மக்கள் பதிப்பில் மார்க்சிய நூல்கள்: புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் மாபெரும் முன்னெடுப்பு

“மக்கள் பதிப்பில் மார்க்சிய நூல்கள்” என்ற இம்முன்னெடுப்பு, கம்யூனிசத் தத்துவத்தை இன்றைய இளம் தலைமுறையிடம் கொண்டுசெல்லும் நோக்கத்தில், ஜனநாயக சக்திகள், பெருந்திரளான மக்களை இணைத்துக்கொண்டு ஓர் இயக்கமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.

ரண்டாவது ஆண்டாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில், அரங்கு எண்: 277-இல் எமது புதிய ஜனநாயகம் பதிப்பகம் பங்கேற்றது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் இளைஞர்களிடம் முற்போக்கு அரசியலை வெகுவாக கொண்டுசென்ற பதிப்பகமாக எமது பதிப்பகம் விளங்கிற்று. இதற்கு பக்கபலமாக இருந்து எமது பதிப்பகத்திற்கு ஆதரவளித்த ஜனநாயக சக்திகள், இளைஞர்கள், தோழமை பதிப்பகத்தினருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தாண்டும் புத்தகக் கண்காட்சியில் எமது பதிப்பகம் மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம், பெண்ணியம் உள்ளிட்ட முற்போக்கு அரசியல் சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது.

முக்கியமாக, எமது அரங்கின் முகப்பே சாதி ஆணவப் படுகொலைக்குள்ளான கவின், இளவரசன், சங்கர் போன்ற எழுச்சி நாயகர்களின் புகைப்படங்களாலும், “சாதி, மதம் கடந்து காதலிக்க-மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கத்துடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது, புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்த்து எளிதில் கடந்துப்போக முடியாத அனைவரும் எமது அரங்கிற்குள் வந்து புத்தகங்களை பார்வையிட்டும் வாங்கியும் சென்றனர். எழுச்சி நாயகர்களின் புகைப்படங்களுடன் வாசகர்கள் பலரும் சுயபடம் எடுத்துக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளும் தலித் மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கெதிரான அரசியல் நடவடிக்கையாக எமது இந்நடவடிக்கை அமைந்தது. புத்தகக் கண்காட்சியில் ஓர் அரங்கு இத்தகைய அரசியல் உள்ளடக்கத்துடன் பங்கேற்றது எனில், அது எமது பதிப்பகமாகத்தான் இருக்கும்.

மேலும், எமது பதிப்பகத்தின் சமூக வலைத்தளங்களில் புத்தகக் கண்காட்சியையொட்டி பகிரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுங்காணொளிகளும் (Reels) புகைப்படங்களும் இலட்சக்கணக்கான பார்வைகளை பெற்றன. குறிப்பாக, “சாதி, மதம் கடந்து காதலிக்க-மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்க அட்டையை இரு தோழர்கள் கைகளில் பிடித்திருக்கும் குறுங்காணொளி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. இப்பதிவுகளைப் பார்த்து வாசகர்கள் பலரும் எமது பதிப்பகத்தை தேடி வந்தனர்.

முக்கியமாக, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட இயக்குநர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட ஜனநாயக சக்திகள் அரங்கிற்கு வருகை புரிந்து வாழ்த்துகளை தெரிவித்ததுடன், எமது பதிப்பக நூல்களை அறிமுகம் செய்து காணொளிகளை வெளியிட்டனர்.

எமது பதிப்பகத்தின் இளம் தோழர்கள், வாசகர்களின் தேவையை உணர்ந்து முற்போக்கு நூல்களை அவர்களுக்கு அறிமுகம் செய்தனர். முதலில் தனியாக வந்த வாசகர்கள், அடுத்த முறை தங்கள் உறவினர்கள், நண்பர்கள், காதலர்களுடன் வந்து அவர்களுக்கும் நூல்களை அறிமுகம் செய்து வைக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொண்டனர்.

