ரமலான் அன்றும் தொடரும் இஸ்ரேலின் இனவெறி படுகொலைகள்!

ரஃபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது முன்னறிவிப்பின்றி வான்வழித் தாக்குதலை இனவெறி இஸ்ரேல் நடத்தியது. தாக்குதலில் குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மார்ச் 30 அன்று காசா மக்கள் ஈத் அல் பித்ர் (ரமலான்) கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். திடீரென்று இனவெறி இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி 64 பேரைப் படுகொலை செய்துள்ளது.

காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை வீழ்த்த முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் நெருக்கடியில் தள்ளப்பட்டது. ஜனவரி 19 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. இரு தரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். மார்ச் 2 ஆம் தேதி அன்று ஆறு வாரக் கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்த உடனேயே இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மறுத்து வந்தது. ஆனால் சிறையில் உள்ள அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று நயவஞ்சக முறையில் ஹமாசை வலியுறுத்தியது. ஆனால் ஹமாஸ் முற்றிலுமாக அதனை நிராகரித்து விட்டது.

அதன் காரணமாக காசாவிற்குள் செல்லக்கூடிய நிவாரணப் பொருட்களைத் தடுத்து நிறுத்துவது, சுகாதாரப் பணியாளர்களைப் படுகொலை செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 18 ஆம் தேதி அதிகாலை முன்னறிவிப்பின்றி காசா மீது கொடூரத் தாக்குதலை நடத்தி 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்தது. மறுபுறம் காசாவிற்குள் செல்லக்கூடிய நிவாரண வாகனங்களைத் தடுத்து பட்டினி மூலமாக ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (30.03.2025) காசா மக்கள் ரமலான் நோன்பு மாதத்தின் இறுதி நாளான ரமலான் பண்டிகையை இடிபாடுகளுக்கு நடுவே தொழுகை நடத்தியும், புது ஆடைகளை அணிந்தும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இனவெறி இஸ்ரேல் காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது முன்னறிவிப்பின்றி வான்வழித் தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


படிக்க: போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை


மக்கள் பட்டினியில் வாடுவதை நேரில் கண்ட அல்ஜசிராவின் செய்தி தொடர்பாளர் ஹிந்த் கௌதரி ”பாலஸ்தீனர்கள் ஈத் பண்டிகையன்று நல்ல உணவை உண்டு தங்கள் நோன்பை முடிக்க வேண்டும். ஆனால் இன்று அவர்களால் ஒரு வேளை உணவைக் கூடப் பெற முடியாத மோசமான நிலை உள்ளது” என்று கூறினார்.

மேலும் ”இந்தப் பகுதியில் உணவுப் பற்றாக்குறையும் அதற்கான விலையும் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிப்பது சாத்தியமற்ற பணி” என்று அவர் கூறியுள்ளார். இது காசா மக்களின் துயர நிலையை உணர்த்துகிறது.

இஸ்ரேலின் படுகொலையைக் கண்டித்துள்ள ஹமாஸ் “பண்டிகை உடையில் உள்ள குழந்தைகள், பொதுமக்களை இஸ்ரேல் கொல்வதை ஹமாஸ் கண்டிக்கிறது. இது இஸ்ரேலின் பாசிசத்தையும் அனைத்து விதமான மனித விழுமியங்களும் மறுக்கப்படுவதையும் காட்டுகிறது” என்று கூறியுள்ளது.

பாலஸ்தீன குழு தன்னுடைய அறிக்கையில் “இந்த ஆண்டு, காசா பகுதி, மேற்கு கரை மற்றும் அல்-குத்ஸ் (Al-Quds) பகுதிகளில் உள்ள நமது பாலஸ்தீன மக்கள் முற்றுகை, பட்டினி, கொலை மற்றும் அழிவுக்கு மத்தியில், வெட்கக்கேடான சர்வதேச மௌனம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு நிபந்தனையற்ற அமெரிக்க ஆதரவின் கீழ் மிருகத்தனமான சியோனிச ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் போது, ​​ஈத் அல்-பித்ர் வந்துள்ளது” என்று சர்வதேச நாடுகளின் போலித்தனத்தினை விமர்சித்துள்ளது.


படிக்க: காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்


படுகொலைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அதன் தலைவர்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பின் உறுதியையும் மக்களின் போராட்டத்தையும் கண்டு அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்பின் “தன்னார்வ குடியேற்ற திட்டத்தை” இஸ்ரேல் செயல்படுத்தும் என்றும் ஹமாஸ் அமைப்பிற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க தனது அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது என்றும் பாலஸ்தீன மக்களுக்கு விரோதமாகப் பேசியுள்ளார்.

இனவெறி இஸ்ரேல் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று காசா மீது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து 29 ஆம் தேதிவரை குறைந்தது 921 மக்களைப் படுகொலை செய்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெதன்யாகுவின் தாக்குதலுக்கு எதிராக உள்நாட்டிலேயே எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. மக்கள் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் காசா மக்கள் தங்களின் சுதந்திர பாலஸ்தீனத்துக்காக உறுதியுடன் நிற்கின்றனர். இஸ்ரேலுக்கு எதிராகவும், காசா மக்களுக்கு ஆதரவாகவும் நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதன் மூலமே இனவெறி இஸ்ரேலைப் பணிய வைக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க