கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி அன்று அசாம் பா.ஜ.க. கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட 17 வினாடி நீள காணொளி ஒன்று பதிவிடப்பட்டது. அக்காணொளியில், இரண்டு இஸ்லாமிய ஆண்களின் (தொப்பி மற்றும் தாடி கொண்ட) படங்களை அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா துப்பாக்கியால் சுடுவது போன்ற அசல் காட்சி இடம்பெற்றிருந்தது.
மேலும், அக்காணொளியில், “வெளிநாட்டினர் இல்லாத அசாம்”, “இரக்கம் கிடையாது”, “ஏன் வங்கதேசத்திற்குச் செல்லவில்லை”, “வங்கதேசிகளுக்கு மன்னிப்பில்லை” போன்ற இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டுகின்ற, இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கின்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இக்காணொளி வெளியாகி, இஸ்லாமிய மக்களிடையே, குறிப்பாக அசாம் மாநிலத்தில் வங்க மொழி இஸ்லாமிய மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. இது இனப்படுகொலைக்கு அழைப்பு செயல் என்று அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, அசாம் பா.ஜ.க. எந்தவித விளக்கமோ வருத்தமோ தெரிவிக்காமல் நீக்கியது. ஹிமந்தா பிஸ்வா சர்மாவோ, அக்காணொளியைத் தான் பதிவிடவில்லை என்றும் அதனால் அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அசாம் முதல்வர் அசாமில் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் மீது தொடர்ச்சியாக வெறுப்பைக் கக்கி வருகிறார். அவர்களை ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்று குறிப்பிட்டு இந்து மதவெறியர்களுக்கு மதவெறியை ஊட்டினார். கடந்த ஜனவரி 27 அன்று “மியாக்களை துன்புறுத்துவது என் வேலை” என்று வெளிப்படையாக மதவெறுப்பை கக்கினார். “ரிக்ஷாவில் ரூ.5 கட்டணம் என்றால் ரூ.4 கொடுங்கள். துன்பம் அனுபவித்தால் அவர்கள் (இஸ்லாமியர்கள்) அசாமை விட்டுச் செல்வார்கள்” என்று இஸ்லாமியர்கள் மீதான பொருளாதார தாக்குதலுக்கு அழைப்பு விடுத்தார். அதே நாளில், “4-5 லட்சம் மியா வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். பா.ஜ.க. தொண்டர்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று கூறி தடுப்பு முகாம்களில் அடைத்து வருகிறார். இவையெல்லாம், அசாம் மாநிலத்தில் வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் மீதான இனப்படுகொலைக்கான தயாரிப்பு நடந்து வருவதையே காட்டுகிறது. அதற்கு அழைப்பு விடுப்பதாகவே மேற்கண்ட காணொளியையும் பார்க்க வேண்டியுள்ளது.
படிக்க: அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!
இதனையடுத்து, ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது அரசியலமைப்பு பிரிவு 32-இன் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த அன்னி ராஜா மற்றும் அசாமை சார்ந்த நால்வர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 16 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித பொறுப்புணர்ச்சியுமின்றி, “இந்த மனு அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு என்ன தடை? உயர்நீதிமன்றமும் அரசியல் களமாகிவிட்டது என்று சொல்கிறீர்களா?” என்று பிரச்சினையை அப்பட்டமாகத் திசை திருப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “இது தீவிர அரசியலமைப்பு கேள்விகளை உள்ளடக்கியது” என்றும் “அசாம் முதலமைச்சருக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க வேண்டும். முதலமைச்சர் நாட்டின் அரசியலமைப்பு நெறிமுறைகளைக் குலைக்கிறார். அவர் மீது இதுவரை எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் ஹிமந்தா பிஸ்வா சர்மா வகிக்கும் பதவியையும் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் நேரடியாகத் தலையிட வேண்டும்” என்றும் வாதிட்டார்.
அதற்கு “உயர்நீதிமன்றத்தால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க முடியாதா?” என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, “உயர்நீதிமன்றங்கள் இதற்கு முழு அதிகாரம் கொண்டவை. பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம் அது ஒரு அரசியல் போர்க்களமாக மாறி வருகிறது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான போக்கு. அனைத்து கட்சிகளுக்கும் சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் அரசியலமைப்பு ஒழுக்கத்தின் படி செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பிரச்சினையைக் கைகழுவிவிட்டு வகுப்பெடுத்தார்.
மேலும், “இப்பிரச்சினையை உயர்நீதிமன்றமே திறம்பட விசாரிக்க முடியும். இந்த மனுவை ஏற்க எந்த காரணமும் இல்லை” என்று கூறி மனுக்களை நிராகரித்து ஹிமந்தா பிஸ்வா சர்மாவை பாதுகாத்துள்ளது, உச்சநீதிமன்றம்.
வழக்கறிஞர் சிங்வி அசாமுக்கு வெளியே உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்கக் கோரியபோது, “உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு விசயமும் இங்குதான் வருகிறது. முழு முயற்சியும் உயர்நீதிமன்றத்தின் மன உறுதியைக் குலைப்பதாகும்” என்று கூறி, கௌஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விரைவான விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இவ்வழக்கை இழுத்தடித்து ஹிமந்தாவை பாதுகாக்கும் சதியன்றி வேறில்லை.
முக்கியமாக, பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களில் நடப்பதைப் போன்று, அசாமில் வாழ்ந்துவரும் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களும் ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்று பொய் குற்றம் சுமத்தப்பட்டு பாசிசக் கும்பலினால் வங்கதேசத்தில் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களின் சொத்துக்கள் காவி கும்பலினால் சூறையாடப்பட்டு வருகின்றன. அம்மக்கள் காவி கும்பலினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை, இனப்படுகொலைக்கான தயாரிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது பாசிச கும்பல். உச்சநீதிமன்றமோ அதற்குத் துணைபோகிறது.
எனவே, ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்; ஹிமந்தா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து, அசாமின் இஸ்லாமிய மக்களைப் பாதுகாக்க புரட்சிகர – ஜனநாயக சக்திகள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