இளம்தோழர்களுடனான அரசியல் உரையாடலால் உற்சாகமடைந்த மருத்துவர் ருத்ரன், “புத்தக விழாவில் இந்த ஆண்டின் ஆரம்பம் இளம் தோழரிடம் தெரிந்த ஆர்வமும் முனைப்பும் நாளைக்கான நம்பிக்கையை ஊட்டும் விதத்தில் அமைந்தது. அவர்களின் அரங்கில் அவர்களுடன் பேசிப்பாருங்கள்” என்று தன்னுடைய முகநூலில் பதிவிட்டு எம்முடைய நடவடிக்கையை அங்கீகரித்தார்.

மேலும், எமது வாசகர்களுக்கு சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளை கொண்டு செல்லும் வகையில் இந்தாண்டு மூன்று முக்கியமான நூல்கள் கொண்டுவரப்பட்டன. முதலாவது, எமது பதிப்பகம் சார்பாக 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, ஜனநாயக சக்திகளிடம் பேராதரவைப் பெற்ற “தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற நூலில் கூடுதலாக சில கட்டுரைகளை இணைத்து இரண்டாவது பதிப்பு கொண்டுவரப்பட்டது. அடுத்ததாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்ட “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்” மற்றும் “சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்” ஆகிய இரு நூல்கள் கொண்டுவரப்பட்டன.

இந்நூல்களை தோழர் ஜெயராணி, எழுத்தாளர், தோழர் சு.அன்பழகன், மருத்துவர் மற்றும் தோழர் சுசில் ராஜ்குமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆகியோர் வெளியிட்டனர். இம்மூன்று நூல்களையும் எமது பதிப்பகத்திற்கு வந்திருந்த வாசகர்களிடம் நூற்றுக்கணக்கில் கொண்டு சேர்த்திருக்கிறோம். சாதி ஆதிக்கத்திற்கு எதிரான, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான உணர்வை இளம் வாசகர்கள் பலரிடம் இந்நூல்கள் விதைத்திருக்கின்றன. அவர்கள் அதனை உணர்வுப்பூர்வமாக தங்களுடைய முகநூலில் பதிவு செய்திருந்தனர்.

இவ்வாறு, புத்தகக் கண்காட்சியை பிரச்சார மேடையாக்கி சாதி ஆதிக்கத்திற்கு, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான அரசியலை எமது பதிப்பகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் இலட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம்; பலரையும் செயல்பாட்டுக்கு தூண்டியிருக்கிறோம்.

அடுத்ததாக, இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவையொட்டி, “கம்யூனிசம் பழகு” என்ற தலைப்பின் கீழ் மார்க்சிய ஆசான்கள், தலைவர்களின் கட்டுரைகளை தனித்தனி சிறு நூல்களாக தரமான தாளில் அச்சிட்டு, சிறப்பு விலையில் கொடுக்கும் வகையில் மூன்று தொகுப்புகளாக வெளியிட்டோம். பொங்கல் விடுமுறை காரணமாக அச்சாக்கம், வடிவமைப்பு பணிகளில் ஏற்பட்ட நெருக்கடி, நிதி மற்றும் ஆள் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை கடந்து, குறுகிய காலத்தில் இப்பெரும் பணியைத் தோழர்களின் கடின உழைப்பினாலும் ஜனநாயக சக்திகளின் ஆதரவினாலும் சாத்தியமாக்கி இருக்கிறோம்.

முதலாவது தொகுப்பில், ஐந்து நூல்கள் இடம்பெற்றிருந்தன. இத்தொகுப்பின் விலை ரூ.125, சிறப்பு விலையாக ரூ.80-க்கு புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டோம்.

இரண்டாவது தொகுப்பில், நான்கு நூல்கள் இடம்பெற்றிருந்தன. இத்தொகுப்பின் விலை ரூ.110, சிறப்பு விலையாக ரூ.80-க்கு வெளியிட்டோம். இந்த இரண்டாவது தொகுப்பை தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், சி.பி.ஐ.(எம்) மற்றும் தோழர் ஆ.கா.சிவா, ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு.) ஆகியோர் வெளியிட்டு உரையாற்றினர்.

மூன்றாவது தொகுப்பு, “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்”, “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” ஆகிய மூன்று மார்க்சியத்தின் அடிப்படை நூல்களை மக்கள் பதிப்பில் ரூ.20-க்கு கொண்டுவந்தோம். இத்தொகுப்பை, தோழர் பாரதி செல்வா, துணைத் தலைவர், சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் தோழர் லெனின் பாரதி, இயக்குநர் ஆகியோர் வெளியிட்டு உரையாற்றினர்.

