(தோழர்கள் ராதிகா-ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், தோழர்கள், கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம் கருதி சாரமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.)
வரவேற்புரை: தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்,
மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர்.

இப்புரட்சிகர மண விழாவின் அழைப்பிதழ், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
“இப்படி ஓர் அழைப்பிதழை அச்சடிக்க முடியுமா? எங்கள் வாழ்நாளில் இப்படி ஓர் அழைப்பிதழை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று ஜனநாயக சக்திகள் நேரடியாகவும் கைப்பேசியில் அழைத்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டனர்.
முக்கியமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் இத்திருமணத்தின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து இம்முகப்பு அட்டையை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றனர். குறிப்பாக, உரிமைக் களம் என்ற யூ-டியூப் சேனல் வைத்துள்ள மதுரையைச் சேர்ந்த இளம்பெருவழுதி என்ற தோழர் முதன்முதலில் இம்முகப்பு அட்டை குறித்து பேசி தனது சேனலில் பதிவு செய்தார்.
அதேபோல், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த பல தோழர்கள் அழைப்பிதழை பார்த்துவிட்டு அதன் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுவெளியில் வேகமாக கொண்டு சென்றனர்.
குறிப்பாக, தென்மாவட்டங்களில் சாதி ஆதிக்கவெறி தூண்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சாதிய வன்கொடுமையில் மதுரை மாவட்டம்தான் முதலிடத்தில் உள்ளது.
இத்தகைய சூழலில்தான் தென்மாவட்டத்தில் இவ்வாறான சாதி மறுப்பு – புரட்சிகர மணவிழாவை நடத்த வேண்டுமென திட்டமிட்டு நடத்தியுள்ளோம். இதற்கு தென்மாவட்டங்கள் முழுவதும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களிலும் மிகப்பெரும் ஆதரவு கிடைத்தது.
அதேபோல், நாம் அழைப்பிதழ் கொடுக்கும் போது, பொதுமக்கள், உறவினர்கள், பல ஜனநாயக சக்திகளும், “எப்படி செத்தவர்களை அழைப்பிதழில் போட்டுள்ளீர்கள்?” என்று கேட்டனர். ஆனால், செத்தவர்களை அழைப்பிதழில் போடுவது தமிழ்நாட்டு மரபில் இது முதன்முறையல்ல என்று எடுத்துக் கூறினோம், சாதாரண மக்கள் அச்சடிக்கக்கூடிய அழைப்பிதழ்களில் மாரியம்மன், காளியம்மன், ஆயியம்மன், கருப்பு சாமி, அய்யனார் துணை என நாட்டார் தெய்வங்களின் பெயர்களை போடுவது வழக்கமாக உள்ளது என்று சொன்னதும் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டனர்.
மணமக்களை பொறுத்தவரையில், மணமகன் தோழர் ரவி நீண்டகாலமாக புரட்சிகர அமைப்பில் செயல்பட்டு வருபவர். இன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளராக இருக்கிறார். அதேபோல், மணமகள் தோழர் ராதிகாவை பொறுத்தவரை அவரது தாய், தந்தை, தம்பி என குடும்பத்தினர் அனைவரும் அரசியல் பின்னணி கொண்டவர்கள். நமது அமைப்பில் நீண்டகாலமாக செயல்பட்டவர்களும் ஆவர். தோழர் ராதிகாவிற்கு இது மறுமணம் ஆகும், அவருக்கு ஆறு வயது மகன் உள்ளார்.
மேலும், சாதி கடந்து காதலித்தால் வெட்டுவது என்று சாதி ஆதிக்கம் தலைவிரித்தாடும் இச்சூழலில், இது சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவாகவும் நடந்து வருகிறது. தோழர் ரவி அகமுடையார் அல்லது சேர்வார் என்று சொல்லப்படக் கூடிய பிற்படுத்தப்பட்ட சாதியை சார்ந்தவர். தோழர் ராதிகா பள்ளர் எனும் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்.
