கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.

2026-2027 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 01.02.2026 அன்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிரமான விளைவுகளை இந்தியா தொடர்ந்து சந்தித்து வருகிறது. அவ்வகையில் 2025ஆம் ஆண்டும் விதிவிலக்கானது அல்ல. தவறான வளர்ச்சித் திட்டங்களால் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் மலைப்பகுதிகளில் எண்ணற்ற நிலச்சரிவுகள் ஏற்பட்டன. குறுகிய நேரத்தில் அதிகபட்ச மழையைக் கொட்டித் தீர்க்கும் நீரிடி நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் கடந்த ஆண்டில் அதிகரித்திருந்தது.

இப்படியான நிலையில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த சில ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கைகளில் பெயரளவுக்காவது காலநிலை மாற்றம் தொடர்பான சில அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இன்று காலநிலை மாற்றம் என்கிற வார்த்தையைக் கூட உச்சரிக்காமல் தனது நிதிநிலை அறிக்கைக்கான உரையை வாசித்து முடித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஜனவரி 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2026-27ல் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் பணிகளுக்கான நிதிப் பற்றாக்குறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருந்தது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தடுக்கவும், தாக்கங்களுக்குத் தகவமைத்துக் கொள்வதற்குமாகத் தேவைப்படும் நிதி (காலநிலை நிதி) போதுமான அளவு கிடைப்பதில்லை எனப் பொருளாதாரா ஆய்வறிக்கை கலவலை தெரிவித்திருந்தது.

“இந்தியாவில் காலநிலை மாற்றத் தாக்கங்களைத் தடுப்பதற்கான நிதியில் 83% மற்றும் தகவமைத்துக் கொள்வதற்கான நிதியில் 98% உள்நாட்டில் இருந்தே பெறப்படுவதாகவும் கிடைக்கக்கூடிய நிதி மற்றும் தேவைகளுக்கு இடையேயான இடைவெளிகள் நீடிக்கின்றன, உள்நாட்டு வளங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது” எனப் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. காலநிலை நிதி குறித்துப் பொருளாதார ஆய்வறிக்கையில் சற்று விரிவாகப் பேசப்பட்டிருந்ததால் நிச்ச்யமாக நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்ச அளவில் ஏதாவது அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை பா.ஜ.க. அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

மேலும் இந்நிதிநிலை அறிக்கையில் மிகவும் ஆபத்தான அம்சம் என்னவெனில் இந்தியாவின் இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்கள் சுரண்டிக்கொள்ள பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதுதான். ஏற்கெனவே அணுக்கனிமம் முதல் அரியவகை முக்கியக் கனிமங்கள் வரை அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் அகழ்ந்தெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கனிமங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஏலமிடும் உரிமையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டது. தமிழ்நாடு அரசு இதனை ஏற்கெனவே எதிர்த்துள்ளது.

கனிமவளச் சுரண்டலுக்குச் சலுகைகள்:

  • அரியவகைக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது, பிரித்தெடுத்தல், ஆய்வுகள், உற்பத்தி மற்றும் அதுசார்ந்த வேலைகளை ஊக்குவிக்கும் வகையில் தாதுக்கள் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரியவகை முக்கியக் கனிமங்களின் இருப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு உண்டாகும் செலவுகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு.

மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளும் தமிழ்நாட்டின் சூழல் பாதுகாப்பை அச்சுறுத்துபவையாகும். அரியவகைக் கனிமங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் இக்கனிமங்களை அகழ்ந்தெடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி லாபமீட்டுவதற்காக நம் மக்கள் நிலவளத்தையும் நீர்வளத்தையும் இழந்து கதிரியக்க அபாயங்களுக்கு ஆளாவார்கள். இவ்வறிவிப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

அணுவுலைக் கட்டுமானங்களுக்கு வரிச்சலுகை:

அணுவுலை மின்சார உற்பத்திக்குத் தேவையான பொருட்கள், சில குறிப்பிட்ட அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கையில் அவற்றுக்கான அடிப்படைச் சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது. இது பா.ஜ.க. அரசு தனியார் முதலாளிகளின் நலனில் மட்டுமே பெரும் அக்கறை கொண்டு நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்திருப்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.

சென்னைக்கான அதிவேக ரயில் வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவும் அறிவிப்போடு நின்றுவிடும் என்கிற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதியையும் புதிய திட்டங்களுக்கான அனுமதியையும் ஒன்றிய அரசு தரவில்லை என்பதையும் இந்நிதிநிலை அறிக்கையிலும் அதற்கான அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பொதிகை மலைப்பகுதியில் மலையேற்றம் மேற்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்படும் எனவும் பழவேற்காடு ஏரியில் பறவைகளைப் பார்ப்பதற்கான வசதிகள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய நதிகளின் பிறப்பிடமாக விளங்கும் பொதிகை மலையை முடிந்த அளவுக்குத் தொந்தரவு செய்யாமல் இருப்பதே சிறந்தது. பொதிகை மலை அடிவாரத்தில் சில பகுதிகளில் கானுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொறுப்பற்ற கானுலாக்களால் காட்டிற்கும் கானுயிர்களுக்குமே அதிகப் பாதிப்பு நேர்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கு மொத்தமாக ரூ. 3,759.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் ரூ 277.85 கோடி மட்டுமே அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு தொடர்பான பணிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ. 1300 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 1091 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிதிதான் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மாசு கட்டுப்பாடு குழுக்கள் மற்றும் தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் ஆகியவற்றின் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் காற்று மாசால் கடும் சுகாதார நெருக்கடி நிலையைச் சந்தித்து வரும் நிலையில் கூடுதலாக இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டதைவிட குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருப்பது பொதுமக்களின் ஆரோக்கியத்தில் பா.ஜ.க. அரசுக்குத்க் துளியும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது.

பா.ஜ.க. அரசே நினைத்தாலும் கூட இதைவிட சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது. மொத்தத்தில் இந்நிதிநிலை அறிக்கை பொதுமக்கள் நலனையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் எவ்வகையிலும் மேம்படுத்துவதாக இல்லை. மாறாகப் பெரு நிறுவனங்கள் மட்டுமே பலனடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

நன்றி: பூவுலகின் நண்பர்கள்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க