“ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் 13-2-2026 அன்று மாலை 4:30 மணிக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், சி.பி.ஐ(எம்-எல்) ரெட் ஸ்டார் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் கோவை போத்தனூர் சாலை பிஸி ஃபுட் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது
இக்கருத்தரங்கத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையேற்றார். தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் துரை அசோகன், பி.யு.சி.எல்-இன் கோவை மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், தமிழ்த்தேச இறையாண்மையைச் சேர்ந்த தோழர் திருமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் காவேரி வரவேற்புரை ஆற்றினார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தலித் விடுதலைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செங்கோட்டையன், வெல்ஃபர் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் பழனி பாரூக், வழக்கறிஞர் ப.பா.மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளர் ச.பாலமுருகன், கோவை இசுலாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சபீர் அலி, மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் மாறன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அருண்சோரி, சி.பி.ஐ(எம்-எல்) ரெட் ஸ்டாரின் மத்திய கமிட்டி உறுப்பினர் என்.பி.குமார், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சார்ந்த பார்த்திபன் உள்ளிட்ட தோழர்களும் சிறைப்பட்டோரின் உறவினர்கள் திருமதி ஜன்னத்துல் பிர்தௌஸ், திருமதி ஜெரீனா ஆகியோரும் உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரக் கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் நன்றியுரையாற்றினார்.

இக்கருத்தரங்கம் மிகுந்த எழுச்சியுடன் அரங்கம் நிறைந்தபடி நடைபெற்றது. சிறைப்பட்டோர் பற்றிய சிறு குறிப்புடன் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தின் வாயிலாக இதில் பங்குபெற்ற பல்வேறு அமைப்புகளும் சனநாயக சக்திகளும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தன.
- பீமா கோரேகான் வழக்கு, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்ட வழக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு, ஹிஸ்புட்-தெஹ்-ரீர் வழக்கு உள்ளிட்ட அனைத்து ஊபா (UAPA) வழக்குகளிலும் சிறைப்பட்டிருப்போரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
- ஊபா (UAPA) பிரிவுகளின் கீழ் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும்.
- ஊபா (UAPA) சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமையைக் (NIA) கலைக்க வேண்டும்.
- அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தமது தேர்தல் அறிக்கைகளில் இக்கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