ஆனால், இந்த சாதி மறுப்பு மணத்தை மக்கள் இயல்பாக ஏற்றுக்கொள்கின்றனர். கள்ளர் எனும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களிடம் மணவிழா அழைப்பிதழை கொடுத்த போது, மணமக்களுக்கு பிடித்துவிட்டால் போதும், வேறு எந்த பிரச்சினையும் கிடையாது என்று மக்கள் இயல்பாக சொன்னார்கள்.
எனவே, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி கும்பல் – சாதி ஆதிக்கவெறி கும்பல்தான் இங்கு பிரச்சினையை கிளப்பி வருகிறது, சாதிய தாக்குதல்களுக்கான அடிப்படை காரணமாக உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
***
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

தமிழ் மொழியும் தமிழ்நாட்டு மக்களும் ஆரம்பக் காலம் தொட்டே பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். தொல்காப்பியர், வள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பெரியார் போன்றோர்கள் பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப்பிடித்து தமிழ்நாட்டு மரபை காத்து வந்தவர்கள்.
அதேபோல், கீழடி அகழாய்வின் தொன்மங்கள் தமிழர் பண்பாட்டில் கடவுள், மதம் தொடர்பான கோட்பாடுகளை ஆதாரப்பூர்வமாக மறுக்கின்றன. எனவே, ஒருவர் தன்னை தமிழர் என்று உயர்வாகக் கருதிக்கொள்ள வேண்டுமென்றால் அவர் சாதி – மதங்களை கடந்தவராக இருக்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழர்களின் பண்பாட்டு மரபு.
இத்தகைய உயர்ந்த மரபையும் பண்பாட்டையும் கொண்ட நாம், சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா போன்ற பண்பாட்டு நிகழ்வுகளை முன்னுதாரணமாக நடத்திக்காட்டுவது அவசியமாக உள்ளது.
1980-இல் மக்கள் திரள் புரட்சிகர அமைப்பான மக்கள் கலை – இலக்கியக் கழகம் தொடங்கப்பட்டு பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திய சீரழிவு பண்பாட்டிற்கு எதிராகவும் போராடி வந்தது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. என்கின்ற இந்து மதவெறி பாசிச அமைப்புகள் அரசியல் தளத்தில் மேலெழுந்து வந்த காலகட்டம் அதுவாகும். அக்காலத்தில் அதனை சரியாக அடையாளப்படுத்தி கலை – இலக்கிய தளத்தில் சரியாக வினையாற்றியது ம.க.இ.க-தான்.
குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் “நாமெல்லாம் இந்துக்கள்” என்று கூறி பாபர் மசூதி இடிப்பு, ரத யாத்திரை போன்ற பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அணிதிரட்டியது. அதற்கெதிராக, “ஆயிரம் காலம் அடிமை என்றாயே, அரிசனனு பேரு வைக்க யாரடா நாயே” என்ற புரட்சிகரப் பாடல் தமிழ்நாட்டில், குறிப்பாக தலித் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது.
அதன்பிறகு ம.க.இ.க., விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் கருவறைக்குள் நுழைந்து அம்பேத்கர், பெரியார் படங்களை வைத்து போராடினர். “இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின்னே செல்லாதே!” போன்ற கூரிய முழக்கங்கள், தலித்திய, திராவிட, தமிழ்த் தேசிய ஜனநாயக சக்திகளுக்கு பெரும் நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டுவதாக அமைந்தது.
அதன் தொடர்ச்சியாக, 1997 காலகட்டங்களில் தென்மாவட்டங்களில் மேலவளவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாதிவெறியாட்டங்கள் தீவிரமடைந்தன. அப்போது ம.க.இ.க. வெளியிட்ட “வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவளவுல, வெந்து மடிந்தோமடா வெண்மணியில” என்ற பாடல் தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை உணர்த்தியது.
