திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் என்.ஆர். கருப்பண்ண நாடார் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரக்ஷித் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்த பின்னர் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குப்பைக் கிடங்கில் போட்டு எரிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 30 ஆம் தேதியன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த ரக்ஷித் குப்பையைக் கொட்டுவதற்குச் சென்றுள்ளார். அப்போது அவரின் சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டிய இரண்டு மாணவர்கள் சாதி வெறியுடன் ரக்ஷித்தைக் கீழே தள்ளி கை கால்களைப் பிடித்து எரிந்து கொண்டிருந்த குப்பையில் தூக்கி வீசியுள்ளனர். வலி தாங்க முடியாமல் மாணவர் அலறி துடித்துள்ளார்.
இதனைக் கேட்டு வந்த ஆசிரியர்கள் ரக்ஷித்தை மீட்டு குன்னத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைகள் மற்றும் முதுகில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அதற்குத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சாதியத் தாக்குதலுக்கு உள்ளான ரக்ஷித்தின் அம்மா கூறுகையில் “என் மகனின் சாதியைச் சொல்லி தீயில் தூக்கி வீசியுள்ளனர். 6 ஆம் வகுப்பு முதலே இரண்டு மாணவர்கள் என் மகனின் நிறம் மற்றும் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி வந்தனர். ஆசிரியர்களும் நீ கருப்பா இருக்கிற, ஊதுபத்தி கலர்ல இருக்கிறன்னு கிண்டல் பண்ணியிருக்காங்க. இதனால மன உலைச்சலுக்கு உள்ளாகி எங்களிடம் சொல்லி பல நாள் அழுதிட்டு இருந்திருக்கிறான். ஆசிரியர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. கேட்டால் அராஜகமாகப் பதிலளிக்கின்றனர். இந்த மாதிரி எந்த பையனுக்கும் நடக்கக் கூடாது. அந்த பையன்கள் மனசுல சாதி நஞ்ச விதைச்சுட்டாங்க. என் மகன் ரொம்ப வருத்தப்படுகிறான்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
படிக்க: கரூர்: சாதி வெறியால் அரசுப் பள்ளி சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்ட கொடூரம்!
பதின்மூன்று வயது மாணவர்கள் சக மாணவரின் சாதி குறித்து இழிவாகப் பேசி சாதி வெறியுடன் எரிந்து கொண்டிருக்கும் தீயில் தூக்கி வீசிய கொடூரம் ஆதிக்க சாதிவெறி பிஞ்சுகளின் மனதில் நஞ்சாக விதைக்கப்பட்டிருப்பதையே வெளிக்காட்டுகிறது.
ஆனால் இக்கொடூரச் சம்பவம் குறித்து “சாதிய பாகுபாட்டால் நடக்கவில்லை. சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவன் தவறுதலாகத் தீயில் விழுந்துவிட்டான்” என்று கூறி தற்செயலாக நிகழ்ந்தது போல பொய்யான விளக்கம் அளித்துள்ளது மாவட்டப் போலீசு.
சமத்துவம், சமூக நீதி என்று மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க அரசு, பள்ளி மாணவர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்தாமல் சாதித் தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பல அரசு உதவி பெறும் பள்ளிகள் சாதிப் பெயருடன் இயங்கி வருகின்றன. ரக்ஷித்தைப் போன்ற மானவர்கள் பலர் சாதிய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.
எனவே, மாணவனைத் தீயில் தூக்கி வீசிய மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களிடையே சாதிய உணர்வு மேலோங்குவதைத் தடுத்து ஜனநாயக உணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர் ரக்ஷித்தை மன ரீதியாகத் துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது பட்டியலின, பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி களப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











