மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் மத்தியில் இனவெறியூட்டி குக்கி பழங்குடியின மக்கள் மீதான இன அழிப்பு வன்முறையைத் தூண்டியது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை, வன்முறை ஓயவில்லை.
இக்கலவரத்தை முன்னின்று நடத்திய பா.ஜ.க.-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான பிரேன் சிங் தலைமையிலான அரசு கடந்தாண்டில் மக்கள் எதிர்ப்பால் பதவி விலகியது. அதன் பிறகு அமைக்கப்பட்ட குடியரசு தலைவர் ஆட்சியில் குக்கி போராளிகளிடமிருந்து மட்டும் ஆயுதத்தைப் பறித்து அவர்களை நிராயுதபாணியாக்கி ஒடுக்குவதற்கான சதிகள் அரங்கேறின.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உள்ளது. இந்த அரசிற்கு ஆர்.எஸ்.எஸ்-காரரும் மெய்தி இனத்தவருமான ஒய்.கெம்சந்த் சிங்கை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அரசிற்குக் கண்டனம் தெரிவித்துள்ள “குக்கி மாணவர் அமைப்பு” (KSO), “குக்கி-சோ மக்களின் பார்வையில் இந்த அரசாங்கம் தார்மீகத்தையோ அல்லது அரசியல் சட்டப்பூர்வத் தன்மையையோ கொண்டிருக்கவில்லை. குக்கி மக்கள் தொடர்ந்து இடப்பெயர்வு, பாதுகாப்பின்மை மற்றும் அதிர்ச்சியின் கீழ் வாழ்கின்றனர். பாதிக்கப்பட்ட சமூகத்தின் ஒப்புதல் இல்லாமல் நிர்வாக இயல்புநிலையைத் திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளது.
அதிலும், குக்கி இனத்தைச் சேர்ந்த மூன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) இணைந்து இந்த குக்கி – விரோத அரசை அமைத்திருப்பது குக்கி மக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியுள்ளது. அதிலும், நெம்சா கிப்கென் என்ற எம்.எல்.ஏ. துணை முதல்வராகப் பதவியேற்று பாசிச பா.ஜ.க. கும்பலின் நயவஞ்சக நாடகத்திற்குத் துணைபோயுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தைச் சார்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஏழு பேர் பைரன் சிங் தலைமையிலான அரசில் அங்கம் வகித்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். ஆனாலும், குக்கி மக்கள் மீதான கலவரத்தையும் பாசிச பா.ஜ.க. கும்பலையும் எதிர்த்து குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வந்தனர். கடந்தாண்டில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது குக்கி மக்களுக்கு விரோதமான, அவர்களின் குரலை ஒடுக்குகின்ற இந்த அரசில் பதவியேற்று மூன்று குக்கி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் அம்மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.
படிக்க: மணிப்பூர் கலவரம்: பாலியல் வன்கொடுமையால் மன அதிர்ச்சிக்கு ஆளான இளம்பெண் மரணம்!
ஒன்றிய-மாநில அரசுகள் மணிப்பூரில் தனி நிர்வாகத்தை ஆதரிப்பதற்கு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும் வரை மணிப்பூரில் அரசு அமைப்பதைத் தவிர்க்க வேண்டுமென்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி இம்மூவரும் அரசாங்கத்தில் பங்கேற்றிருப்பதை “குக்கி-சோ கவுன்சில்” (KZO) அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், “மெய்தி ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்தில் இணைவதன் மூலம் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குக்கி-சோ சமூகத்தினர் அனுபவித்த கொடிய வலி மற்றும் மகத்தான தியாகங்களைப் பொருட்படுத்தாமல் நமது எதிரியுடன் திறம்பட இணைந்து கொண்டுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குக்கி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். “ஏழு அமைப்புகளின் கூட்டு மன்றம்” (Joint Forum of Seven – JF7) என்று அமைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், குக்கி மாணவர் அமைப்பு முழு அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. கடந்த மூன்று நாட்களாக நடந்த போராட்டம் இன்று ஓய்ந்திருப்பதாகக் கூறப்பட்டாலும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.
மணிப்பூர் கலவரத்தால் இன வெறுப்பையும் புறக்கணிப்பையும் எதிர்கொண்டுள்ள குக்கி பழங்குடியின மக்கள், புதுச்சேரிக்கு சட்டப்பிரிவு 239 ஏ-வின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேச அங்கீகாரத்தைப் போல தனி நிர்வாகம் வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதுகுறித்து அம்மக்களிடம் விவாதிக்க பாசிச மோடி அரசு தற்போதுவரை முன்வரவில்லை. மாறாக, அம்மக்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதைப் போல, குடியரசு தலைவர் ஆட்சியைக் கலைத்துவிட்டு அரசு அமைத்துள்ளது பா.ஜ.க. கும்பல். இது அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசு என்பது போன்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக குக்கி மற்றும் நாகா இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை துணை முதல்வர்களாக நியமித்துள்ளது. இந்த போலி தோற்றத்திற்குப் பின்னே மணிப்பூர் இனக்கலவரத்தையும் குக்கி மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் மறைக்க முயல்கிறது பாசிச பா.ஜக. கும்பல்.
எனவே, பாசிச கும்பலை எதிர்க்கும் ஒவ்வொருவரும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
![]()
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