மேலும், ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பாக, “சாதித் தீண்டாமை ஒழிப்பு இயக்கம்” முன்னெடுக்கப்பட்டது. இவ்வியக்கத்தின்போது தேனியின் பண்ணைபுரத்தில் தோழர்கள் போராடி இரட்டைக்குவளை முறையை நீக்கினர்.
இதன் அங்கமாக, சாதி மறுப்புப் புரட்சிகர மணவிழா விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. இதில் ஏழு இணையர்கள் புரட்சிகர மணமுடித்தனர். இது தமிழ்நாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக தியாகராயர் உற்சவம் நடக்கும் போது தஞ்சையிலே தமிழ் மக்கள் இசை விழா முன்னெடுக்கப்பட்டது. “களவாடப்பட்ட இசையே கர்நாடக இசை” என்று கூறி, பறை இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழிசை மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பலம் மேடையில் தமிழ் பாடும் உரிமைக்காக நீண்ட நெடியப் போராட்டம் நடத்தபட்டது. இவ்வாறு பண்பாட்டு தளத்தில் ம.க.இ.க-வின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதை இம்மணவிழாவில் நினைவுகூற வேண்டியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் இந்தியாவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. இதற்கெதிராக 2022-இல் “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்” என்ற மாநாட்டை நடத்தினோம். 2023-இல் தமிழ்நாட்டு பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடித்து “சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” என்ற மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை மதுரையில் நடத்தினோம்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி கும்பலின் “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்ற கலவர சதியை முறியடிக்கும் வகையில், “முருகனை மீட்போம் கருப்பனைக் காப்போம்” “திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வருகிறோம்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான சாதிவெறியாட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் அதற்கெதிராக பு.மா.இ.மு. “அனைவரையும் நேசிப்போம், சாதியை மறுப்போம்” (Love All No Caste) என்ற இயக்கத்தை முன்னெடுத்து மாணவர்களிடையே பிரச்சாரம் அரங்கக்கூட்டத்தை நடத்தியது. எமது தோழமை இதழான புதிய ஜனநாயகம், “தலித் மக்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற சிறுவெளியீட்டை 2023 நவம்பரில் கொண்டுவந்தது. இது, பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.
அதேபோல், இமானுவேல் சேகரனை குறிப்பிட்ட சாதியின் தலைவனாக சுருக்க முயற்சிக்கும் வேளையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் எமது அமைப்பின் சார்பாக, “சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்” என்ற தலைப்பில் இயக்கம் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பிரசுரங்கள், அரங்கக் கூட்டம் என இந்த இயக்கம் வீச்சாக மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு தமிழர்கள், தமிழ் பண்பாடு, மரபுகளின் ஜனநாயகத் தன்மைகளை உயர்த்திப்பிடிப்பதிலும், காவி கும்பலுக்கு எதிராகவும் ம.க.இ.க., மக்கள் அதிகாரக் கழகம் அதன் அரசியல் வரலாற்றில் பண்பாட்டு தளத்தில் முத்திரையை பதித்திருக்கிறது.
இன்று தமிழ்நாடு முழுவதும் சாதிய ஆணவப் படுகொலை தீவிரமடைந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் அதன் பின்னணியில் உள்ளன. இத்தகைய சூழலில்தான் ”சாதி, மதம் கடந்து காதலிக்க, மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒரு மாற்று பண்பாட்டிற்கான போர் முழக்கமாக இம்மணவிழா நடத்தப்படுகிறது.
***
தோழர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்,
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
சாதி மறுப்பது, மறுமணம் ஏற்பது என்கிற இரண்டும் நூறாண்டுகளுக்கு முன்பு எண்ணிக்கூட பார்க்க முடியாதது. ஆனால், இன்றைக்கு பலரும் வாழ்த்தக்கூடிய வகையில் பொதுவெளியில் ஊரறிய ஓர் அரங்கில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது.
