இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!

ஏப்ரல் 6-ஆம் தேதி சைத்ர இராம நவமி அன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடவும், ஒன்பது நாள் திருவிழாவின் போது மதத் தலங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் பாசிச யோகி அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

ராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!
கலவரத்திற்கு ஆயத்தமாகும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்!

த்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு இராம நவமியை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 6) மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேர இராமசரிதமானஸ் (இராமனைப் பற்றிய மத புத்தகம்) ஓதுதலை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், ஏப்ரல் 6-ஆம் தேதி சைத்ர இராம நவமி அன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடவும், ஒன்பது நாள் திருவிழாவின் போது மதத் தலங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் பாசிச யோகி அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

சைத்ர நவராத்திரியின் போது மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோயில்களுக்கு அருகில் முட்டை அல்லது இறைச்சிக் கடைகள் மற்றும் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது என்றும் சட்டவிரோதமாக இறைச்சி வெட்டுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாசிச கும்பலின் சதித்திட்டத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட உத்தரப்பிரதேச நகராட்சி சட்டம், 1959 மற்றும் 2006 & 2011 உணவு பாதுகாப்பு சட்டங்களின் கீழ், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மேற்கோள்காட்டி, “மதத் தலங்களுக்கு அருகில் சட்டவிரோதமாக விலங்குகளை வெட்டுவது மற்றும் இறைச்சி விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்படும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் போலீசுத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, போக்குவரத்துத் துறை, தொழிலாளர் துறை, சுகாதாரத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.


படிக்க: நாக்பூர்: நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் பாசிச பி.ஜே.பி!


மேலும், கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று, நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜத், அனைத்து மாவட்ட நீதிபதிகள், போலீசுதுறை ஆணையர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டார். இந்நடவடிக்கையானது ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் – பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலும் சிறுபான்மையினருக்கு எதிரான மதவெறி வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதைக் காட்டுகின்றது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் ஆண்டுதோறும் இராமநவமியின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிரான விசம மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஊர்வலம் என்ற பெயரில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டும், மதவெறிக் கோஷங்களை இட்டுக்கொண்டும் கலவரத்தை நடத்துவதை வாடிக்கையாக்கியுள்ளது. இந்தக் கலவரங்களைத் திட்டமிட்டபடி நடத்த ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்-யின் பல கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம் அரசின் அனைத்து நிர்வாக துறைகளிலும் சங்கிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் கிளை அமைப்புகளைத் தடை செய்யாமல் ஒருபோதும் கலவரத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.

இந்துக்களின் பண்டிகை என்கிற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் தனது குண்டர் படையை வைத்து இந்துத்துவ மதவெறி உணர்வு ஊட்டுவதையும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதக் கலவரத்தைத் தூண்டுவதையும் தடுத்துநிறுத்த வேண்டுமானால், இந்த பாசிச குண்டர் படைக்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொள்வதும், உள்ளூர் அளவிலான போராட்டக் கமிட்டிகளை கட்டியமைப்பதும் முக்கியமான பணியாகும். குறிப்பாக வட மாநிலங்களில் இந்துக்களின் பண்டிகையின் போது அதிக அளவிலான கலவரங்கள் நடப்பதைத் தடுக்க ஜனநாயக சக்திகள், இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க