ஒடிசா: தலித் பெண் சமையலரைப் புறக்கணிக்கும் ஆதிக்கச் சாதிவெறி

தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும்

0

பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கேந்திரபாரா மாவட்டத்தில் ராஜ்நகர் வட்டத்தில் நுவாகான் என்கிற ஆற்றங்கரை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஏழு தலித் குடும்பங்கள் உட்பட சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள அங்கன்வாடிக்கு உதவியாளர் மற்றும் சமையலராக 23 வயது தலித் பெண் சர்மிஸ்தா சேதி கடந்தாண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதி வெறிபிடித்த கிராம மக்கள், “ஒரு தலித் பெண் தயாரித்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்” என்று கூறி, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர். ஆதிக்கச் சாதியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிராமக் குழுவின் தலைவர், ஆதிக்கச் சாதியினரிடம் தங்கள் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சமூகப் புறக்கணிப்பால் சுமார் மூன்று மாதங்களாக அங்கன்வாடி செயல்படவில்லை. இதனால் ஏறக்குறைய 60 குழந்தைகள் சத்துணவு (வறுத்த பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் மாவு) மற்றும் முட்டைப் போன்ற ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை இழந்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் ஊட்டச்சத்து மற்றும் பிற சேவைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த சாதிய வன்மம் குறித்து பாதிக்கப்பட்ட சர்மிஸ்தா சேதி கூறுகையில், “எனது நியமனத்திற்குப் பிறகு, சில உயர்சாதி கிராமவாசிகள் குழந்தைகளுக்கு சமைக்க வேண்டாம் என்று என்னை எச்சரித்தனர். நான் மறுத்தபோது, அவர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். பெண்கள் கூட மையத்திற்கு வருவதை நிறுத்திவிட்டார்கள்.” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


படிக்க: ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!


ராஜ்நகர் தொகுதியின் தலைமை வளர்ச்சித் திட்ட அலுவலர் தீபாலி மிஸ்ரா கூறுகையில், “பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளை அனுப்பும்படி சமாதானப்படுத்த நாங்கள் முயன்று வருகிறோம். வட்டாட்சியரும் நானும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், பிரச்சினைத் தீர்க்கப்படாமல் உள்ளது” என்று அலட்சியமாகத் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி, சமீபத்தில் நுவாகோன் கிராமத்திற்குச் சென்ற தலித் தலைவர்கள் குழு, குழந்தைகள் மற்றும் பெண்கள் அங்கன்வாடி மையத்திற்கு வருவதைத் தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரினர். தலித் சமாஜின் மாவட்டத் தலைவர் நாகேன் ஜெனா, மதிய உணவுத் திட்டங்களில் சமையலர் பணிக்கு பட்டியல்-பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று “பி.யூ.சி.எல். எதிர் இந்திய அரசு” வழக்கில் 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை மேற்கோள் காட்டினார்.

இதன் பிறகு, மாவட்ட சமூக நல அலுவலருக்கு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த கேந்திரபாரா மாவட்ட ஆட்சியர் ரகுராம் ஆர்.ஐயர், “அறிக்கையைப் பெற்ற பிறகு, குழந்தைகள் மற்றும் பெண்கள் அங்கன்வாடி மையத்திற்குச் செல்வதைச் சட்டவிரோதமாகத் தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராம மக்களுடன் கலந்துரையாடி இந்த விடயத்தை சுமுகமாகத் தீர்க்கவும் நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும். ஆனால், அத்தகையோர் மீது தற்போது வரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, தலைமை வளர்ச்சித் திட்ட அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அரசுக் கட்டமைப்பு முழுவதுமே பிரச்சினையை ‘சுமுகமான முறையில்’ தீர்க்கிறோம் என்ற பெயரில் மாதக்கணக்கில் பிரச்சினையை இழுத்தடித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணை வஞ்சித்து வருகிறது.

2024-ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள ஒடிசாவில் தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதலும் தீண்டாமையும் தீவிரமடைந்து வருவதையே இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது.

நாடு முழுவதும் விவாதப் பொருளானதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களாக நீடித்த இப்பிரச்சினை இன்று (பிப்ரவரி 16, 2026) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ‘உயர்’ சாதி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மையத்திற்குத் திரும்பி, தலித் பெண் சமையலர் சமைத்த உணவை உட்கொண்டனர்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க