சமூகத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டிருக்கிறது என்றாலும், இந்த திருமணம் தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டுவதை போலீசுதுறையினர் தடுத்தது போன்ற நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கிறது.
முதலில் ரவி என்கிற செல்வகணேஷ் இத்திருமணத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவரது அரசியல் ஈடுபாடும் அதனால் அவருக்கு கிட்டியிருக்கிற முதிர்ச்சியும்தான் காரணம். 7-8 ஆண்டுகளாக மக்கள் அதிகாரக் கழகத்தில் அவர் பயணித்ததன் விளைவாக இந்த புரிதலும், துணிச்சலும், பக்குவமும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
ஒருவேளை ரவி ஒரு சாதி, மத அமைப்பிலோ பா.ஜ.க-விலோ இருந்திருந்தால் நிச்சயம் இதற்கு உடன்பட்டிருக்க மாட்டார். வலதுசாரி அரசியல் அவரை இதற்கு அனுமதித்திருக்காது, இடதுசாரி அரசியல் அவரை இதற்கு பக்குவப்படுத்தி இருக்கிறது.
மேலும், வெற்றிவேல்செழியன் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் அனைவரும் உற்ற துணையாக இருந்து, இதை நாம் ஒரு வெளிப்படை நிகழ்வாக நடத்தி, ஒரு கொண்டாட்டமாக மேற்கொள்வோம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
அதற்கு காரணம், ஒரு ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த பெண்ணை நாங்கள் திருமணம் செய்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளும் முயற்சியல்ல. இதுவெல்லாம் இங்கு நடைபெறாது என்கிற இறுக்கமானதொரு சமூக சூழல் இருக்கின்ற நிலையில், அதனை தகர்க்கிறோம், அதனை மீறுகிறோம் என்பதை காட்டிக்கொள்வதற்கான முயற்சி. அடங்க மறு என்பதற்கு இதுதான் பொருள். உன்னை அடக்கி வைக்கும் இந்த சமூக மரபுகளை – சாதி மரபுகளை – சனாதன மரபுகளை மீறுவது என்பது அடங்க மறுத்தலின் ஒரு பகுதி.
இந்த மரபு மீறல் என்பது புரட்சிக்கான கூறுகளின் ஒரு புள்ளி. இத்தகைய மரபுகளை உடைப்பதன் மூலம் பண்பாட்டு தளத்தில் நாம் ஏற்படுத்தும் தாக்கம், புரட்சிக்கு மிக முக்கியமான புள்ளியாக உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆனால், அவ்வப்போது இம்மரபு மீறப்படுகிறது. அது இயல்பாக நிகழ்கிறது. திட்டமிட்ட கொள்கை பரப்புதலின் அடிப்படையில், அரசியல் முடிவுகளின் அடிப்படையில் நிகழ்ந்ததாக நாம் சொல்ல முடியாது. காரணம் அது இயற்கையாக மலர்கிற காதல். காதல் என்பது இந்த செயற்கையான திட்டமிட்டு வரையறுக்கப்பட்ட பண்பாட்டு மரபுகளை மீறுகிற வலிமை கொண்டது. ஆனால், அவ்வாறு மீறுகிறவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆனாலும், எத்தனை தண்டனைகளை கொடுத்தாலும் காதல் அவ்வப்போது வரம்புகளை மீறியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உண்டு.
காத்தவராயன் – ஆரியமாலா காதலை தெருக்கூத்துகளாக, திரைப்படங்களாக நாம் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். காத்தவராயன் ஒரு தீண்டப்படாத சமூகத்தை சார்ந்தவர். ஆரியமாலா ஒரு பார்ப்பன சமூகத்தை சார்ந்த, அரச குல பெண். ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாமல், காத்தவராயன் கழுவேற்றி கொல்லப்படுகிறார். அதுதான் இன்று நாம் சொல்லக்கூடிய ஆணவப்படுகொலை. இருப்பினும் மக்கள் அவரை தெய்வமாக வணங்கும் மரபு இங்குள்ளது.
