நீட் தேர்வு: மாணவர்கள் பலியும், தி.மு.க அரசின் துரோகமும்!

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது.

ஜூன் 13 ஆம் தேதி அன்று சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராகுல் தர்ஷன் நீட் தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புகலீஸ்வரன் – நாகஜோதி தம்பதியினர். இவர்களுக்கு திலக் தர்ஷன், ராகுல் தர்ஷன் என்ற இரு மகன்கள் உள்ளனர். புகலீஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் திலக் தர்ஷன் பி. காம் படித்து வருகிறார். ராகுல் தர்ஷன் கடந்த ஆண்டு சிவகங்கையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

பின்னர் மருத்துவராக வேண்டும் என்கிற கனவோடு மதுரையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து .நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவடைந்த பின்பு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள தனது பெரியப்பாவான அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசாமி வீட்டில் தனது அண்ணனுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியானது. அன்று முதல் ராகுல் தர்ஷன் கடும் மன உலைச்சலில் இருந்துவந்துள்ளார். ஜூன் 13 இரவு அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாகத் தூங்கியுள்ளனர். திலக் தர்ஷன் கண்விழித்துப் பார்த்து போது ராகுல் தர்ஷன் இல்லாததைக் கண்டவுடன் வீடு முழுக்க தேடியுள்ளார். பின்னர் மாடியில் உள்ள அறைக்குச் சென்று பார்த்த போது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து மாணவனின் உடல் சொந்த ஊரான செம்பனூர்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தோல்வி பயத்தால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிற்றுக்கு மீண்டும் ஒரு மாணவர் பலி!


இந்நிலையில், ஜூன் 15 அன்று நீட் தேர்வு குறித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகையில் ”நீட் தேர்வை ரத்து செய்வதற்கு நாங்கள் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் உள்ள நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு நாங்கள் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் உள்ள நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு 104 என்ற உதவி எண் மூலம் நாளை முதல் மனநல ஆலோசனை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு எதிரான தி.மு.க அரசின் துரோகத்தனம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

பாசிச மோடி அரசானது நீட் தேர்வை ரத்து செய்யாமல் தொடர்ந்து மாணவர்களைப் படுகொலை செய்துகொண்டிருக்கிறது. மறுபுறம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது.

வெறும் சட்டப் போராட்டத்தின் மூலம் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்துவிட முடியாது. மாணவர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் வகையிலான மக்களின் களப் போராட்டங்களின் மூலமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க