உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!

சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

0

காஷ்மீரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிஷ் கனாய். இவர் குளிர் காலத்தில் உத்தராகண்டில் தங்கி பல ஆண்டுகளாகச் சால்வை விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். குடும்ப வறுமையினால் இந்த வருடம் சால்வை விற்பனைக்காக தன்னுடைய தம்பி தபீஷ் ரஷீத்தையும் உடன் கூட்டிச் சென்றுள்ளார்.

ஜனவரி 28 ஆம் தேதியன்று இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள போண்டா சாஹேப் நகரில் சால்வையை விற்று விட்டுத் தங்கியிருக்கும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர் அப்போது விகாஸ் நகரில் உள்ள கடையில் உணவு சாப்பிடச் சென்றுள்ளனர்.

இவர்களைப் பார்த்த கடைக்காரன் அவர்கள் பற்றி விசாரித்துள்ளான். அவர்கள் “நாங்கள் இஸ்லாமியர்கள்; காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளனர். உடனே வெறிபிடித்த நாயைப் போல கடைக்காரன் இருவரையும் வெளியே போகும்படி கத்தி அவர்களின் பொருட்களையும் வெளியே தூக்கி எரிந்துள்ளான். இருவரும் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கேட்டு கூடிய இரண்டு வெறியர்கள் வெளியே சென்ற சகோதரனைக் கம்பால் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

தனது அண்ணன் தாக்கப்படுவதைத் தடுக்க சென்ற ரஷீத்தை தள்ளிவிட்ட ஒருவன் இரும்பு கம்பியால் கொலைவெறியோடு அவரது தலையில் அடித்துள்ளான் . இக்கொடூரத் தாக்குதலில் ரஷீத்தின் மண்டை உடைந்து ரத்தம் வலிந்ததில் சம்பவ இடத்திலே மயக்கமடைந்துள்ளார். பின்னர் அங்கே திரண்ட மக்கள் அக்கும்பலிடமிருந்து இருவரையும் மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு ரஷீத்தின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன. இடது கையில் எலும்பு முறிவுக்கும் அவரது அண்ணன் காலில் சிறு காயங்களுக்கும் கட்டுகள் போடப்பட்டுள்ளது.

மயக்கநிலையிலிருந்த தனக்குச் சுயநினைவு திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷீத் “தங்களைத் தாக்கிய கும்பல் தங்களிடம் இருந்த 21,000 ரூபாய் பணம் மற்றும் பல ஆயிரம் மதிப்புள்ள 47 சால்வைகளைப் பறித்துக் கொண்டனர். இன்று நாங்கள் தாக்கப்பட்டோம்; நாளை வேறு ஒருவரின் முறை வரும். நாட்டில் உள்ள காஷ்மீரிகளுக்கு இது கிட்டத்தட்ட தினமும் நடந்து வருகிறது. காஷ்மீரிகள் தாக்கப்படுவதற்காகத்தான் இந்த உலகத்திற்கு வந்துள்ளனரா? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது மேலும் தாக்குதல்களைத் தூண்டும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


படிக்க: காஷ்மீர்: புல்டோசர் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்லாமியருக்கு நிலம் கொடுத்த இந்து!


இக்கொடிய தாக்குதலைக் கண்டித்துள்ள காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளன.

டேராடூன் போலீசார் முக்கியக் குற்றவாளியான சஞ்சய் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக காஷ்மீர் பகுதியில் பின்தங்கிய பல குடும்பங்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் குளிர்காலத்தில் பள்ளத்தாக்கினை விட்டு வெளியேறி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களில் காஷ்மீரி சால்வைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்று தங்களின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு, இமாச்சலப்பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் தேரா பகுதியில் காஷ்மீர் சால்வை விற்பனையாளரை காவி கும்பலைச் சேர்ந்த ஒருவன் “பாரத் மாதா கி ஜெய்” என்று முழக்கமிடுமாறு அச்சுறுத்தியுள்ளான். ஆனால் அவர் முழக்கமிட மறுத்ததற்காக அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.

இதனைப் போன்று டிசம்பர் 22- ஆம் தேதியன்று உத்தராகண்டில் காஷ்மீரி சால்வை விற்பனையாளர் ஒருவர் காவி கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒருவன் அவரது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான்.

ஏற்கெனவே, தங்களது சொந்த மாநிலத்தில் பாசிச கும்பலின் தேசவெறித் தாக்குதலுக்கும் அரசின் அடக்குமுறைகளுக்கும் காஷ்மீரி இஸ்லாமியர்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு தங்களது வாழ்வாதாரத்திற்காகச் செல்லும் காஷ்மீரி இஸ்லாமியர்கள் இந்து மதவெறியர்களால் தொடர்ந்து கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு இருமுனைத் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க