இதுபோல் ஊர் தெய்வங்கள் பலவற்றில் அது அம்மன் வழிபாடாக இருந்தாலும், ஆண் தெய்வ வழிபாடாக இருந்தாலும் இவ்வாறு காதலர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களே தெய்வங்களாக ஏற்கபெற்று, வழிபாடு செய்கிற ஒரு கலாச்சார முறை நம்முடையை மரபிலே இருக்கிறது.
அதேபோல், நாயக்கர் குடும்பத்தைச் சார்ந்த பொம்மியையும் கள்ளர் குடும்பத்தை சார்ந்த வெள்ளையம்மாளையும் அருந்ததியர் குடியில் பிறந்த மதுரைவீரன் காதலித்ததால், மாறு கை மாறு கால் வாங்கப்பட்டார். ஆனால், கொள்ளையர், வழிபறி கூட்டத்திலிருந்து மதுரை மக்களை காப்பாற்றிய மாவீரன் என்கிற அடிப்படையில் எல்லா சமூகத்தை சார்ந்தவர்களும் மதுரை வீரனை வழிபடும் மரபு இங்கு வளர்ந்ததாக நாம் அறிகிறோம்.
அதேபோல், இஸ்லாமியர்களுக்கு எதிராக லவ் ஜிகாத், மதமாற்றம், பசு புனிதம் என மூன்று முக்கிய உத்திகளை சங்கி கும்பல் பயன்படுத்துகிறது. இவற்றின் மூலம் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை விதைத்து இந்து சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவை திரட்டுகிறது. இதேபோன்று தலித் மக்கள் மீது ‘நாடக காதல்’ எனும் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.
திருப்பரங்குன்றம் பிரச்சினையும் திட்டமிடப்பட்ட ஒன்றுதான். தமிழ்நாட்டில் மட்டும் 175 மசூதிகளையும் தர்காகளையும் கலவரம் செய்ய தேர்ந்தெடுத்துள்ளார்கள். தேர்தலுக்குள்ளாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. தமிழ்நாட்டிலே சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தை தூண்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனை வைத்து இந்து உணர்வை வளர்ப்பது அவர்களின் திட்டம்.
மதவெறி பலனளிக்காதபோது சாதிப் பெருமை பேச வைக்கிறார்கள். சாதிப் பெருமை பேச பேச மத உணர்வும் மேலோங்கும். “நீ ஆண்ட சாதி. நீ இழிவானவன் இல்லை. நீ பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும்…” என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் சாதிப் பெருமை ஊட்டுகின்றனர்.
விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி, அனுமன் சேனா, இந்து சேனா, பஜ்ரங் தளம், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட பல்வேறு சங்கப்பரிவார அமைப்புகளுக்கு இந்த வேலைத் திட்டங்கள் பிரித்து தரப்படிருக்கின்றன. அதில் ஒன்றாகத்தான் இந்து மக்கள் கட்சி எனும் அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் மதமாற்றத்தை தடுப்பது, பசுவை பாதுகாப்பது, நாடகக் காதல் நடக்கிறதென்று கூறி சாதி மறுப்பு திருமணங்களை தடுப்பதுதான் வேலைத்திட்டம்.
இவற்றை சரியாக புரிந்துகொண்டு களத்திலே இன்று நம்மோடு கொள்கை அடிப்படையில் கைகோர்த்து நிற்பவர்கள்கள்தான் இடதுசாரி சக்திகள், புரட்சிகர சக்திகள். இதில் தேர்தலில் பங்கேற்கின்ற, புறக்கணிக்கின்ற இருவருமே உண்டு. வலதுசாரிகளை எதிர்த்து அவர்களின் மேலாதிக்கத்தை தகர்ப்பது என்பதிலே நாம் ஒரு புள்ளியில் இணைந்து நிற்கிறோம். அப்படிபட்ட மேடைதான் இன்றைக்கு ரவியும் ராதிகாவும் திருமணம் செய்துகொள்கிற இந்த மேடை, இந்த களம்.
