ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!

பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.

0
அசுத்தமான நீரால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு பாதிப்பைத் தொடர்ந்து ஜனவரி 2 அன்று சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியைக் காட்டுகிறார், பகிரத்புரா பகுதி குடியிருப்புவாசி ஒருவர்

த்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தூர் மாநகராட்சி நிர்வாகம் (Indore Municipal Corporation) நர்மதை ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீரை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. அதே சமயம், அதிக மக்கள் தொகை கொண்ட பகிரத்புரா (Bhagirathpura) பகுதியில் சோதனைச் சாவடி அருகே குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதிக்கு மேலே மாநகராட்சி நிர்வாகம் புதிய கழிவறை ஒன்றைக் கட்டியுள்ளது. அதற்கு செப்டிக் டேங்க் கட்டாமல் அலட்சியமான முறையில் குழியைத் தோண்டியுள்ளது.

இந்நிலையில் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, மேலே உள்ள குழியிலிருந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்துள்ளது. இந்த குடிநீரைக் குடித்த பகிரத்புரா பகுதி மக்களுக்கு டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்த உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25 ஆம் தேதியன்று விநியோகிக்கப்பட்ட நீரைக் குடித்த மக்கள் நீரில் துர்நாற்றம் வீசுவதாக மேயரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விரைந்து செயல்படாத, மாநகராட்சியின் அலட்சியத்தால் மலம் கலந்த தண்ணீரைக் குடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். ஆறு மாத குழந்தை உள்பட 16 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 28 – 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் இச்செய்தி வெளியான போது, பலியானவர்களின் எண்ணிக்கையை முதல்வர் மோகன் யாதவ் குறைத்து அறிவித்தார். பா.ஜ.க. அரசு தன்னுடைய தோல்விகளை மறைப்பதற்காக உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்து வருகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக, ஜனவரி 27, 2026 அன்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பகாரியா “இந்த அறிக்கை வெறுமனே தெளிவற்றதாக மட்டுமல்லாமல், மர்மம் சூழ்ந்ததாகவும், நடந்த அனைத்தையும் மூடிமறைக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகவும் தெரிகிறது. இன்று நடந்த விசாரணையில், மொத்தம் உள்ள 23 இறப்புகளில் 16 இறப்புகள் அசுத்தமான தண்ணீரால் பரவிய நோயால் ஏற்பட்டவை என்று அரசு முதலில் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த 16 இறப்புகள் மற்றும் மீதமுள்ள ஏழு இறப்புகள் குறித்தும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. இந்த உயிரிழப்புகள் விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய ஏதோ ஒன்று நடக்கிறது” என்று வாதிட்டார்.

***

பத்து ஆண்டுகள் காத்திருந்து பெற்ற தன்னுடைய ஆறு மாத குழந்தையை இழந்த சுனில் – அவ்யான் இணையர் கூறியவை: அவ்யானுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவருக்குத் தாய்ப்பால் சுரக்கவில்லை. இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி பாக்கெட் பாலில் சிறிது தண்ணீர் கலந்து குழந்தைக்குக் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் மலம் கலந்த நீரைக் குடித்த குழந்தைக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன பெற்றோர்கள் மருத்துவரிடம் தூக்கிச் சென்று மருந்து கொடுத்தும் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதியன்று காலை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்ற போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குழந்தையை இழந்துவிட்டுத் தாங்க முடியாத வேதனையில் இக்குடும்பத்தினர் உள்ளனர். இவர்களைப் போன்று பலர் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையில் உள்ளனர்.

ஆனால் மக்களின் பாதுகாப்பில் அக்கறையில்லாத அரசு உயிர்கள் பலியான பிறகு மாநில சுகாதாரத்துறை மூலம் 2,703 வீடுகளில் உள்ள 12,000-ற்கும் மேற்பட்டோரைப் பரிசோதித்துள்ளது. அதில் 1,100 முதல் 2,456 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, அதில் அதற்கு மேல் கட்டப்பட்டிருந்த கழிவறையிலிருந்து கழிவு நீர் கலந்துதான் இப்பிரச்சினைக்குக் காரணம் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் இக்கொடூரத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்வதற்குப் பதிலாக மாநகராட்சி நிர்வாகமும் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. அரசும் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக மண்டல அதிகாரி ஹாலிகிராம் சிடோல் மற்றும் உதவி இன்ஜினியர் யோகேஷ் ஜோஷி ஆகியோரை மட்டும் இடைநீக்கம் செய்துள்ளது. பொதுச் சுகாதார பொறியியல் துறையின் துணை இன்ஜினியர் சுபம் ஸ்ரீவாஸ்தவா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


படிக்க: ம.பி: குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம்


என்.டி.டி.வி. பத்திரிக்கையாளர் அனுராக் துவாரி “இந்தூர் சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ் விஜய்வர்கியாவிடம் குடிநீரில் மனித கழிவு கலந்ததற்கு இளைய அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏன் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு , “ஓ, அதை விட்டுவிடுங்கள், பயனற்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்” என்று அலட்சியமாகப் பதிலளித்ததுடன் இழிவான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.

தன்னுடைய வார்டில் அநியாயமாக உயிரிழந்தவர்கள் குறித்து எந்தவித கவலையும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பகிரத்புரா பகுதி கவுன்சிலர் ஊஞ்சலில் ஆடுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் பாசிச கும்பல்களின் மனநிலை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல. மாநகராட்சி நிர்வாகமும், மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. அரசும் இணைந்து நடத்தியுள்ள பச்சைப் படுகொலையாகும். எனவே மக்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல் பட்ட நீர்வளத்துறை அமைச்சர் துளசி சிலாவத், சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராஜேந்திர சுக்லா, மற்றும் மாநகராட்சி அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்து, அனைவரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க