இம்மூன்று நூல் தொகுப்புகளும் சமூக மாற்றத்தை விரும்பும் சக்திகளிடையே கம்யூனிசம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்துவதாகவும், கம்யூனிச லட்சியத்தை ஏந்திச் செயல்பட்டு கொண்டிருக்கும் தோழர்களுக்கு, தங்களை சிறந்த ஊழியராகவும் தலைவராகவும் வளர்த்துக் கொள்வதற்கான பண்புகளை வரித்துக்கொள்வதற்கான கையேடாகவும் அமையும். மேலும், தமிழ் வாசகர்களுக்கு பெரியளவு அறிமுகமில்லாத சென் யுன், சௌ என் லாய் போன்ற கம்யூனிசத் தலைவர்களையும், அவர்களது எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் இந்நூல்கள் அமையும்.

தமிழில் மார்க்சிய மூல நூல்களை மக்கள் பதிப்பில் கொண்டுவருவதில் சோவியத் யூனியனின் முன்னேற்றப் பதிப்பகத்திற்கு பிறகு எமது முன்னெடுப்பே முதல் முயற்சியாக இருக்கும். “மக்கள் பதிப்பில் மார்க்சிய நூல்கள்” என்ற இம்முன்னெடுப்பு, கம்யூனிசத் தத்துவத்தை இன்றைய இளம் தலைமுறையிடம் கொண்டுசெல்லும் நோக்கத்தில், ஜனநாயக சக்திகள், பெருந்திரளான மக்களை இணைத்துக்கொண்டு ஓர் இயக்கமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.

இன்று, கம்யூனிச, பெரியாரிய, அம்பேத்கரிய, தலித்திய அமைப்புகள், கட்சிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற களப்போராளிகள், மூத்தத் தோழர்கள் பலரும் சோவியத் ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பகத்தின் மார்க்சிய நூல்களை மலிவு விலையில் வாங்கிப் படித்து மார்க்சியத்தின் மீதான ஈடுபாட்டையும் அரசியல் ஈடுபாட்டையும் வளர்த்துக் கொண்டவர்களே ஆவர். அப்படிப்பட்ட ஓர் அலையை, கம்யூனிசத்தின் மீதான ஈர்ப்பை, ஜென்-சி (Gen Z) இளந்தலைமுறையிடம் இவ்வியக்கம் ஏற்படுத்தும்.

அரங்கிற்கு வந்த இளைஞர்கள், “கம்யூனிசத்தை எளிமையாக விளக்கும் இதுபோன்ற சிறு நூல்கள், நம்மாலும் கம்யூனிசத்தைப் படித்து புரிந்துகொள்ள முடியும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது” எனக் கருத்து தெரிவித்து காணொளி வெளியிட்டதே இதற்கு சாட்சி.

அதேபோல், ஜனநாயக சக்திகள் பலரும் எமது முன்னெடுப்பை வரவேற்று அங்கீகரித்தனர். வாசகர்கள் “கம்யூனிசம்  பழகு” நூல் தொகுப்புகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். வாசகர் ஒருவர் தனது மகனுடைய திருமணத்திற்கு 30  தொகுப்புகளை வாங்கிக் கொண்டார். சிலர் நன்கொடை அளித்து, இந்நூல் தொகுப்புகளை வாங்க இயலாதவர்களுக்கு கொடுத்து உதவக் கோரினர்.

இளைஞர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் கிடைத்த இந்த ஆதரவு அம்பேத்கரியம், பெரியாரியம் சார்ந்த முற்போக்கு நூல்களையும் மக்கள் பதிப்பில் கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலை எமக்கு அளித்துள்ளது. ஆனால், பதிப்புத்துறை நெருக்கடியில் இருக்கும் இக்காலத்தில் மக்கள் பதிப்பில் முற்போக்கு நூல்களைக் கொண்டு வருவது மிகுந்த சிரமத்திற்குரிய பணியாகும். அப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றவும் முற்போக்கு கருத்துகளை சமூகத்தில் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்க்கவும் வாசகர்கள், ஜனநாயக சக்திகள், பிற பதிப்பகத்தினர் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்.
97915 59223

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க