தோழர்களே, நாம் மிகவும் ஆபத்தான ஒரு சூழலில் இருக்கிறோம். வலதுசாரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருவார்கள். அவ்வாறு சிலர் இன்று கடப்பாறைகளை தூக்கிக்கொண்டு களத்திலே வருகிறார்கள். பெரியாரை இழிவுப்படுத்துகிறார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல்.
எண்ணிப் பாருங்கள். வழக்கமாக திருப்பரங்குன்றத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருக்கும் தூணில்தான் தீபமேற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அப்படித்தான் ஏற்றப்பட்டது. 1926-லேயே நீதிபதி ராம் ஐயர் திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்ப்பளித்துவிட்டார். பள்ளிவாசல், தர்கா, நெல்லித்தோப்பு ஆகியவை மட்டும் இஸ்லாமியர்கள் பயன்பாட்டுக்கு உரியது; காசி விஸ்வநாதர் கோவில், பிள்ளையர் கோவில், முருகன் கோவில் இந்துக்கள் பயன்பாட்டிற்குரியது; எஞ்சிய பகுதிகள் அரசுக்கு, அரசின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகள். இதில் என்ன சந்தேகம், கேள்வியெழுப்பும் வகையில் என்ன சிக்கல் இருக்கிறது?
ஆனால், நீதித்துறையில் இருப்பவர்களோ வலிந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்கக்கூடிய வகையில் தீர்ப்பை எழுதுகிறார்கள். இது எவ்வளவு ஆபத்தானது.
வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக நாம் கணக்கு போட்டால், நாட்டையும் மக்களையும் யார் காப்பற்றுவது? நம் ஜனநாயக மரபுகளை யார் காப்பாற்றுவது? புரட்சிகர பண்பாட்டு கூறுகளை எப்படி வளர்த்தெடுத்து செழுமைப்படுத்த முடியும்? ஆணவப் படுகொலைகளை எப்படி தடுக்க முடியும்?
சாதி ஒழிப்பு அரசியல் என்பது தலித்துகளிடமிருந்து அல்ல, சாதியவாதிகள் அல்லது சாதி பெருமை உள்ளவர்கள் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளிலிருந்து புறப்பட வேண்டும்.
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் அரசியலை ஒரு சாரார் பேசுவதாக இல்லாமல், பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு நாம் இவர்கள் கருத்தியலை சொல்லி கொடுக்க வேண்டும் ஒரு புதிய இடதுசாரி தலைமுறையை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
நாம் இத்தகைய திருமணங்களை நடத்துவதுடன் நிறுத்திக் கொள்ளகூடாது. ஏனென்றால், ஆக்டோபஸ்ஸின் கால்களை போல சங்கப் பரிவாரங்கள் இன்று முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்குவங்கம் இம்மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் அனைத்திலும் அவர்களின் வேர்கள் ஆழ ஊன்றியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் வேர்பிடிக்க அ.தி.மு.க. போன்ற கட்சிகள் துணைநிற்கின்றன.
நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலிலும் தேர்தலுக்கு வெளியிலும் வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும். இடதுசாரி அரசியல் வெற்றிபெற வேண்டும். தமிழ் மண்ணிலே வலதுசாரி அரசியலுக்கு இடமில்லை என்று அவர்கள் பின்னங்கால்கள் பிடரியிலடிக்க புறமுதுகிட்டு வட இந்தியாவை நோக்கி ஓட வேண்டும். தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அத்தகைய புரிதலோடு நாம் இந்த களத்தில் கைகோர்த்து நிற்போம். அதைத்தான் இன்றைக்கு மணமக்கள் இருவரும் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டார்கள். பார்ப்ப்பனிய – முதலாளித்துவ பண்பாடுகளை நிராகரித்து, ஜனநாயகப் பண்பாட்டுக் கூறுகளை ஏற்று இல்லறத்தை நாங்கள் நல்லறமாக நடத்துகிறோம் என்று உறுதிமொழி ஏற்றார்கள். நாம் ஒவ்வொருவரும் அப்படி உறுதிமொழி ஏற்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம், களமாட கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இடதுசாரி அரசியல் இம்மண்ணில் செழுமைப்பெற வேண்டும் என்கிற புரிதலோடு கைகோர்த்து நிற்போம் என்பதை சொல்லி மணமக்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
***
தோழர் சு.க.முருகவேல்ராஜன்,
தலைவர், மக்கள் விடுதலைக் கட்சி.
