அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
பாசிச பா.ஜ.க. மோடி 3.0 ஆட்சியின் முதல் பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் முன்வைக்கப்பட்டுள்ளது. சுமார் 48 லட்சம் கோடி ரூபாய் செலவினத்தைக் கொண்ட பட்ஜெட் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஏற்றத்தாழ்வு, வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் கூறவில்லை. மாறாக, கூட்டணி கட்சியை திருப்திப்படுத்தவும், ஆட்சியை தக்கவைக்கவும் பீகாருக்கும், ஆந்திராவுக்கும் நிதி மழையை பொழிந்துள்ளது. பாசிச மோடி அமித்ஷா கும்பல் அரசு தனக்கு யார் தேவையோ அவர்களுக்கு மட்டும் நிதியை வாரி இறைத்திருக்கிறது.
நாட்டின் வேலையின்மை விகிதம் 9.2 சதவிகிதமாக உள்ளது. இதில், இளைஞர்களிடையே அதிகமாக உள்ளது. பத்தில் எட்டு இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். வேலையின்மை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பதிலாக ஊதிய மானியங்கள் மற்றும் திறன் மேம்பாடு மூலம் தனியார் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையே அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பாக கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம் உள்ளிட்ட சமூக உதவித் திட்டங்கள் வெட்டி சுருக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய வீட்டு உபயோக செலவினக் கணக்கெடுப்பின்படி 56 சதவிகித இந்திய மக்கள் மட்டுமே மூன்று வேளை உணவு உண்பதாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் (67 சதவிகிதம்) மற்றும் பெண்கள் (57 சதவிகிதம்) மத்தியில் இரத்த சோகை பிரச்சனை அபாயகரமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்நிலையில், நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் வாழும் மக்களுக்கு துரோகமிழைத்திருக்கிறது மோடி கும்பல்.
கடந்த பத்தாண்டுகளாக முக்கிய சமூக துறைகளுக்கான நிதியை படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்துள்ளது மோடி அரசு. உணவு மானியத்திற்கான பட்ஜெட் 3.3 சதவிகிதம், சமூக நல நிதி 0.6 சதவிகிதம், கல்வி 1.4 சதவிகிதம். சுகாதாரம் 0.14 சதவிகிதம், உர மானியம் 0.6 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதிய ஒதுக்கீடு 5.05 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு யூரியா மானியம், பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிஎம் கிசான் ஆகியவற்றிற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. MSP C2+50% அடிப்படையில் கொள்முதல் செய்வதை இந்த பட்ஜெட் மூலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
படிக்க: கூடலூர் காட்டுயானை அச்சுறுத்தல்: 14 நாட்களாகத் தொடரும் உண்ணாநிலை போராட்டம்!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும், கார்ப்பரேட்டுக்கு வரிவிதிப்பை அதிகரிக்காமல் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாகக் குறைத்து கார்ப்பரேட் கும்பல் மீதான பாசத்தைக் காட்டியுள்ளது மோடி அரசு.
கடந்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்ப்பரேட்டின் வரி விகிதம் குறைந்து வந்துள்ளது. இதற்கு நேர்மாறாக தனி நபர் மீதான வரி அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் வரியின் பங்கு வெறும் 24 சதவிகிதம் மட்டுமே, தனிநபர் வரி 76சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 7 லட்சம் – 10 லட்சம் வரை சம்பளம் பெறும் சாமானிய மக்களுக்கு 10 சதவிகித வரி, ஆண்டுக்கு 17,000 கோடி வருமானம் வரும் BCCI IPL -க்கு பூஜ்ஜியம் சதவிகித வரி.
சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நீண்டகால கோரிக்கைகளான ஊக்குவிப்பு தொகை, வங்கி வட்டி வீதம் குறைப்பு, ஜாப் ஆர்டர்கள் 5 சதவிகிதமாக குறைப்பு, இயந்திர கொள்முதல் மானியம், மூலப்பொருட்கள் விலை குறைப்பு உள்ளிட்டவை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
யுஜிசி-க்கு 60 சதவிகித நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விளிம்புநிலை மாணவர்கள் பெற்று வந்த பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் கல்வித்திட்டங்களை ஒழித்துக்கட்டியுள்ளது மோடி அரசு. ஏற்கெனவே பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையில், இனி பொது நிதியுதவி பெற்றுவந்த பல்கலைக்கழகங்களின் நிலையை மோசமாக்கியுள்ளது மோடி கும்பல்.
மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா, நவோதயா வித்யாலா, என்.சி.இ.ஆர்.டி, பிஎம் ஸ்ரீ பள்ளிகள், யூனியன் பிரதேசங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நிதியை அதிகமாக ஒதுக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் கல்வி, வேளான்மை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் நிதியை வெட்டி சுருக்கப்பட்டே வந்துள்ளது.
படிக்க: தமிழ்நாடு என்ற சொல் இல்லாத ஒரு பட்ஜெட்!
இந்நிலையில், தங்கத்தின் விலை குறைத்துவிட்டோம், விண்வெளி பொருட்களின் விலை குறைக்கிறோம் என்கிறது பாசிச கும்பல். இதனால் பலனடையப் போவது, பெரும்பான்மை மக்களின் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலைகளே. இருக்கின்ற அரசு துறைகளை எல்லாம் கார்ப்பரேட்மயமாக்குவதற்கான பட்ஜெட்டே இது!
இந்தியாவில் அதிகப்படியான வரியை ஒன்றிய அரசுக்குச் செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அப்படி இருந்தும் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு சிறப்பு நிதி கிடையாது என்றால், தமிழ்நாட்டின் பெயரே பட்ஜெட்டில் இருக்காது என்றால், அதற்கு பெயர் தான் இந்துராஷ்டிரத்தின் முதல் பட்ஜெட். இனி கூட்டாட்சி தத்துவத்தை யாரும் பேச முடியாது என்பதை விளக்கும் ஒற்றை ஆட்சி முறையின் முதல் பட்ஜெட் இது.
பீகார், ஆந்திரா அரசுகள் மோடி அரசின் காலில் விழுந்துகிடப்பது போல் தமிழ்நாடும் இருந்திருந்தால் நிதி கொடுத்திருப்பார்களோ என்னவோ! தமிழ்நாடு மட்டுமல்ல மகாராட்டிரம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்காமல் புறக்கணித்திருக்கிறது மோடி அரசு.
ஆந்திராவுக்கும், பீகாருக்கும் ஒதுக்கப்பட்ட நிதியால் பயனடையப் போவது அங்குள்ள மக்கள் அல்ல; அங்குள்ள கார்ப்பரேட் கும்பல்களே. 2024 ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி கணக்கின்படி, பீகாரிடமிருந்து ரூ. 1,992 கோடியும், தமிழ்நாட்டிலிருந்து ரூ. 12,210 கோடியும் வசூலித்த மோடி அரசு, பட்ஜெட்டில் மட்டும் பீகாருக்கு ரூ. 37,500 கோடியையும், தமிழ்நாட்டிற்கு சொற்பத்தையும் ஒதுக்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை முறையாக வழங்காமல் பொருளாதார ரீதியாக முடக்கி நெருக்கடிக்குள்ளாக்கும் வேலையை செய்கிறது பாசிச மோடி கும்பல்.
அசாம், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு வெள்ளப் பாதிப்புக்காக நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாடு வெள்ளப் பாதிப்புக்கு நிதியை ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது பாசிச மோடி கும்பல்.
தமிழ்நாட்டுக்கு நிதியைக் கொடுக்க இனியும் ஒன்றிய அரசு மறுத்தால், தமிழ்நாட்டில் இருந்து எந்த நிதியும், எந்த வரியும் ஒன்றிய அரசுக்கு செல்லாது என்ற நிலையை உருவாக்கும் நாட்கள் வெகுதூரம் இல்லை என தமிழ்நாடு எச்சரிக்கிறது!
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube