கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி – குக்கி இன மக்களிடையே கலவரத் தீயைப் பற்ற வைத்தது காவி கும்பல். இக்கலவரத்தின் நடுவே மே 15-ஆம் தேதியன்று ஏ.டி.எம்-க்கு பணம் எடுக்கச் சென்ற குக்கி இளம்பெண் ஆயுதம் தாங்கிய மெய்தி இனவெறியர்களால் காரில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இக்கொடூரச் சம்பவம் வெளியாகி நாட்டு மக்களின் மனங்களை உலுக்கியது.
பின்னர் அக்கொலைவெறிக் கும்பலிடமிருந்து தப்பித்து ஆட்டோ ஓட்டுநர் மூலம் மீட்கப்பட்டு காங்கோபி நிவாரண முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து அண்டை மாநிலமான நாகாலாந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், அசாம் மாநிலம் குவகாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் கழித்து தனக்கு நடந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றவாளிகள் மீது கொலை முயற்சி, பட்டியலின, பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது போலீசு. பின்னர் இவ்வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
அக்கொடூரத்தில் பெண்ணின் கருப்பை மோசமாகச் சிதைவடைந்தது. இவற்றோடு உடலில் ஏற்பட்ட கொடிய காயங்களும் அவருக்கு மரண வலியை உண்டாக்கின. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணின் உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறினதே தவிர, அக்கொடூரத்தினால் உண்டான அதிர்ச்சி உளவியல் ரீதியாக அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உடல்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதன் விளைவாக ஜனவரி 8-ஆம் தேதியன்று பெண்ணிற்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துக்கொண்ட போதிலும் இருபது வயதேயான அப்பெண் ஜனவரி 10-ஆம் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய மகள் குறித்து நியூயார்க் டைம்ஸிடம் பேசிய பெண்ணின் தாயாரான 48 வயதான லின்க்னி ஹாக்கிப், “என் மகள் கிம் இந்த கொடூரமான சம்பவத்திற்கு முன்பு மிகவும் உற்சாகமான, வெளியே செல்லும் தன்மை கொண்ட பெண்ணாக இருந்தாள். அவள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டாவிட்டாலும், இம்பாலில் எங்கள் உறவினர் ஒருவருடன் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தாள். நிறைய நண்பர்கள் இருந்தனர்; அவர்களுடன் அடிக்கடி வெளியே செல்வாள். எப்போதும் புன்னகைத்தபடி, உயிரோட்டமாக இருப்பாள்.
“ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. உடல் காயங்களால் அவளுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. மிக முக்கியமாக, மன ரீதியில் மிகுந்த அதிர்ச்சியடைந்தாள். ஒரு அறையில் மட்டுமே இருக்கத் தொடங்கினாள். யாருடனும் பேசுவதை நிறுத்தினாள். வெளியே செல்வதை முற்றிலும் நிறுத்தினாள். நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. வாரத்தில் இரண்டு முறை ட்ராமா தெரபி (Trauma Therapy) சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் வந்தனர். ஆனால் அவள் மனரீதியாகக் குணமடையவில்லை. நான் மட்டுமே அவளுடன் பேசிய ஒரே நபர். 15 நிமிடங்கள் கூட வெளியே சென்றாலும் என்னை விட்டு நகரமாட்டாள்.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக அவள் தொடர்ந்து பயத்தில் வாழ்ந்தாள். “இனி வாழ விரும்பவில்லை” என்று என்னிடம் சொன்னாள். “எல்லோருக்கும் நடந்தது தெரியும், அதனால் மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன்” என்று கூறினாள். அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
படிக்க: மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!
குறிப்பாக இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒருவனையும் சி.பி.ஐ. கைது செய்யவில்லை என்பதே கொடூரத்தின் உச்சமாகும். இது குறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினரான கௌஹாவோ, கூறுகையில் “எனக்குத் தெரிந்தவரை, அதிகாரிகள் ஒரே ஒரு முறை மட்டுமே அவரது கருத்தைப் பதிவு செய்ய வந்தனர். நாங்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் இப்படி நடந்துகொண்டனரா என்று எனக்குத் தெரியவில்லை” என்று அதிகாரிகளின் சாதிய மனநிலை குறித்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு உறவினர் “அவளுக்குக் கடுமையான தூக்கமின்மையும் ஆழமான அதிர்ச்சியும் ஏற்பட்டது. அடிக்கடி உரக்கக் கத்துவாள். நாளுக்கு நாள் மிகவும் தனிமையானவளாக மாறினாள். எப்போது ஒரு வெள்ளை நிற போலேரோ காரைப் பார்த்தாலும் உடைந்து அழுது விடுவாள். நினைவாற்றல் இழப்பும் ஏற்பட்டது. ஆனால் நினைவுகள் திரும்பி வந்த சமயங்களில், “நான் என் கடைசிக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது உடல் இன்னும் உயிருடன் இருக்கிறது… ஆனால் என் ஆவி 2023-லேயே கொல்லப்பட்டு விட்டது”” என்று தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் நினைவாக குக்கி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் டிரைபல் யூனிட்டி கமிட்டி (Committee on Tribal Unity – CoTU), குக்கி மகளிர் சங்கம் (Kuki Women’s Union – KWU) உள்ளிட்ட குக்கி அமைப்புகள் பெண்ணின் இறப்பிற்குக் காரணமான ஒன்றிய-மாநில பா.ஜ.க. அரசுகளைக் கண்டித்துள்ளன.
இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 21 அன்று குக்கி இனத்தைச் சேர்ந்த தனது மனைவியைக் காணச் சென்ற மெய்தி இளைஞர் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், பாசிச மோடி அரசு மணிப்பூர் குறித்து தொடர்ந்து கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











