் குறித்து காணொளி பதிவு செய்யப்பட்டது. இங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் என நீண்டகால கோரிவரும் மக்கள், அதற்காக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், விவசாய நிலங்கள் சேட்டு, மார்வாடிகளால் ஆக்கிரமிக்கப்படுவது; விவசாயத்திற்கான நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமிப்பது; மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சாலைகளில் கழிவுநீர் ஓடுவது போன்ற பிரச்சினைகளை பகுதி மக்கள் தோழர்களிடம் தெரிவித்தனர்.

இந்நடவடிக்கையின் மூலம் இந்து முன்னணி கும்பலுக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்பதில் அக்கறையில்லை, கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்பது மக்களிடையே அம்பலப்படுத்தப்பட்டது.

5. இராம ரவிக்குமார் என்னும் சங்கி தொடுத்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி, “கோவிலின் சொத்துரிமையை நிலைநாட்டுவதற்காக மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று பாசிச கும்பலின் கெடுநோக்கத்தை ஈடேற்றும் வகையில் தீர்ப்பு வழங்கினார். இதுவரை வெறுமனே பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சங்கி கும்பலுக்கு ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு ஓர் ஆயுதமாக அமைந்தது.

இதனைக் கண்டித்து ம.க.இ.க., ம.அ.க. தோழர்கள் காணொளி பதிவிட்டனர். மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்களின் நேரலை பதிவு பத்தாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. ம.அ.க. சார்பாக பத்திரிகை செய்தியும் வெளியிடப்பட்டது.

6. இத்தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு, தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழில் மட்டுமே அர்ச்சனை நடத்து, அறநிலையத்துறை முடிவுகளில் மதவெறி அரசியல் தலையீட்டை தடை செய்” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் 31 பேர் கலந்துகொண்டு கைதாகினர். அவர்களில் 14 பேர் ம.க.இ.க., ம.அ.க. தோழர்களாவர்.

7. இதனைத்தொடர்ந்து மறுநாளே, நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் மதுரை ஆணையர், மாவட்ட ஆட்சியரை அழைத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி டிசம்பர் 5-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் ஜி.ஆர்.சுவாமிநாதன். ஆனால், உத்தரவை அமல்படுத்த போலீசு மறுத்துவிட்டது. சங்கி கும்பலின் இந்த கலவர முயற்சிக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.

புதிய ஜனநாயகம் டிசம்பர் மாத இதழில் “திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்” என தலையங்கக் கட்டுரை வெளியானது.

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் தோழர் குருசாமி தலைமையில் “மாநில உரிமையைப் பறித்து மதக்கலவரத்தைத் தூண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே பதவி விலகு” என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பெரும்பான்மையாக ம.க.இ.க., ம.அ.க. தோழர்கள் கலந்துகொண்டு கைதாகினர். இக்காணொளிகள் இலட்சக்கணக்கில் பார்வைகளைப் பெற்றது.

இப்பிரச்சினை தொடர்பாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஒரு நேர்காணல், மாநிலச் செய்தித் தொடர்பாளர் தோழர் மருது மூன்று நேர்காணல்கள், மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா ஒரு நேர்காணல் வெளியிட்டனர். இவையெல்லாம் ஆயிரக்கணக்கில் பார்வைகள் பெற்றது.

8. டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மாலை அணிவிக்கும் நிகழ்வில் ம.க.இ.க., ம.அ.க. தோழர்கள் பங்கெடுத்து மக்களைப் பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பினர்.

9. டிசம்பர் 9-ஆம் தேதி, மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக, திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் இருப்பது தீபத்தூண் அல்ல, நில அளவைக்கல் என்று ஆதாரத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

10. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மதநல்லிணக்க பேரணியில் ஜனநாயக சக்திகள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் ம.க.இ.க., ம.அ.க., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70 தோழர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு முழுமையாக வினவு தளத்தில் நேரலை செய்யப்பட்டது.

11. மேலும், “ரிக்ளைம் டெம்பிள்ஸ்” (reclaimtemples.com) என்கிற இணையதளத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 175 வழிபாட்டுத் தலங்களை (மசூதிகள், தர்காக்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள் உட்பட) இடிக்க சங்கி கும்பல் மேற்கொள்ளும் சதித்திட்டம் குறித்து செய்தி வெளியானது. இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டத்தில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

12. திருப்பரங்குன்றம் கோவிலில் வழிபடச் செல்வதாகக் கூறிக்கொண்டு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், அங்குள்ள இஸ்லாமிய மக்களின் தர்கா வழிபாட்டுமுறையை குறிப்பிட்டு, “பிணங்களை புதைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர்” என்று இழிவுப்படுத்தினார். சங்க பரிவாரக் கும்பலின் பின்னணிக் கொண்ட அர்ஜூன் சம்பத்தை போலீசு அனுமதித்தது ஏன்?, கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியும் இதுவரை வழக்கு பதிவு செய்து கைது செய்யாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியும், திருப்பாலையில் உள்ள நல்லமணி அரசு உதவிபெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சாகா மற்றும் ஆயுதப்பயிற்சி நடத்தப்படுவதை எதிர்த்தும் மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இவ்விரு பிரச்சினைகளையொட்டி ம.க.இ.க., ம.அ.க. தோழர்கள் காணொளி வெளியிட்டனர்.

13. சமீபத்தில், தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்யும் விதமாக இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனைக் கண்டித்து ம.க.இ.க., ம.அ.க. தோழர்கள் காணொளி வெளியிட்டனர். மேலும், சந்தனக் கூடு நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்ட கலவரக் கும்பலின் சூழ்ச்சியை முறியடிக்கும் விதமாக, சந்தனக் கூடு நிகழ்வில் ம.க.இ.க., ம.அ.க. தோழர்கள் கலந்துகொண்டு காணொளி பதிவிட்டனர்.

மேலும், இந்து முன்னணி கும்பலின் நடவடிக்கைகளை உடனுக்குடன் முறியடிக்கும் வகையிலும், மதுரையின் மத நல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் பல்வேறு இணைய போஸ்டர்கள், காணொளிகளை தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளோம். இவை ஆயிரக்கணக்கான மக்களிடையே சென்றடைந்து பெரும் ஆதரவைப் பெற்றது.

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அழகர் கோவில், பாண்டி கோவிலிலும் ஆடு, கோழி பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை கிளப்பி வருகிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழ்நாட்டு மக்களின் ஆடு, கோழி பலியிடும் உரிமையை மறுத்து பார்ப்பனமயமாக்கும் நோக்கோடு தொடர்ந்து செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி கும்பலை விரட்டியடிப்போம்!

அயோத்தியல்ல, இது தமிழ்நாடு என மீண்டும் முழங்குவோம்!

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை.
மக்கள் அதிகாரக் கழகம் – மதுரை கிழக்கு, மேற்கு மாவட்டங்கள்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க