சாதி மறுப்பு மண ஏற்பு செய்து கொள்கிற இணையர்கள் தம்பி ரவி – தங்கை ராதிகா அவர்களுக்கு எனது புரட்சிகர வீரவணக்கத்தை வாழ்த்தாக சமர்ப்பித்து கொள்கிறேன். நானும் சாதி மறுப்பு திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருவன். நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவன். என் துணைவியார் தேவர் சமூகத்தை சார்ந்தவர்.
காதல், மானம், வீரம் ஆகிய மூன்றும் தமிழ் சமூகத்தின் அடிப்படைக் கூறுகள். இரண்டாயிரம் ஆண்டுகளாக அகநானூறும் புறநானூறும் இதை வலியுறுத்தி வருகின்றன.
ஒருபுறம் காசி தமிழ் சங்கம் நடத்துகிறார்கள். ஆனால், கீழடியில் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழனின் தாய் மடியாக இருக்கும் கீழடியின் பெருமையை அங்கீகரிக்க மறுக்கும் சனாதன கும்பல் ஆட்சியில் இருக்கிறது.
நரேந்திர மோடியும் அவர் சார்ந்த கூட்டமும் அம்பேத்கரை கொண்டாடுவது போன்று காட்டிக்கொள்கிறது. அதேசமயம் பட்டியலின மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகிறது. இதேபோல், இஸ்லாமிய, கிறித்துவ மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14, உலகம் கொண்டாடுகிற காதலர் தினத்தின்று பூங்காக்கள், கடற்கரை என காதலர்கள் கூடுகிற இடங்களில் அவர்களை தாக்கக்கூடிய மனித விரோதக் கூட்டம் இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது. சாதியையும் சனாதனத்தையும் மீண்டும் கட்டியெழுப்பி கொண்டிருக்கிறது.
இவ்வேளையில், சாதியையும் சனாதனத்தையும் உடைக்கக்கூடிய சக்தி சாதி மறுப்பு, காதல் திருமணங்களுக்குத்தான் இருக்கிறது என்பதை நடைமுறைப்படுத்தும் வகையிலே இன்று இத்திருமணம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணத்தை ஒரு இயக்கமாக மக்கள் அதிகாரக் கழகம் மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
சாதி, மதம், இனம், மொழி என்கிற அனைத்து வரையறைகளையும் கடந்து மனிதம், மாந்தம், மனிதநேயம் என்பதை உயிர்ப்போடு வைத்திருக்கக்கூடிய சக்தி உலகத்தில் காதலுக்கு மட்டும்தான் உண்டு.
இன்று கவின் போன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆணவப் படுகொலைக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார்கள். ஆணவப்படுகொலை தடுத்துநிறுத்தப்பட வேண்டும் என்று நாமெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டம் இயற்றுவது தொடர்பாக முதலமைச்சர் ஒரு நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளார்.
ஆனால், சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு சட்டம் மட்டும் கொண்டுவரப்பட்டால் போதாது. இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள் சாதிய ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கென்று ஒரு மையத்தை உருவாக்க வேண்டும். சாதி மறுத்து திருமணம் செய்துகொள்ள விரும்புகிற இணையர்களை ஆதரித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து பாதுகாப்பு வழங்குவதற்கு இடதுசாரி – முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











